india

img

கொட்டும் மழையிலும் “விவசாயிகள் நாடாளுமன்றம்”... ஒன்றிய பாஜக அரசின் தடைகளை தகர்த்து வீறுடன் நடைபெறுகிறது....

புதுதில்லி:
நடைபெற்று வரும் நாடாளுமன்றக்கூட்டத்தொடருக்கு இணையாக, விவசாயிகள் நாடாளுமன்றத்தின் நான்காம் நாள் செவ்வாய்க்கிழமையன்று ஒன்றிய அரசின்  பல்வேறுவிதமான தடைகளை தகர்த்தும், மழை தொடர்ந்து பெய்துவந்த நிலையிலும் உறுதியுடன் நடைபெற்றது.

தில்லியின் எல்லைகளிலிருந்து விவசாயிகள் நாடாளுமன்றத்திற்காகப் புறப்பட்ட விவசாயிகள், காவல்துறையினரால் தேவையில்லாமல் பலஇடங்களில் சோதனை செய்யப்பட்டார்கள். பல இடங்களில் காவல்துறையினர் போராடும் விவசாயிகளைக் கண்ணீர்ப் புகைக் குண்டுகளாலும், வாட்டர்- கேன்களாலும் தாக்குவதற்குத் தயாராக இருந்தனர். எனினும் காவல்துறையினரின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்குப் பலியாகாது, அமைதியான முறையில் திட்டமிட்டபடி விவசாயிகள் நாடாளுமன்றக்கூட்டத் தொடரை நடத்திடுவதிலும் உறுதியாக இருந்தனர்.

கள்ளச்சந்தைபேர்வழிகளுக்கு சட்ட அங்கீகாரம்
விவசாயிகள் நாடாளுமன்றத்தின் மூன்றாவது நாளாக திங்களன்று நடைபெற்ற பெண்கள் பங்கேற்ற நாடாளுமன்றம், 2020 அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டத்தின் மீதான விவாதத்தைத் தொடங்கியிருந்தது. அதனை நான்காவது நாள் நடைபெற்ற நாடாளுமன்றமும் தொடர்ந்தது. விவசாயிகள் நாடாளுமன்றத்தில் பேசிய உறுப்பினர்கள் உலகப் பசி-பட்டினி அட்டவணையில் இன்றையதினம் இந்தியாவின் நிலை மிகவும் பாதாளத்திற்குச் சென்றிருப்பதைச் சுட்டிக்காட்டினார்கள். இந்த நிலையில் ஆட்சியாளர்கள் கொண்டு வந்திருக்கும் திருத்தங்கள் மூலம், கள்ளச்சந்தைப் பேர்வழிகள் அத்தியாவசிய உணவுப் பொருள்களைப் பதுக்கி வைத்துக்கொள்ள சட்ட அங்கீகாரம் பெற்றிருப்பதையும் விளக்கினார்கள். மேலும் கொண்டுவரப்பட்டிருக்கிற திருத்தங்கள் நுகர்வோர் மற்றும் விவசாயிகளின் நலன்களைக் காவுகொடுத்து, வேளாண் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் கார்ப்பரேட்டுகள் பயன்பெறுவதற்கான ஒன்றே என்பதையும் தெளிவுபடுத்தி உரையாற்றினார்கள். அனைத்து மக்களுக்கும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய விதத்தில்  சட்டம் கொண்டுவர வேண்டும் என்று பெண்கள் நாடாளுமன்றம் பிரதிபலித்த கருத்தை செவ்வாயன்று  பேசிய உறுப்பினர்களும் ஆதரித்துப் பேசினார்கள். அதே சமயத்தில் சென்ற ஆண்டு  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.விவசாயிகள் நாடாளுமன்றத்தில் மும்பை உயர் நீதிமன்றத்தின் முன்னாள்நீதிபதி பி.ஜி.கொய்சே பாட்டீல் அவர்களும் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. (ந.நி.)