புதுதில்லி:
ஒன்றிய உயர் கல்வித்துறையின் செயலாளர் அமித் கரே, அனைத்துமத்தியப் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், ஐஐடி, என்ஐடி, ஐஐஎம்களின் இயக்குநர்கள் மற்றும் ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் இயங்கும் உயர்கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோருக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் காலிப் பணியிடங்கள் அதிகம் உள்ளன. குறிப்பாகஎஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும்பொருளாதாரத்தில் பின்தங்கியோருக் கான இட ஒதுக்கீட்டின் கீழ் பணிபுரியும் பேராசிரியர்களுக்கான காலியிடங்கள் அதிகமாக உள்ளன.இந்தப் பணியிடங்களை மத்திய உயர்கல்வி நிறுவனங்கள் உடனடியாக நிரப்பும் வகையில் ஒரு திட்டம் அறிவிக்கப்படுகிறது. அதன்படி 2021 செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் 2022 செப்டம்பர் 4ஆம் தேதி வரை ஓராண்டு காலத்துக்குள் காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும். இதுதொடர்பாக உயர்கல்வி நிறுவனங்கள் சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையாகச் சமர்ப்பிக்க வேண்டும்.ஆண்டுதோறும் சமர்ப்பிக்கும் அறிக்கையிலும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டது குறித்துத் தனியாகக் குறிப்பிட வேண்டும். அனைத்து மத்திய உயர்கல்வி நிறுவனங்களின் தலைவர்களும் இதுகுறித்து மாதாந்திர அறிக்கையை அனுப்பவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனைத்து மத்தியப் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், ஐஐடி, என்ஐடி, ஐஐஎம்களின் இயக்குநர்கள் மற்றும் ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் இயங்கும் உயர்கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் இதைத் தீவிரமாகப்பின்பற்றி காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது’.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.