30 ஆண்டுகள், கொல்கத்தா மாநிலக் கல்லூரியிலேயே பேராசிரிய ராகப் பணியாற்றிய மகலநோபிஸ், அக்காலத்தில் புள்ளியியலில் தனது ஆர்வத்தை விரிவாக்கி, அத்துறை இந்தியாவில் வளரவும் அடிகோலினார்.
கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் மகலநோபிஸின் அறையில் புள்ளியியல் ஆய்வகம் ஆரம்பிக்கப்பட்டது. அங்கு புள்ளியியல் ஆர்வலர்கள் பலர் ஒருங்கிணைந்தனர். அங்கு சக பேராசிரியர்களுடன் நடந்த விவாதத்தின் இறுதியில், கல்லூரியின் இயற்பியல் துறையிலேயே புள்ளியியல் கழகத்தைத் துவங்க முடிவானது. அதன்படி, 1931, டிசம்பர் 17-இல் இந்திய புள்ளியியல் கழகம் துவங்கப்பட்டது. இந்த அமைப்புக்கென ‘சங்க்யா’ என்ற சஞ்சிகையையும் (1933) மகலநோபிஸ் துவக்கினார். இன்று இந்த நிறுவனம் அரசு நிறுவனமாக வளர்ந்து, தனித்த பல்கலைக்கழகமாக இயங்குகிறது.
1936-இல் உலகப் புகழ்பெற்ற ‘மகலநோபிஸ் தொலைவு’ என்ற தனது புள்ளியியல் கோட்பாட்டை பிரசாந்த சந்திர மகலநோபிஸ் அறிமுகம் செய்தார். இரு வேறுபட்ட தரவுகளுக்கு இடையிலான ஒப்பீட்டு மதிப்பை வரையறுக்க இக்கோட்பாடு உதவுகிறது. பயன்பாட்டு புள்ளியியலுக்கு அடித்தளமிட்ட மகலநோபிஸ், 1949-இல் மத்திய அமைச்சரவையின் கெளரவ புள்ளியியல் ஆலோசகராகவும் செயல்பட்டார். மத்திய திட்டக்குழு உறுப்பினராக 1955 முதல் 1967 வரை இருந்து வழிகாட்டினார். நாட்டின் வளர்ச்சிக்கு புள்ளியியலை ஆயுதமாக்கிய மகலநோபிஸ் 1972, ஜூன் 28-இல் மறைந்தார். அவருக்கு பாரத அரசு 1968-இல் பத்மவிபூஷண் விருதளித்து கௌரவித்தது. அவரது பிறந்த நாள் தேசிய புள்ளியியல் தினமாக கொண்டாடப்படுகிறது.