புதுதில்லி:
பஞ்சாப் நடிகர் தில்ஜித் டொசாஞ்ச்,நேர்மையானவர் அல்ல; தான் சம்பாதிக்கும் பணத்தையே குறைத்துக்காட்டி, வரி ஏய்ப்பு செய்பவர் என்றுபாஜக-வினர் சமூகவலைத்தளங்களில் பிரச்சாரம் செய்து வந்தனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தில்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்குநடிகர் தில்ஜித் ஆதரவு தெரிவித்திருந்தார். விவசாயிகள் கோரிக்கையில் நியாயம் இருப்பதாகவும் அவர்கூறியிருந்தார். இதனால் தில்ஜித் மீது ஆத்திரமடைந்த பாஜகவினர், வரிஏய்ப்பு செய்யும் நடிகர் தில்ஜித் தங்களை விமர்சிக்க அருகதையற்றவர் என்று சாடினர். அதாவது. வருமான வரித்துறை மூலம் பிரச்சனையை சந்திக்க நேரிடும் என்பதையே அவர் கள் இவ்வாறு மறைமுகமாக குறிப்பிட்டனர். பாஜக ஆதரவு நடிகை கங்கனா ரணாவத்தும் நடிகர் தில்ஜித்மீது அவதூறுகளை அள்ளி வீசியிருந்தார்.இந்நிலையில், தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையல்ல; அயோக்கியத்தனமானவை என்று தில்ஜித் மறுத்துள்ளார். அதுமட்டுமன்றி, வருமான வரி செலுத்துவதில், சிறப்பாக பங்காற்றியதாக, மத்திய நிதியமைச்சகம் தனக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி இருப்பதையும், வரியை முறையாக செலுத்துவதால் மத்திய அரசு தனக்குபிளாட்டினம் அந்தஸ்து வழங்கி உள்ளது என்றும் ஆதாரங்களை வெளியிட்டு பாஜக-வினருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
“நாள் முழுவதும் அந்த நபர்கள்(பாஜக-வினர்) பொய்ச் செய்திகளைப் பரப்பிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள், தங்களுடைய வேலையில் பரபரப்பாக இருந்துகொண்டு, வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். கடவுள் அனைத்தையும் பார்த்துக் கொண்டுள்ளார். இது நிச்சயம் அந்த நபர்களின் வேலைதான். அவர்கள் அதைத்தவிர என்ன செய்வார்கள்?” என்றும் தில்ஜித் டொசாஞ்ச் காட்டமாக கூறியுள்ளார்.