india

img

காயத்ரி மந்திரத்தால் கொரோனாவை குணப்படுத்தும் மோடி அரசு? எய்ம்ஸ் மருத்துவமனை ஆராய்ச்சிக்கு தாராள நிதியுதவி....

புதுதில்லி:
“கொரோனா தொற்றை அழிக்கக் கூடிய ஆற்றல், இந்தியாவின் புனித நதியான ‘கங்கை’க்கு உள்ளது. கங்கை நீரில் கணிசமான அளவுக்கு  பாக்டீரியோபேஜ்கள் உள்ளன. இது பாக்டீரியாக்களைக் கொல்லும் ஒரு வகையான வைரஸ் . வேதங்கள், புராணங்கள் மற்றும் உபநிடதங்கள் போன்ற நமது பழங்கால வேதங்கள், கங்கை நதியை ‘மருத்துவ நீர்’ என்றே குறிப்பிடுகின்றன” - என்று பனாரஸ் இந்துப் பல்கலைக்கழக பேராசிரியரும், ஐஐடி-யின் முன்னாள்
நிதி பொறியாளருமான யூ.கே. சவுத்ரிஎன்பவர் கிளப்பி விட்டிருந்தார். 

மத்திய ஆட்சியாளர்களும் இதை நம்பி, கொரோனாவுக்கு மருந்தாக கங்கை நீரைத் தரலாமா? என்று ஆராய்ச்சி செய்யுமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்திற்கு (ICMR)பரிந்துரைத்தனர். ஆனால், அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று ஐசிஎம்ஆர் கூறி விட்டது.இதன்பின்னர் ராம்தேவுக்கு சொந்தமான ‘பதஞ்சலி’ நிறுவனத்தின் ‘கொரோனில்’ போன்ற ஆயுர்வேத மருந்துகளும் கொரோனாவை “குணப்படுத்துகின்றன” என்று கிளப்பி விடப்பட்டது. மாட்டின் சிறுநீர், பசுவின் சாணம் ஆகியவற்றுக்கும் கொரோனாவைக் கொல்லும் சக்திஉள்ளதாக இந்துத்துவா அமைப்பினர்பிரச்சாரம் செய்தனர். ஆனால், ஒன் றுக்கு கூட ஆதாரம் காட்டவில்லை.

இந்நிலையில், புதிதாக “காயத்ரி மந்திரம், மற்றும் பிராணயாமாவின் யோகாசனத்தால் கொரோனாவைக் குணப்படுத்த முடியுமா?” என்பது பற்றி ஆராய்ச்சி செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்திற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.இதற்காக, ரிஷிகேஷில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்திற்கு (எய்ம்ஸ்), தாராள நிதியுதவியையும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் (Department of Science & Technology) அறிவித்துள்ளது.இந்த புதிய ஆராய்ச்சி இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதலில், மிதமான அறிகுறிகளுடன் உள்ள 20 கொரோனா நோயாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படுவார்கள். அவர்களில் ஒரு குழுவிற்கு நிலையான மருந்துகளுடன் சிகிச்சை அளிக்கப்படும். மற்றொரு குழுவிற்கு நிலையான மருந்துகளுடன், பயிற்றுவிப்பாளரின் மேற்பார்வையில் 14 நாட்களுக்கு யோகா, காயத்ரி மந்திரம் உச்சரித்தல் மற்றும் யோகாசனத்துடன் சுவாச பயிற்சிகள் மேற்கொள்ளுதல் போன் றவை அளிக்கப்படும்.

பின்னர் இந்த இரண்டில் எதில் அதிக முன்னேற்றம் உள்ளது? என ஆய்வு செய்யப்படும். இந்நிலையில்,  இந்த ஆய்வுக் கான ஆட்சேர்ப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டதாக எய்ம்ஸ் மருத்துவமனை நுரையீரல் நிபுணரும் இணைப் பேராசிரியருமான டாக்டர் ருச்சி துவா தெரிவித்துள்ளார். அடுத்த 2 முதல் 3 மாதங்களுக்கு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.