புதுதில்லி:
மக்களை ஏமாற்றிப் பிளவுபடுத்த முயற்சிக்க வேண்டாம் என்றும், வேளாண்சட்டங்களை ரத்து செய்துவிட்டு பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு கூறியுள்ளது. இது தொடர்பாக அது வேளாண் அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளது.
இது தொடர்பாக அகில இந்திய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் விவரமான கடிதம் ஒன்று, மத்திய வேளாண் அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இதில், இந்தச் சட்டங்கள் மூலமாக கார்ப்பரேட்டுகள், வேளாண் உற்பத்திப் பொருள்களை வர்த்தகரீதியாகப் பயன்படுத்துவதற்கும், விவசாயிகளை ஒப்பந்த அடிப்படையில் நியமித்துக்கொள்வதற்கும், விவசாயப் பொருள்களை சேமித்து, கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்கும் எப்படியெல்லாம் சட்டப்பூர்வமாக உரிமைகள் பெறுவார்கள் என்பது அரசாங்கத் திற்குத் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
திரித்துக் கூறும் மத்திய அரசு
மத்திய வேளாண் அமைச்சர் இவை யெல்லாவற்றையும் வேண்டுமென்றே திரித்துக் கூறிக்கொண்டிருக்கிறார். அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின்ஒருங்கிணைப்புக்குழுவும் இதர சங்கங்களும் அரசாங்கத்திற்கு அனுப்பிய லட்சக்கணக்கான மனுக்கள் அரசாங்கத் தால் கண்டுகொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டன. விவசாயிகள் தில்லிக்குப் பேரணியாக வந்தபின்பும், அரசாங்கம் விவசாய சங்கத் தலைவர்களிடம் சட்டங்களில் உள்ள ஒவ்வொரு பிரிவு குறித்தும் விளக்கம் கேட்டது. இதுதொடர்பாக அவர்கள், நாட்டில் உள்ள விவசாய நிலங்களும், விவசாயிகளின் வாழ்வாதாரங்களும் காப்பாற்றப்பட வேண்டுமானால், மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என்றுஒருமனதாக முடிவு செய்து, அரசாங்கத்திடம் தெரிவித்தனர். ஆனாலும் அரசாங்கம் எட்டு பிரச்சனைகளை மட்டும் எடுத்துக்கொண்டு, இதுதான் பிரதான பிரச்சனைகள் என்று கூறிக் கொண்டிருக்கிறது.
கார்ப்பரேட்டுகளுடன் விவசாயிகளை மோத விடுவதா?
கார்ப்பரேட் கம்பெனிகள் உலகம் முழுதும் சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளிட மிருந்து விவசாய நிலங்களைப் பறித்திட முயற்சித்துக் கொண்டிருக்கின்றன என்றும் இது விவசாயிகளை பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுடன் மோத வைத்திருக்கிறது என்றும், இதில் அரசாங்கம் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக சேவை செய்து கொண்டிருக்கிறது என்றும் அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு கூறியிருக்கிறது. இதனால்தான் இந்தியாவில் இப்போது நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு உலக அளவில் ஆதரவு பெருகிக் கொண்டிருக்கிறது. இதற்கு ஆதரவாக ஏற்கனவே 82 நாடுகளில் உள்ள விவசாயிகள் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கின்றனர்.செவ்வாயன்று மும்பையில் அம்பானி மற்றும் அதானியின் அலுவலகங்களுக்கு முன் விவசாயிகள் பெரும் திரள் கிளர்ச்சிப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதில் பஞ்சாப் விவசாய சங்கத் தலைவர்கள் உரையாற்றுகிறார்கள்.
சர்வாதிகாரமாகப் பேசும் பிரதமர்
பிரதமர் மோடி விவசாயிகளின் கோரிக்கைகளை நிராகரித்து, விவசாய சீர்திருத்தங்களைத் தான் அமல்படுத்து வதை எவரும் தடுத்திட முடியாது என்று சர்வாதிகாரமுறையில் வார்த்தைகளைப் பிரயோகித்திருப்பதனை அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு கடுமையாக விமர்சிக்கிறது. கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் ஈட்டும் விதத்திலும் விவசாயிகளின் வாழ்வைச் சூறையாடும்விதத்திலும் அவர் பேசிக்கொண்டிருக்கிறார் என்பதை அனைத்து விவசாயிகளும் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
அடக்குமுறையை ஏவிடும் பாஜக அரசுகள்
ஹரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் போராடும் விவசாயிகளுக்கு எதிராக அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ள மாநில பாஜக அரசாங்கங்களை, அகில இந்திய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு கண்டனம்செய்கிறது. ஹரியானாவில் கருப்புக்கொடி காட்டிய விவசாயிகள், கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டவிவசாயிகள் கைது செய்யப்பட்டி ருக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் பொய் வழக்குகளைப் புனைந்து முன்னணிவிவசாயிகள் கைது செய்யப்பட்டிருக் கிறார்கள். உ.பி. மாநிலத்தில் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு 1868 ரூபாயாக இருக்கின்ற அதே சமயத்தில், அங்கே விவசாயிகளிடமிருந்து வெறும் 1000 ரூபாய் என்ற விதத்தில் நெல் கொள்முதல் செய்யப்படும் அநியாயம் நடந்து கொண்டி ருக்கிறது.இவ்வாறு அகில இந்திய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு அறிக்கையில் கூறியுள்ளது. (ந.நி.)