இந்தியாவின் விடுதலைப் போராட்ட முன்னோடிவீரர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் மங்கள் பாண்டே.
உத்தரப் பிரதேசத்தில் நாக்வா என்ற கிராமத்தில் பிறந்த இவர் 1849ல் ஆங்கிலேயரின் பிரிட்டிஷ்கிழக்கிந்தியக் கம்பனியில் தனது 22வது வயதில்இணைந்தார். அதன் 34வது பிரிவில் பணிபுரிந்தார். இப்பிரிவினரே அதன் பிரிட்டிஷ் அலுவலர்களைத் தாக்கி, சிப்பாய்க் கிளர்ச்சி எனும் முதல் சுதந்திரப் போர் 1857ல் நிகழ்ந்தது.“கல்கத்தாவின் பரக்பூர் நகரில் 1857மார்ச் 29, மாலையில் தனதுபிரிவில் உள்ள பல சிப்பாய்கள் கிளர்ந்தெழுந்த நிலையில் உள்ளார்கள்” என லெப்டினண்ட் போ (Baugh) என்பவன் அறிவித்தான்.அத்துடன் அவர்களில் மங்கள் பாண்டே துப்பாக்கியுடன் மற்றைய சிப்பாய்களைக் கிளர்ச்சிக்கு வருமாறு அழைத்துக் கொண்டிருந்ததாகவும் முதலில் காணும் வெள்ளைக்காரரை சுட்டு விடுவதாக பயமுறுத்திக் கொண்டிருப்பதாகவும் அறிவித்தான். போ உடனேயே தனதுகுதிரையில் ஏறி வாளையும் உருவிக்கொண்டு சிப்பாய்களை நோக்கிச் சென்றான். குதிரைச் சத்தத்தைக் கேட்ட பாண்டே அங்கிருந்த பீரங்கியின் பின்னால் மறைந்து கொண்டு போவை நோக்கிச் சுட்டான். எனினும் அது குறி தவறி குதிரையைத் தாக்கியது. போ, பாண்டேயை நோக்கிச் சுட ஆரம்பித்தான். பாண்டே தனது வாளைஉருவி போவைத் தாக்கிக் காயப்படுத்தினான். அதன் பின்னரே ஷேக் பால்ட்டு என்ற வேறொரு சிப்பாய் பாண்டேயை மேலும்தாக்காதவாறு தடுத்து நிறுத்தினான். பாண்டே பின்னர் கைது செய்யப்பட்டு ஒரு வார விசாரணைக்குப் பின்னர் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஏப்ரல் 8, 1857ல் அவர் தூக்கிலிடப்பட்டார். 34வது இராணுவப் பிரிவு தனது அலுவலர்களைப் பாதுகாக்கத் தவறியமைக்காக மே 6 ஆம் நாள் கலைக்கப்பட்டது.
பெரணமல்லூர் சேகரன்