india

img

பிரதமர் மோடியின் செல்வாக்கு 13 சதவிகிதம் சரிந்தது.... கொரோனா துயரத்தில் மக்களை கைவிட்டதால் நடுத்தர வர்க்கத்தினர் கோபம்.....

புதுதில்லி:
கொரோனா விவகாரத்தை தவறாக கையாண்டு வருவதன் காரணமாக, நடுத்தர வர்க்கத்தினரிடம் மோடியின் செல்வாக்கு 13 சதவிகிதம் அளவிற்கு சரிந்துள்ளதாக அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.இந்தியப் பிரதமர் மோடி ‘குளோபல் லீடர்ஸ்’ பட்டியலில் உள்ள நிலையில், அவரது செல்வாக்கு குறித்த கணிப்பை, அமெரிக்காவைச் சேர்ந்த ‘மார்னிங் கன்சல்ட்’ என்றநிறுவனம் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.

அதில், ‘ஆகஸ்ட் 2019 முதல் ஜனவரி 2021 வரையிலான காலத்தில், நடுத்தர வர்க்க மக்களிடம் மோடியின் செல்வாக்கு 80 சதவிகிதமாக இருந்தது. ஆனால், 2021 ஏப்ரலில்அந்த மதிப்பீடு 67 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. அதாவது மோடியின் செல்வாக்கு 13 சதவிகிதம் அளவிற்கு குறைந்துள்ளது. கொரோனாநெருக்கடியை சரியாக எதிர்கொள் ளாததும், நிலைமையின் தீவிரத்தை புறக்கணித்ததுமே இதற்குக் காரணம்’ என்று ‘மார்னிங் கன்சல்ட்’ குறிப்பிட்டுள்ளது.2006 முதல் 2016 வரை எடுக்கப் பட்ட கணக்கெடுப்பின்படி, வறுமைக்கோட்டிற்கு கீழிருந்த 27 கோடியே 30 லட்சம் மக்கள் நடுத்தர வர்க்கத்தில்சேர்ந்துள்ளனர். இதனால், இந்தியாவில் நடுத்தர வர்க்க மக்கட்தொகை சுமார் 60 கோடியாக உள்ளது. இவர்களில் மருத்துவர்கள், தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள், சிறு வணிகர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் இருக்கின்றனர்.

இந்நிலையில், கொரோனா தொற்று பாதிப்பில், சுமார் 60 கோடிபேர்கள் அளவிற்கு உள்ள, இந்த நடுத்தர வர்க்கத்தினரே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் பிரதமர் மோடிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்என்று ‘மார்னிங் கன்சல்ட்’ தெரிவித்துள்ளது.மேலும், இவ்வளவு காலமும் நடுத்தர வர்க்கத்தினரே, பிரதமர் மோடியையும், பாஜகவையும் ஆதரித்து வந்தனர் என்ற நிலையில், அவர்கள் தற்போது மோடிக்கு எதிரான நிலை எடுத்துள்ளதால், 2022-இல் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறும் சட் டப்பேரவை தேர்தலில், அது பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் ‘மார்னிங் கன்சல்ட்’ குறிப் பிட்டுள்ளது.

இந்த கணிப்பு பற்றி, ‘லோக் னிட்டி’யின் இணை இயக்குநரான சஞ்சய் குமாரும் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், ‘பிரதமர் மோடி ஒட்டுமொத்த மக்களையும் ஏமாற்றம் அடையச் செய்துள்ளார். குறிப்பாக, நடுத்தர வர்க்க மக்களே, பிரதமர்மோடியால் அதிகளவில் பாதிக்கப் பட்டுள்ளனர். பிரதமரின் அலுவல் ரீதியான பணியை விரும்பாதவர்களின் எண்ணிக்கை 2019-ஆம் ஆண்டு ஆகஸ்டில் 12 சதவிகிதமாக இருந் தது. ஆனால், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அது 28 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. பிரதமர்மோடி தற்போதுள்ள நெருக்கடிக்கு அதிக கவனம் செலுத்தவில்லை. அவர் மக்களை கைவிட்டு விட்டார்’என்று சஞ்சய் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.