புதுதில்லி:
தில்லியில் பாலியல் வன் கொலை செய்யப்பட்ட 9 வயதுச் சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய புகைப்படத்தை பதிவேற்றியதற்காக, காங்கிரஸ் தலை வர் ராகுல் காந்தியின் கணக்கை டுவிட்டர் நிர்வாகம் முடக்கியது.ராகுலின் பதிவை பகிர்ந்ததற்காக காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் மற்றும் 5 ஆயிரம் காங்கிரஸ் தலைவர்களின் டுவிட்டர் பக்கங்களும் முடக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் டுவிட்டர் சமூகவலைதளத்தில் இருக்கும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும், ராகுல் காந்தியின் புகைப்படத்தையே தங்களின் முகப்புப் படங்களாக வைத்தும், கணக்கின் பெயர் களை ராகுல் காந்தி என மாற்றியும் பதிலடி கொடுக்க ஆரம் பித்துள்ளனர். ஒரு ராகுல் காந்தியின் கணக்கைத்தானே முடக்க முடியும்... நாங்கள் அத்தனை பேருமே ராகுல் காந்திகள்தான்.. என்று கூறியுள்ளனர்.காங்கிரஸ் இளைஞரணித் தலைவர் ஸ்ரீனிவாஸ் உட்பட பலரும் இதனை ஒரு போராட்ட வடிவமாக முன்னெடுத்துள்ளனர். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் தனது டுவிட்டரில் முகப்புப் படமாக ராகுல் காந்தி புகைப்படத்தை வைத்துள்ளார். “டுவிட்டர் நிறுவனம் தனது சொந்த விதிகளைபின்பற்றுகிறதா அல்லது பாஜகவின் விதிகளை பின்பற்றி எங்களின் கணக்குகளை முடக்குகிறதா? பட்டியல் வகுப்பினர் தேசியஆணையமும் தலித் சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில், அந்த கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என்று கேள்வி எழுப்பியிருக்கும் பிரியங்கா, பாஜக அரசோடு சேர்ந்து கொண்டு, டுவிட்டர் நிறுவனம் இந்திய ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.