புதுதில்லி:
ஒன்றிய கல்வி அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில் நாட்டின் சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு முதல் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப்பட்டியலை ஒன்றிய கல்வி அமைச்ச கம் வெளியிட்டு வருகிறது. இதற்கான உருவாக்கப்பட்ட தேசிய நிறுவனதரவரிசை கட்டமைப்பு (என்ஐஆா்எப்), மாணவா்கள் தேர்ச்சி விகிதம், கற்பித்தல், கற்றல், வளங்கள், ஆராய்ச்சி, தொழில்முறை பயிற்சி உள்ளிட்ட 11 அம்சங்களை கொண்டு தரவரிசை பட்டியலை வெளியிடுகிறது.இதன்படி, 2021-ஆம் ஆண்டுக்காக சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வியாழக்கிழமையன்று வெளியிட்டார்.
இதில் பொதுப்பிரிவில் சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஐஐஎஸ்சி பெங்களுரு இரண்டாமிடத்தையும், ஐஐடி மும்பை மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.ஆய்வுப்பிரிவில் முதலிடம் ஐஐஎஸ்சி பெங்களுரு, இரண்டாம் இடத்தில்சென்னை ஐஐடி, மூன்றாம் இடத்தில் ஐஐடி மும்பை உள்ளன.சிறந்த மருத்துவக்கல்லூரி பிரிவில் முதலிடத்தில் தில்லி எய்ம்ஸ், இரண்டாம் இடத்தில் சண்டிகர் PGIMER, மூன்றாம் இடத்தில் வேலூர் சிஎம்சி உள்ளன.சிறந்த கல்லூரி பிரிவில் முதலிடத்தில் தில்லி மிரண்டா ஹவுஸ் கல்லூரி, இரண்டாமிடத்தில் தில்லி எல்.எஸ்.ஆர். பெண்கள் கல்லூரி, மூன்றாமிடத்தில் சென்னை லயோலா கல்லூரி உள்ளன.