india

img

போலி கொரோனா தடுப்பூசி விசாரணை நடைபெறுகிறது.... ஒன்றிய அமைச்சர் தகவல்....

புதுதில்லி:
உலகையே அச்சுறுத்திய கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனகா நிறுவனங்களின் கண்டுபிடிப்பான கோவிஷீல்டு மற்றும் ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் ஆகிய தடுப்பூசிகள் நாடு முழுவதும் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோவாக்சின் உட்பட சில தடுப்பூசிகள் போலியாக தயாரிக்கப்பட்டு தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்தியாவிலும் போலி தடுப்பூசிகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.   இது தொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா செய்தியாளர்களிடம் கூறுகையில், “ நாட்டில் போலி தடுப்பூசிகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் உண்மையான தடுப்பூசிகளை எவ்வாறு அடையாளம் காண்பது என்பது தொடர்பாக, மாநில அரசுகளுக்கு ஒன்றிய  அரசு கடிதம் எழுதியுள்ளது. அதில், தடுப்பூசிகளின் மேல் உள்ள ‘லேபிள்’ எந்த நிறத்தில் இருக்கும். அதில் நிறுவனங்களின் குறியீடுகள் என்ன என்பது உள்ளிட்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.