india

img

தில்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம் இன்று துவங்குகிறது....

புதுதில்லி:
மூன்று கொடிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி எட்டு மாத காலமாக போராடி வரும் விவசாயிகளுடன், தில்லி போராட்டக் களத்தில் தமிழக விவசாயிகளும் நேரடியாக இன்று முதல் (ஆக.5) ஒரு வார காலத்திற்கு பங்கேற்கிறார்கள். 
இதுதொடர்பாக தில்லியில் புதனன்று செய்தியாளர்களிடம் அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவர் அசோக் தாவ்லே, பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா, இணைச் செயலாளர் விஜூ கிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொருளாளர் கே.பி.பெருமாள், மாநில செயலாளர் அ.விஜயமுருகன் ஆகியோர் பேசினர். அப்போது, “தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்திலும் எழுச்சிமிகு போராட்டம் நடந்துள் ளது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடுவிவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்னையிலிருந்து ரயில்மூலம் புறப்பட்டு வியாழனன்று தில்லியை அடைகிறார்கள். சங்கத்தின் தலைவர்கள் பெ.சண்முகம், வி.சுப்பிரமணியன், டி.ரவீந்திரன் உள்ளிட்டோர் தலைமையில் வரும் அந்த விவசாயிகள் தில்லி ரயில்நிலையத்திலிருந்து, நாடாளுமன்ற வீதியான ஜந்தர் மந்தர் வரையில் தமிழக கலாச்சார உடையில் எழுச்சிமிகு முழக்கமிட்டு பேரணியாக வந்து, போராட்டக்களத்தில் சங்கமிக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

வியாழனன்று ஜந்தர்மந்தரில் எழுச்சிமிகு போராட்டத்தை நடத்தும் தமிழக விவசாயிகள், அதைத் தொடர்ந்து சிங்கு எல்லையில் 8 மாதக்காலமாக போராடி வரும் விவசாயிகளுடன் இணைந்து கொள்கிறார்கள் என்றும் ஹன்னன் முல்லா தெரிவித்தார்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொருளாளர் கே.பி.பெருமாள் கூறுகையில், “மூன்று வேளாண் சட்டங்கள்மற்றும் மின்சார சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என வலியுறுத்துவதோடு, மேகதாது அணை விவகாரத்தையும் ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக தமிழ்நாடு விவசாயிகளின் தில்லி போராட்டப் பயணம் அமைகிறது” என்றார்.

“மேகதாது அணை பிரச்சனையில், ஒன்றிய அரசு, இதில் சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களுடன் சுமுகமாக நிலையை எட்டும் விதத்தில் செயல்பட வேண்டும். மாறாக, ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்கு மட்டும் ஆதரவாக செயல்படுவது சரியல்ல. காவிரிநடுவர் மன்றத்தின் தீர்ப்புகளின் அடிப்படையில் உறுதி செய்யப் பட்டுள்ள தமிழகத்தின் தண்ணீர் உரிமை எந்தவிதத்திலும் பறிக்கப் படக் கூடாது” என்றும் அவர் வலியுறுத்தினார்.மேலும், “கரும்பு விவசாயிகளுக்கு மாநில அரசின் பரிந்துரை விலை பாக்கி மட்டும் சுமார் ரூ.2,200 கோடி நிலுவையில் உள்ளது. கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் குறைந்தபட்ச விலை அளிக்க வேண்டும் என்றஎம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரையும் அமலாக்கப்படவில்லை. இந்த பிரச்சனைகளையும் வலியுறுத்தி தமிழக விவசாயிகளின் தில்லி போராட்டம் நடைபெறுகிறது” என்றும் கே.பி.பெருமாள் தெரிவித்தார்.

இந்த செய்தி தொகுப்பு 1 மற்றும் 5ஆம் பக்கம் என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. தோழர்கள் தொடர்ந்து படிக்கும் வசதிக்காக ஒரே தொகுப்பாக உள்ளது.