புதுதில்லி:
தமிழகத்தில் கொரோனா தொற்றுகுறைந்த பிறகே 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் தெரிவித்தனர்.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத்தேர்வுகள் குறித்து முடிவு எடுப்பதற்காக மாநில அரசுகளுடன் மத்திய அரசு (மே 23) ஞாயிறன்று ஆலோசனை நடத்தியது. கொரோனா தொற்று பரவலால் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுஉள்ளிட்ட தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. கொரோனா சூழ்நிலையில் தேர்வை நடத்துவது மாணவர்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தும் என்பதால் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் வலி யுறுத்துகின்றனர்.இந்நிலையில் காணொலிக்காட்சி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார். மத்தியகல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், பெண்கள்-குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் பங்கேற்றனர். இதில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கல்வி அமைச்சர்கள் , கல்வித்துறைச் செயலாளர்கள், மாநில கல்வி வாரிய தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினர். தமிழகம் சார்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பகிரப்படும் கருத்துகளை மத்திய அரசு ஆய்வு செய்து ஒரு வாரத்தில் முடிவு எடுக்கும் என்று கூறப்படுகிறது.
தமிழக அமைச்சர்கள்
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுதொடர்பாக தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து செவ்வாய்க்கிழமை க்குள் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சகர்கள் குழு தெரிவித்தது. இக்கூட்டத்திற்கு பிறகு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர்பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் செய்தி யாளர்களை சந்தித்தனர். அப்போது உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதே திமுகவின் நிலைபாடு. அதை இன்றைய கூட்டத்தில் தெரிவித்தோம். இருந்தாலும் மருத்துவப் படிப்புகளில் மத்திய அரசின் ஒதுக்கீடு களுக்கு வேண்டுமானால் தேசிய அளவிலான நீட் தேர்வை நடத்திக் கொள்ளுங்கள். மாநில ஒதுக்கீட்டில் வரும் இடங்களுக்கு நாங்களே தனியாக தேர்வை நடத்திக் கொள்கிறோம் என்ற கோரிக்கையைமுன்வைத்தோம். புதிய கல்விக்கொள்கை வரும் கல்வியாண்டில் அமல்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்தும் கூட்டம் தொடங்கும்போதே பேசினோம். புதிய கல்விக்கொள்கை யை தமிழகம் ஏற்காது என்ற கருத்தை அழுத்தம் திருத்தமாக கூறினோம். ஆனால், இதற்கு மத்திய அமைச்சர்கள் குழு எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்தார்.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், நாடு முழுவதும் உள்ளமாநில அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் அனைவரும் 12ம் வகுப்புபொதுத்தேர்வு முக்கியம் என்ப தால், அதை நடத்த வேண்டியது அவசியம் என்று கூறினர். ஆனால், மாணவர்களின் நலன் கருதி கொரோனா தொற்று குறைந்த பிறகே நடத்த வேண்டும் என்று தெரிவித்தனர். மத்திய அரசு சில மாறுபாடுகளுடன் தேர்வை நடத்த வேண்டும், பொதுத்தேர்வு நேரம் குறைப்பு, விரிவான விடையளிக்கும் முறைக்கு பதிலாக கொள்குறி வகையிலான தேர்வை நடத்தலாம் எனவும் கூறினர். தமிழகத்திலும் 12 ஆம் வகுப்பு தேர்வு நடத்தப்படவேண்டும் என்பதேஅரசின் நிலைப்பாடு. ஆனால் தமிழகம் தேர்வு தொடர்பான இறுதி முடிவை எடுக்கவில்லை. மாணவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டிய சூழ்நிலையில் இருப்பதால், கொரோனா பரவல் குறைந்த பிறகே தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும்.
தேர்வு தொடர்பாக முதல்வரு டன் கலந்து ஆலோசித்து தமிழகத்தின் நிலைப்பாட்டை தெரிவிப்ப தாக கூறினோம். செவ்வாய்க்கிழ மைக்குள் தெரிவிக்க வேண்டும் என மத்திய அமைச்சகர்கள் குழு தெரிவித்தது. எனவே, விரைவில் முதல்வருடன் ஆலோசித்து செவ்வாய்க்கிழமைக்குள் தமிழகத்தின் நிலைப்பாட்டை தெரிவிப்பதாக கூறினேன் என்று தெரிவித்தார்.