புதுதில்லி:
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மேலும் பல விவசாயிகள் ஹரியானாவில் இருந்து வாகனங்களில் குவிந்து வருகின்றனர்.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தில்லி எல்லைகளில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். சிங்கு, திக்ரி, காசியாபாத் ஆகிய இடங்களில் கூடாரங்கள் அமைத்து இவர்கள் முகாமிட்டுள்ளனர். இவர்களுடன் மத்திய அரசு பல கட்டங்களாக நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தன. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.
இந்நிலையில் ஹரியானா மாநிலம் அம்பாலாவில் இருந்து 3,500க்கும்மேற்பட்ட வாகனங்களில் கருப்பு கொடிகளுடன் விவசாயிகள் போராட்டத்திற்குவலுசேர்க்க அணிவகுத்து வருகின்றனர். பாரதிய கிசான் யூனியன் தலைவர்குருனாம் சிங் தலைமையில் அணிவகுக்கும் இவர்கள், விரைவில் தில்லியைஅடையவுள்ளனர். இதே போன்று பானிபட் நகரில் இருந்து மற்றொரு குழுவினர் ஜூன் 10 ஆம் தேதி தில்லி வர உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே ஹரியானாவில் தலைவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கு களை வாபஸ் பெறவும் சிறையில் உள்ளவர்களை விடுவிக்கக்கோரியும் அம்மாநிலத்தின் அனைத்து காவல் நிலையங்கள் முன்பாக திங்களன்று தர்ணா போராட்டத்திற்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.