முல்லைப் பெரியாறு அணையை கண்காணிக்க 7 பேர் கொண்ட புதிய குழுவை ஒன்றிய அரசு அமைத்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அணை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புதிய குழுவை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலர் மணிவாசன் குழுவில் இடம்பெற்றுள்ளார்.
கண்காணிப்புக் குழு தலைவராக தேசிய அணை பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார். இனி, தேசிய அணை பாதுகாப்பு ஆணையமே, அணையின் அனைத்து விவகாரங்களையும் கவனிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, உச்ச நீதிமன்றத்தில், மத்திய நீர் ஆணையம், அணையின் பொறுப்புகளை தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்திடம் ஒப்படைப்பதாக உறுதிமொழி அளித்திருந்தது. இதையடுத்து, முல்லைப் பெரியாறு அணையின் பழைய கண்காணிப்புக் குழு கலைக்கப்பட்டு, புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதில், கேரள மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த கூடுதல் தலைமைச் செயலர்களும் இடம்பெற்றுள்ளனர்.