புதுதில்லி:
தில்லியில் குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியின் போது, போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில் செங்கோட்டையில் கொடி ஏற்றிய பஞ்சாப்நடிகர் தீப் சித்துவை தில்லி காவல்துறை யினர் கைது செய்தனர். இவர் பாஜக தலைவர்களுடன் நெருங்கிய தொடர்புள்ளவராக கூறப்படுகிறது. விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லியில் பல்வேறு மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜனவரி 26 அன்று தில்லியில் டிராக்டர் பேரணி நடத்தினர். அனுமதிக்கப்பட்ட வழிகளில் பேரணிக்கு அனுமதி மறுத்து பாஜக அரசின் காவல்துறைவிவசாயிகள் மீது தடியடி நடத்தியது. இதில் போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில் பஞ்சாப் நடிகர் தீப் சித்து செங்கோட்டையில் சீக்கிய கொடியை ஏற்றினார். இந்நிலையில் நடிகர் தீப் சித்து,பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் எடுத்த புகைப்படங்கள் வெளியாகின. இவர் பாஜக ஆதரவாளர் என்று விவசாயிகள் குற்றம்சாட்டினர். இதனால் தீப் சித்துவை கைது செய்வதில் பாஜக அரசின் காவல்துறை தாமதப்படுத்தியது.
இச்செயலுக்கு விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை தொடர்ந்து, தலைமறைவான பஞ்சாப் நடிகர் தீப் சித்து குறித்து தகவலை தெரிவிப்போருக்கு ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று காவல்துறையினர் அறிவித்தனர்.இந்நிலையில் விவசாயிகள் பேரணியில் வன்முறையை தூண்டிவிட்டதாக தீப் சித்துவை செவ்வாயன்று தில்லி தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் தேடப்பட்டு வந்த சுக்தேவ் சிங்(60) என்பவரை திங்கட்கிழமை யன்று சண்டிகரில் கைது செய்தனர்.