india

img

பிரதமர் மோடி அஞ்சுவது இப்போது தான் புரிகிறது - மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு பிரதமர் மோடி அஞ்சுவது இப்போது தான் புரிகிறது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், பங்குச்சந்தைகளில் அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக கடந்த ஆண்டு அறிக்கை வெளியிட்டது. அதையடுத்து, அதானி குழும பங்குகளின் விலை சரிந்தது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டை இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியமே (செபி) விசாரிக்கட்டும் என்று கூறியது.

இதனிடையே, நிதி முறைகேட்டுக்காக அதானி குழுமம் பயன்படுத்திய வெளிநாட்டு நிறுவனங்களில், 'செபி' தலைவர் மாதவி பூரி புச் மற்றும் அவருடைய கணவர் தவல் புச் ஆகியோர் பங்குகள் வைத்திருப்பதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் நேற்று முன்தினம் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டது. எனினும் 'இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை; உள்நோக்கம் உடையவை' என, செபி தலைவர் மறுப்பு தெரிவித்துள்ளார். அதானி குழுமமும் மறுப்பு தெரிவித்து உள்ளது.

அதேநேரம், செபி தலைவர் மீதான குற்றச்சாட்டு விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், சமூகவலைதளத்தில் ராகுல் காந்தி வெளியிட்ட வீடியோவில், செபி தலைவர் மாதவி பூரி புச் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை?... முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? பிரதமர் மோடியா? செபி தலைவரா? அல்லது இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து தான் விசாரிக்குமா?

இவ்விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு பிரதமர் மோடி ஏன் அஞ்சுகிறார் என இப்போது புரிகிறது. இதனால், இந்திய பங்குச் சந்தைக்கு பெரும் ஆபத்து இருக்கிறது. செபியின் நேர்மையும், அதன் தலைவர் மீதான குற்றச்சாட்டுகளால் கேள்விக்கு ஆளாகியுள்ளது" என அவர் கூறியுள்ளார்.