கவுகாத்தி:
அசாம் மாநிலம் கவுகாத்தி பல்கலைக்கழக முதுகலை மாணவர்சங்கத்திற்கு (PGSU) நடைபெற்ற தேர்தலில், பாஜக ஆதரவு அமைப்பும், ஆர்எஸ்எஸ்-ஸின் மாணவர் பிரிவுமான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) படுதோல்வி அடைந்துள்ளது.
முதுகலை மாணவர் சங்கத்தில், தலைவர், பொதுச்செயலாளர் என மொத்தம் 15 நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான இந்த தேர்தலில், சுமார்4 ஆயிரம் மாணவர்கள் வாக்களித்தனர். இதன்முடிவுகள் வெள்ளிக்கிழமையன்று அறிவிக்கப்பட்டன.இதில், தலைவர், பொதுச்செயலாளர் போன்ற முக்கிய பொறுப்புகளை அனைத்து அசாம் மாணவர் சங்கத்தினர் (AASU) கைப்பற்றினர். 6 இடங்களில் அவர்கள் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கம் (NSUI) ஐந்து இடங்களைக் கைப்பற்றினர். சத்ர முக்தி சங்கார சமிதிஎனப்படும் எஸ்எம்எஸ்எஸ் மற்றும் ஏஎஸ்எஸ்யு ஆகியவை தலா 2 இடங்களை கைப்பற்றின. அதேநேரம் பாஜகஆதரவு மாணவர் அமைப்பான ஏபிவிபி-யால் ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியவில்லை.
ஆனால், இதே ஏபிவிபி கடந்த முறை, அசாம் மாணவர் சங்கத்தோடு கூட்டணியாக போட்டியிட்டு 4 இடங்களை வென்றிருந்தது. பொதுச்செயலாளர் பதவியையும் அது கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.அசாமில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழக மாணவ சங்கத்தேர்தலில் கிடைத்த படுதோல்வி, பாஜக-வை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.