புதுதில்லி:
பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்கள், டுவிட்டர் சமூகவலைத்தளத்தைப் பயன்படுத்தி, விவசாயிகள் போராட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்புவதாகவும், அவ்வாறு செய்யும் 1,178 டுவிட்டர் கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் உடனடியாக முடக்க வேண்டும் என்று மத்திய பாஜக அரசு கூறியிருந்தது.
குறிப்பாக, விவசாயிகளை ‘இனப்படுகொலை செய்ய பிரதமர் மோடி திட்டம்’ (#ModiPlanningFarmerGenocide) என்ற ஹேஷ்டேக்கை அகற்ற வேண்டும் என்று அவசர உத்தரவு பிறப்பித்தது.ஆனால், கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதே தங்களின் கொள்கை என்றும், இவ்விஷயத்தில் இந்திய அரசுடன் ஒத்துப்போக முடியும் என்று நாங்கள் நம்பவில்லைஎன்றும் டுவிட்டர் நிறுவனம் பதிலளித்தது. மேலும், இந்திய அரசு பட்டியலிட்ட 1,178 கணக்குகளையும் முடக்க முடியாது என்றதுடன், செய்தி ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரின் கணக்குகளைத் தவிர்த்து, சுமார் 583 கணக்குகளை மட்டும் இந்தியாவுக்குள் நிறுத்தி வைக்கிறோம் என்று கூறியது.
டுவிட்டர் நிறுவனத்தின் இந்தப் பதில், மோடி அரசை தற்போது ஆத்திரமடையச் செய்துள்ளது.டுவிட்டர் நிறுவனம் 583 கணக்குகளை நிறுத்தி வைத்துள்ளதாக கூறினாலும், உண்மையில் அதன் எண்ணிக்கை 126 மட்டும்தான் என்றும், அவற்றிலும் தாங்கள் குறிப்பிட்டுச் சொன்ன கேரவன் பத்திரிகை ((@thecaravanindia), சிபிஎம் தலைவர் முகமது சலீம் (@salimdotcomrade), ஆர்வலர் ஹன்ஸ்ராஜ் மீனா (@HansrajMeena), கிசான் ஏக்தா மோர்ச்சா (@Kisanektamorcha) மற்றும் பி.கே. ஏக்தா உர்கஹான் (@Bkuektaugrahan) ஆகியோரின் கணக்குகளை முடக்கவில்லை என்று பாஜக அரசு கொதித்துள்ளது.“டுவிட்டர் நிறுவனம் உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டும். இது பேச்சுவார்த்தைக்கு உட்பட்ட விஷயமல்ல. இது எங்கள் நாட்டின் சட்டம்” என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் அஜய் பிரகாஷ் சாவ்னி கடுமை காட்டியுள்ளார். இல்லாதபட்சத்தில் நடவடிக்கைகளை எதிர்கொண்டாக வேண்டும் என்றும்நோட்டீஸ் அனுப்பி மிரட்டல் விடுத்துள்ளார்.இவ்விஷயத்தில், மத்திய தகவல் - தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை சந்திக்க விரும்புவதாக டுவிட்டர் நிறுவனம் கூறியிருந்த நிலையில், அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் அஜய் பிரகாஷ் சாவ்னி மட்டுமே- புதன்கிழமையன்று மாலை, டுவிட்டர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகிகள் மோனிக் மெச்சே மற்றும் ஜிம் பேக்கர் ஆகியோருடன் காணொளி சந்திப்பில் பங்கேற்றார்.
அப்போது, டுவிட்டர் நிர்வாகிகளின் விளக்கத்தை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்ட சாவ்னி, “டுவிட்டர் நிறுவனம் அரசுடன் இணக்கமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும், தங்களின் உத்தரவுகளை ஏற்பதில் தயக்கம் காட்டுவது; தாமதப்படுத்தி 10 முதல் 12 நாட்கள் கழித்து, அந்த உத்தரவுகளை அமல்படுத்துவது இணக்கம் ஆகாது” என்று கடுமை காட்டியுள்ளார்.மேலும், “வன்முறையைத் தூண்டிவிடும் வகையிலான ‘விவசாயிகளை இனப்படுகொலை செய்ய மோடி திட்டம்’ என்ற ஹேஷ்டேக்குகள், இந்திய அரசியலமைப்பு பிரிவு 19-இன் கீழ் பத்திரிகை சுதந்திரம் அல்லதுகருத்துச் சுதந்திரத்தின் கீழ் வராது” என்று கூறியதுடன், தங்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார்.எனினும், இந்தியாவில் உள்ள ட்விட்ட தலைமையானது, கணக்குகளை முடக்குவது தொடர்பான உறுதி எதையும் அளிக்காத நிலையில், ‘தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69-ஏ, துணைப்பிரிவு (1), பிரிவு 69ஏ (3) ஆகியவற்றின் அடிப்படையில், டுவிட்டர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகிகள் மீது கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான முறைப்படியான நோட்டீஸ் வழங்கப்பட்டு இருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே, முகநூல், வாட்ஸ் ஆப் நிறுவனங்களுடன் மோதிய மோடி அரசு, தற்போது டுவிட்டர் நிறுவனத்தை தடை செய்வதற்கும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 2020 அக்டோபர் நிலவரப்படி சுமார் 2 கோடிபேர் இந்தியாவில் டுவிட்டர் பயன்படுத்தி வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.