புதுதில்லி:
கொரோனா தொற்றால் பலியான வர்களின் குடும்பத்தினருக்குப் பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் கருணை அடிப்படையிலான இழப்பீட்டுத் தொகை அளிக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் அரசியல்தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
கொரோனா வைரஸ் பெருந்தொற்றைக் கையாள்வதற்காகக் கொண்டுவரப்பட்ட பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் வழங்குவது தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்டுள்ள புரிதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு நிராகரிக்கிறது. இந்தச் சட்டத்தின்கீழ் உள்ள ஷரத்துக்களின் அடிப்படையில், பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய இழப்பீடு அளிக்கப்பட்டாக வேண்டும்.இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடுகள் அளிப்பதால் அரசாங்கத்தின் நிதிநிலையில் சிரமம் ஏற்படும் என்று கூறுவது உண்மைக்குப் புறம்பான ஒன்றாகும். ஒன்றிய அரசாங்கம் தேவைப்படும் நிதியாதாரங்களை எளிதாகப் பெருக்கிடமுடியும்.
இதுபோன்ற பேரிடருக்கு இவ்வாறு காரணம் கூறுவது சரியல்ல.கடந்த ஓராண்டு காலமாக கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து உயிர்வாழ் வதற்காகக் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அவர்களுக்குக் கிடைத்திடும் உதவிகள் என்பவை மிகவும் அற்ப அளவிலேயே இருந்து வருகின்றன. சுகாதார வசதிகள், உயிர் காக்கும் மருந்துகள் போன்றவை போதிய அளவிற்குக் கிடைக்காமல்அவர்கள் அல்லாடிக் கொண்டிருக் கிறார்கள். தினசரிக் கூலி பெற்று வந்த கோடிக்கணக்கான முறை சாராத் தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இம்மக்கள் மீது பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டிகொள்கைகள் ஏற்படுத்திய பேரழிவை விட இப்போது கொரோனா வைரஸ் பெருந்தொற்று மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.
இத்தகைய சூழ்நிலையில், கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்குப் பலியானவரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் உரியஇழப்பீடுகள் (ex-gratia compen sation) அளிக்கப்பட வேண்டியது அடிப்படையான மனிதாபிமானத் தேவையாகும்.பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் கருணை அடிப்படையிலான இழப்பீட்டுத் தொகை (ex-gratia compensation), கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு அளிக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு கோருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.