புதுதில்லி:
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது என்று புதுதில்லியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், “மேகதாது அணை விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரட்டைவேடம் போடுகிறார். அவரை தமிழக விவசாயிகள் நம்பமாட்டார்கள். 4 மாநில பிரச்சனையை தீர்க்காமல் பாஜக அரசு விவசாயிகளை அலைக்கழித்து வருகிறது. தமிழகத்தில் காவிரிநீருக்காக போராட்டம் நடத்துவதாக கூறும் பாஜக தில்லியில் நீர்வளத் துறை அமைச்சருக்கு எதிராக போராட்டம் நடத்துமா” என்று கேள்விஎழுப்பினார்.காவிரியில் கர்நாடகம் அணை கட்டினால் தமிழகத்தில் டெல்டா பகுதிகளில் உள்ள 17 மாவட்டத்தின் நீர் ஆதாரம் பாதிக்கப்படும். தமிழகத்தின் நீர் உரிமையை பறிக்கும் கர்நாடகா மற்றும் ஒன்றிய அரசின் இரட்டை வேடத்தை தமிழக மக்களிடம் அம்பலப்படுத்துவோம் என்றும் அவர்கூறினார்.
ஹன்னன் முல்லா
ஆர்ப்பாட்டத்தில் பேசிய அகிலஇந்திய விவசாயிகள் சங்கத்தின்பொதுச்செயலாளர் ஹன்னன் முல்லா, தமிழகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலுவாக உள்ளது. மத்திய அரசின் விவசாயிகள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து தொடர்ச்சியாக போராடி வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் கறுப்புச்சட்டங்களை மோடி அரசு உடனடியாக கைவிட்டு உத்தரவாதத்துடன் கூடிய குறைந்தபட்ச கொள் முதல் விலையை உறுதிப்படுத்தும் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவேண்டும் என்றார்.மேலும் பேசிய அவர், “தமிழகத்தில் மழை போதிய அளவு பெய்வதில்லை. இதனால் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தட்டுப்பாடு உள்ளது. எனவே தண்ணீர் தான் தமிழக விவசாயிகளின் வாழ்க்கையாக உள்ளது. காவிரி நீரை நம்பி டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கரில் நெல் பயிரிடப்படுகிறது. காவிரி நீர் தொடர்புடைய மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பங்கீடு நியாயமான முறையில் நடைபெறவேண்டும்.இதனை மத்திய அரசு உறுதிப்படுத்தவேண்டும். சாகுபடிக்கும் குடிக்கவும் தண்ணீரை உத்தர வாதப்படுத்தவேண்டும்.இந்த நிலையில் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு போதிய அளவு தண்ணீர்கிடைக்காது. இதனால் விவசாயமும் குடிநீர் விநியோகமும் பாதிக்கப்படும். தண்ணீரை நீதிமன்றம் சொன்னபடி பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று தமிழக விவசாயிகளும் கர்நாடக விவசாயிகளும் ஒருமித்த குரலில் சொல்கிறார்கள். இதுகுறித்து இரு மாநில விவசாயிகளும் பேசத்தயாராக இருக்கிறார்கள். மாநில அரசு இதில் முக்கிய பங்காற்றவேண்டும். அறிவியல்பூர்வமான முறையில் நதிநீர் பங்கீட்டை மத்திய அரசும்உச்சநீதிமன்றமும் உறுதிப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.
தமிழக விவசாயிகளுக்கு பாராட்டு
தில்லியில்போராடும் விவசாயி களுக்கு ஆதரவு தெரிவிக்க 2500 கி.மீ தூரம் கடந்து வந்து தலைநகரில் ஒருவாரம் தங்கி போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினருக்கு ஹன்னன் முல்லா நன்றி தெரி வித்தார்.இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய நிர்வாகிகள் கிருஷ்ண பிரசாத், விஜூ கிருஷ்ணன், மாநில நிர்வாகிகள் கே.பி. பெருமாள், பி.டில்லி பாபு, சாமி நடராஜன், ஆர் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.