india

img

இடஒதுக்கீட்டை பறிக்க பாஜக அரசு முயற்சி – ராகுல் காந்தி எம்.பி., கண்டனம்!

பட்டியலினத்தோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்துக்கான இடஒதுக்கீட்டை பறிக்க பாஜக அரசு முயற்சிப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

ஒன்றிய அமைச்சகங்களில் காலியாகவுள்ள 45 பதவிகளை அரசு அலுவலர்கள் அல்லாத துறைச் சார்ந்த வல்லுநர்களை கொண்டு நிரப்புவதற்கு (லேட்டரல் என்ட்ரி) விண்ணப்பங்கள் வரவேற்பதாக ஒன்றிய அரசு சனிக்கிழமையன்று அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “லேட்டரல் என்ட்ரி என்பது எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி மீதான தாக்குதல். பாஜகவின் திரிக்கப்பட்ட ராம ராஜ்ஜியம், அரசியலமைப்பை அழிக்கவும், பட்டியலினத்தோரின் இடஒதுக்கீட்டை பறிக்கவும் முயல்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றிய அரசின் இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள், துணைச் செயலாளர்கள் போன்ற முக்கிய பதவிகளை ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற யுபிஎஸ்சியில் தேர்ச்சி பெற்றவர்களையும், குரூப் ஏ சேவை அதிகாரிகள் மூலமே நிரப்பப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.