புதுதில்லி:
2021 ஆம் ஆண்டு ஜூன் 1 முதல் ‘பிஐஎஸ்’ தரச்சான்று இல்லாத ஹெல்மெட் தயாரிப்பு, விற்பனைக்கு தடை விதித்து மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி இலகுரக ஹெல்மெட் தயாரிப்பை உறுதிசெய்யும் வகையில் சாலை பாதுகாப்புக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அளித்த அறிக்கையின்படி மத்திய அரசு குறைந்தஎடை கொண்ட ஹெல்மெட்டை 2018 மார்ச் மாதத்தில் பரிந்துரைத்தது.
இந்நிலையில் இந்திய தரநிர்ணய அமைப்பால் (பிஐஎஸ்) சான்றளிக்கப்பட்ட ஹெல்மெட் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், ‘இந்திய தர நிர்ணய அமைப்பின் (பிஐஎஸ்) கட்டாய சான்றிதழின் கீழ், இரு சக்கரவாகனங்களுக்கான பாதுகாப்பு தலைக்கவசங்கள் தரக் கட்டுப்பாட்டு வெளியீட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. வருகிற 2021 ஜூன் 1 ஆம் தேதி முதல் பிஐஎஸ் சான்று அல்லாத ஹெல்மெட்டை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ முடியாது. இருசக்கர வாகனம் ஓட்டுநர்கள் தங்களது தலைக்கவசங்களை (ஹெல்மெட்)பிஐஎஸ் சான்றளிக்கப்பட்டதை பார்த்து வாங்க வேண்டும்.அதுபோன்ற ஹெல்மெட் மட்டுமே தயாரித்து விற்பனை செய்ய முடியும். மலிவான அல்லது பிஐஎஸ் சான்று இல்லாத ஹெல்மெட்டை வாங்கி அணிந்திருந்தால், அதனை மாற்றிக் கொள்ள வேண்டும். அரசின் இந்த முடிவால்ஹெல்மெட்டின் தரம் உறுதிசெய்யப்படும். இதற்காக இரு சக்கர மோட்டார் வாகன தரக் கட்டுப்பாடு சட்டத்தின் ஹெல்மெட் ஆணை - 2020 பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.