புதுதில்லி:
பாலக்கோடு பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்போவது அர்னாப்கோஸ்வாமிக்கு முன்கூட்டியே எப்படி தெரிந்தது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட 5 பேர்மட்டுமே தாக்குதல் திட்டத்தை அறிவார் கள் என்ற நிலையில், இவர்களில் ஒருவர்தான் அர்னாப்பிடம் ராணுவ ரகசியத்தை கூறியிருக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
2019 பிப்ரவரி 14 அன்று, காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 46 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், இதற்குப் பதிலடியாக,பிப்ரவரி 26 அன்று இந்திய விமானப்படை,பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில் உள்ளபாலாகோட் நகரில் குண்டுவீசி தாக்குதல்நடத்தியது என்றும், இதில் சுமார் 300பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்;முகாம்கள் அழிக்கப்பட்டன என்றும் பிரதமர் மோடி அறிவித்தார். பிரதமர் இவ்வாறு அறிவிக்கும் வரை,தாக்குதல் நடக்கப் போகிறது என்றோ,நடத்தப்பட்டது என்றோ யாருக்கும் தெரியாது. விமானப்படை அதிகாரிகளுக்கே கூட தெரியாது என்று அப்போது கூறப் பட்டது.ஆனால், இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்த இருப்பதை பிப்ரவரி 23 அன்று முன்கூட்டியே அர்னாப் கோஸ்வாமி அறிந்திருந்தார் என்பதை, டிஆர்பி-யை மதிப்பிடும் அமைப்பான பார்க்-கின் (BARC) தலைமை செயல்அதிகாரி பார்த்தோ தாஸ்குப்தாவிடம் அர்னாப் நடத்திய வாட்ஸ் ஆப் உரையாடல்ஆதாரம் மூலம் மும்பை காவல்துறை அம்பலப்படுத்தியது. அதுமட்டுமல்ல, கடந்த 2019 டிசம்பரில் காஷ்மீருக்கான சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட இருப்பதையும் அர்னாப் கோஸ்வாமி முன்கூட் டியே அறிந்திருந்தார் என்பதையும் கண்டறிந்தது.இது எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சியைஏற்படுத்திய நிலையில், மத்திய பாஜக அரசோ, பிரதமர் மோடியோ அவரது அமைச்சரவை சகாக்களோ ஒருவரும் வாய்திறக்காமல் மவுனம் சாதித்து வருகின்றனர்.
இந்நிலையில்தான், பாலகோட் தாக்குதல் ரகசியத்தை, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட ஐந்து பேரில் ஒருவர்தான் அர்னாப் கோஸ்வாமிக்கு கூறியிருக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் உயர் பதவிகளில் உள்ள ஐந்து பேருக்கு மட்டும்தான் பாலக்கோடு தாக்குதல் பற்றி முன்கூட்டியே தெரியும் (பிரதமர், பாதுகாப்பு அமைச்சர்,உள்துறை அமைச்சர், இந்திய விமானப்படை தலைவர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்). எனவே, இந்த ஐந்துபேரில் ஒருவர்தான் அர்னாப் கோஸ்வாமிக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து இருக்க வேண்டும். இது ஒரு குற்றச் செயலாகும்.
ராணுவ ரகசியத்தை யார் வெளியே சொன்னார்களோ அவர்கள் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். விமானப் படையைச் சேர்ந்த பைலட்டுகள் கூட கடைசி நேரத்தில்தான் இந்த தாக்குதல் பற்றிய தகவல்களைஅறிந்திருப்பார்கள். ஆனால் ஒரு பத்திரிகையாளர் முன்கூட்டியே அதை தெரிந்து வைத்திருக்கிறார் என்பது ஆபத்தானது. புல்வாமா தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் இறந்ததை, ‘நல்லதுக்குதான்’ என்று அர்னாப் கோஸ்வாமி கூறியது சரியான வார்த்தை கிடையாது.பிரதமரின் சிந்தனையை போலவே அர்னாப்பின் சிந்தனையும் இருப்பதையே இது காட்டுகிறது. தேர்தல் வெற்றி மட்டும்தான் அவர்கள்கண்களுக்கு தெரிந்து இருக்கிறது. ஆனால், இந்த அரசில் அங்கம் வகிப்பவர்கள் தங்களை தாங்களே தேசப்பற்றுகொண்டவர்கள் என்று தெரிவித்துக் கொள்கிறார்கள். நமது அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியே கசிய விட்டுள்ளது தேசப் பற்று கொண்டவர்கள் செய்யும் விஷயம் கிடையாது. அர்னாப் கோஸ்வாமி இந்த விஷயத்தை தெரிந்து வைத்துள்ளார் என்றால்,கண்டிப்பாக பாகிஸ்தானும் முதலிலேயே இதைத் தெரிந்து இருக்கும் என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.