புதுதில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் வெள்ளியன்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விவசாயிகள் ஒற்றுமை உணர்வுடன் நடத்திவரும் போராட்டத்தை சீர்குலைக்கவும் திசைதிருப்பவும் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை செய்துகொண்டிருக்கிறது.ஜனவரி 26 அன்று தில்லியில் நடைபெற்ற சம்பவம் குறித்து நியாயமான, சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று 16 எதிர்க்கட்சிகளும் வலியுறுத்துகிறோம்.காவல்துறையினர் பாதிக்கப்பட்டதில் நாங்களும் கவலைப்படுகிறோம். உத்தரப்பிரதேச பாஜக அரசு போராடிய விவசாயிகளை பலவந்தமாக வெளியேற்றுவது என்பது அரசியலமைப்புச்சாசனம் வழங்கியிருக்கக்கூடிய போராடும் உரிமையை மறுப்பதாகும்.உச்சநீதிமன்றத்தில் இந்த அரசு கொடுத்த வாக்குறுதியை மீறுவதாகும்.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் கொந்தளிப்பாக உள்ளது.ஆனால் இச்சட்டங்களை அதிமுக வெளிப்படையாக ஆதரித்துக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேளாண் சட்டங்கள் நல்லது என்று ஒவ்வொரு நாளும் பேசிக்கொண்டிருக்கிறார்.இப்பிரச்சனை வேளாண் சட்டங்களோடு மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல.மாநில உரிமையோடு சம்பந்தப்பட்ட பிரச்சனை, கூட்டாட்சி தத்துவத்தோடும் சம்பந்தப்பட்ட பிரச்சனை. மாநில உரிமையை பறிக்கிற மத்திய அரசின் செயலுக்கு அதிமுக துளி கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் ஆதரித்து பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறது. இதற்கு தமிழக மக்கள் நிச்சயமாக சரியான பதிலடி தருவார்கள். குடியரசுத்தலைவரின் உரை என்பது மத்திய அரசின் நேரடியான செயல்பாட்டு வடிவம்தான். வேளாண் சட்டங்களை எதிர்த்தும், போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் குடியரசுத்தலைவரின் உரையை புறக்கணித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.