india

img

மானியமில்லா கேஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.50 உயர்வு....

சென்னை:
மானியமில்லா கேஸ் சிலிண்டர் விலை கடந்த பிப்ரவரி 4 அன்று 25 ரூபாய் உயர்ந்த நிலையில் தற்போது மேலும் 50 ரூபாய் அதிகரித்துள்ளது.

தற்போது, ஒவ்வொரு வீட்டிற்கும் மானிய விலையில், ஆண்டிற்கு 12 கேஸ் சிலிண்டர்கள் (14.2 கிலோ எடை கொண்டவை) விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு மேல் கூடுதலான சிலிண்டர்கள் தேவைப்பட்டால், சந்தை விலை கொடுத்துதான் வாங்க வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நிய செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், சமையல் கேஸ் சிலிண்டர் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது ‘மாற்றி’ அமைத்து வருகின்றன.

இந்நிலையில், தற்போதைய மானியமில்லா கேஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.50 உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் இது 2வது விலையேற்றமாகும். முன்னதாக பிப்ரவரி 4ம் தேதி கேஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்த்தப்பட்டது. சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால் ஒட்டுமொத்த நாடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த விலையேற்றம் பிப்.,15 முதல் அமலுக்கு வந்துவிட்டது. இதன்படி, சென்னையில் ஒரு சிலிண்டர் விலை 785 ரூபாயாகவும், தில்லியில் 769 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

பெட்ரோல் விலையும் உயர்வு
பெட்ரோல் - டீசல் விலையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் ஞாயிறன்று பெட்ரோல் லிட்டர் 90.96ரூபாய், டீசல் லிட்டர் 84.16 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், திங்களன்று பெட்ரோல் விலை 23 காசுகள் அதிகரித்து லிட்டர் பெட்ரோல் 91.19 ரூபாய்க்கும், டீசல் 28 காசுகள் அதிகரித்து லிட்டர் 84.44 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

சீத்தாராம் யெச்சூரி கடும் கண்டனம்
கேஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.50 அதிகரிக்கப்பட்டிருப்பது, மக்கள் மீதான மோடி அரசின் ஈவிரக்கமற்றதாக்குதல் என்று சிபிஎம் பொதுச் செயலாளர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.