புதுதில்லி:
நாட்டில் மூன்றில் இரண்டு பங்கு இந்தியர்களுக்கு கொரோனா நோய் எதிர்ப்புச்சக்தி உருவாகியுள்ளதாக செரோ சர்வே முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட நபர்களின் ரத்த மாதிரிகளை எடுத்து சோதித்து, அவர்கள் உடலில் கொரோனா நோய் எதிர்ப்பு பொருள் உருவாகி இருக்கிறதா என்று சோதனை செய்யப்படுவது செரோ சர்வே என அழைக்கப்படுகிறது. நோய்எதிர்ப்பு பொருள் உருவாகி இருந்தால் அவர்களுக்கு கொரோனா வந்து போயுள்ளது என்று உறுதி செய்யப்படுகிறது.இந்த செரோ சர்வேயை நான்காவது முறையாக ஜூன், ஜூலை மாதங்களில் நாடு முழுவதும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் நடத்தியது. ஏற்கனவே 3 செரோசர்வேக்கள் நடத்தப்பட்ட 21 மாநிலங்களில் 70 மாவட்டங்களில்தான் இந்த 4-வது சர்வேயும் எடுக்கப்பட்டுள்ளது.
இதன் முடிவுகளை ஒன்றிய சுகாதார அமைச்சக மூத்த அதிகாரி வெளியிட்டார். அதில், இந்திய மக்களில் 6 வயதுக்கு மேற்பட்டவர்களில் 67.6 சதவீதத்தினரின் உடல்களில், அதாவது மூன்றில் இரு பங்கு மக்களிடத்தில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு பொருள் உருவாகி உள்ளது. மூன்றில் ஒரு பங்கினரின் உடல்களில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு பொருள் உருவாகவில்லை. அதாவது 40 கோடி பேர் உடலில் நோய் எதிர்ப்பு பொருள் இல்லை. இவர்களுக்கு நோய்த்தொற்று ஆபத்து உள்ளது.செரோ சர்வே மேற்கொள்ளப்பட்ட சுகாதார பணியாளர்களில் 85 சதவீதத்தினருக்கு கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்புபொருள் இருக்கிறது. பத்தில் ஒருவர்இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.