2021-22ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை திங்களன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் 8வது பட்ஜெட் இதுவாகும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3-வது முறையாக முழு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்திய வரலாற்றில் முதல் முறையாக டிஜிட்டல் வடிவில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி எதிர்க்கட்சிகளின் முழக்கத்துக்கு இடையே பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.
அவரது உரையில் இடம்பெற்ற பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்:
கொரோனா பரவலை தடுப்பதற்காக ஜி.டி.பி.யில் 13% ஒதுக்கப்பட்டுள்ளது.
********************
நாட்டின் பொருளாதார சரிவுக்கு கொரோனா பாதிப்பே காரணம்; பொருளாதாரத்தை மீட்டெடுக்க தற்போதைய பட்ஜெட் உதவும்.
********************
ரூ.2.87 லட்சம் கோடி செலவில் குடிநீர் வசதியை மேம்படுத்த புதிய திட்டம்; நகர்ப்புற சுகாதாரத்தை மேம்படுத்த ரூ.1.41 லட்சம் கோடியில் புதிய திட்டம்.
********************
கொரோனா தடுப்பூசிக்காக ரூ.35,000 கோடி செலவிடப்படும். தேவைப்பட்டால் கூடுதலாக நிதி ஒதுக்கப்படும்.
********************
நாடு முழுவதும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் 7,400 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன
********************
சுகாதாரத்திற்கான செலவினம் 137 சதவீதம் அதிகரிக்கப் பட்டுள்ளது.
********************
20 ஆண்டுகள் பயன்பாட்டில் வாகனங்களை அளிப்பதற்கான தன்னார்வ அடிப்படையிலான திட்டம் செயல்படுத்தப்படும்.
********************
அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான திட்டம் ரூ.5 லட்சம் கோடியில் செயல்படுத்தப் படும்.
********************
அடுத்த 3 ஆண்டுகளில் 7 இடங்களில் மெகா ஜவுளி பூங்கா அமைக்கப்படும்.
********************
தமிழ்நாட்டில் மதுரை- கொல்லம் இடையே பொருளாதார சாலை அமைக்கப்படும். பொருளாதார சாலைகளுக்கான கட்டுமானப் பணிகள் அடுத்தாண்டு தொடங்கும்.
********************
ரூ.1.03 லட்சம் கோடி மதிப்பீட்டில் தமிழகத்தில் சாலை வசதிகள் மேம்படுத்தப்படும்.
********************
தமிழகத்தில் 3,500 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய சாலைகள் அமைக்கப்படும்.
********************
நகர்ப்புற தூய்மை திட்டத்திற்கு ரூ.1.41 லட்சம் கோடி ஒதுக்கீடு; உற்பத்தித்துறை வளர்ச்சியில் இரட்டை இலக்கை அடைய நடவடிக்கை.
********************
நாட்டில் மாசுபாட்டை தவிர்க்க நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டம் 2.0 அறிமுகம்; நகர்புற பகுதிகளில் ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்படும்
********************
உள்கட்டமைப்பு வசதிக்கு 2021-22 நிதியாண்டில் ரூ.20,000 கோடி ஒதுக்கீடு.
********************
மேலும் பல விமான நிலை யங்களில் பராமரிப்புப் பணி தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும்
********************
நாடு முழுவதும் ஊட்டச்சத்தை மேம்படுத்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்; நாட்டில் 116 மாவட்டங்களில் இரண்டாம் ஊட்டச்சத்து இயக்கம் செயல்படுத்த ப்படும்
********************
சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்திற்கு ரூ.63,246 கோடி ஒதுக்கீடு.
********************
பெருநகரங்களை தொடர்ந்துஇரண்டாம் கட்ட நகரங்களிலும் குறைந்த கட்டணத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும்
********************
சுகாதாரத் துறைக்கு ரூ. 2.23 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு; 17,000 கிராமப்புற மற்றும் 11,000 நகர்ப்புற சுகாதார மையங்கள் அமைக்கப்படும்
********************
கன்னியாகுமரி - கேரளாவின் பல பகுதிகளை இணைக்க நவீன வசதிகளுடன் கூடிய புதிய சாலைகள் அமைக்கப்படும்
********************
ரயில்வே திட்டங்களுக்காக ரூ.1.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
********************
குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டம் மேலும் 100 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும்; உஜ்வாலா திட்டத்தின் கீழ் இதுவரை 8 கோடி பேருக்கு சமையல்எரிவாயு சிலிண்டர் வழங்கப் பட்டுள்ளது
********************
மின் உற்பத்தி மற்றும் விநியோகி க்கும் நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக ரூ.3 லட்சம் கோடியில் புதிய திட்டம்
********************
அரசு வங்கிகளுக்கு கூடுதல் மூலதனமாக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு
********************
வங்கியின் டெபாசிட் கணக்குகளுக்கு காப்பீடு ஒரு லட்சம் ரூபாயிலிருந்து ரூ. 5 லட்சமாக அதிகரிப்பு
********************
காப்பீட்டுத் துறையில் நேரடி அந்நிய முதலீடு 49%-லிருந்து 74%-ஆக அதிகரிப்பு
********************
எல்.ஐ.சி. நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு; பொதுமக்களுக்கு பங்குகளை விற்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் எனவும் அறிவிப்பு: மேலும் 2 பொதுத்துறை வங்கிகளும் தனியார் மயமாக்கப்படும்.
********************
பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பதன் மூலம் ரூ.1.75 லட்சம் கோடி திரட்ட முடிவு: 2022 டிசம்பருக்குள் பங்கு விற்பனை இலக்கை எட்ட நடவடிக்கை
********************
வேளாண் உற்பத்தி பொருளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை தொடரும்; நேரடி கொள்முதல் திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
********************
சென்னை, கொச்சி உள்பட 5 மீன்பிடித் துறைமுகங்கள் மேம்படுத்தப்படும்
********************
நடப்பாண்டில் கோதுமை கொள்முதல் ரூ. 75,060 கோடியாக அதிகரிப்பு
********************
விவசாயிகளுக்கு கடன் வழங்கு வதை அதிகப்படுத்த ரூ.16.5 லட்சம் கோடி ஒதுக்கீடு
********************
நாடு முழுவதும் உள்ள அகல ரயில் பாதைகள் 2023க்குள் மின்மயமாக்கப்படும்
********************
தமிழகத்தில் ஒருங்கிணைந்த பல்நோக்கு கடல் பூங்கா அமைக்கப்படும்
********************
தமிழகத்தில் கடல் பாசியை பதப்படுத்த புதிய வசதி ஏற்படுத்தப்படும்
********************
நாடு முழுவதும் 100 புதிய சைனிக் பள்ளிகள் அமைக்க ப்படும்; 15,000 பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்: 750 ஏகலைவா மாடல் பள்ளிகள் தொடங்கப்படும்
********************
காஷ்மீர் மாநிலம் லே-வில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்
********************
தேசிய மொழிகளில் மொழிபெயர்க்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும்
********************
டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு
********************
மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
********************
நாட்டிலேயே முதன்முறையாக டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்
********************
சிறு, குறு தொழில் வளர்ச்சிக்காக ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கீடு: ரூ.16.5 லட்சம் கோடிக்கு விவசாயக் கடன்கள் தர நடப்பாண்டில் இலக்கு
********************
தனி நபரால் தொடங்கப்படும் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவ நடவடிக்கை; தனி நபர் தலைமை அமைப்பைக் கொண்ட நிறுவனங்களைத் தொடங்க புதிய வழிவகை
********************
ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்க மத்திய அரசு முடிவு
********************
2020-21 ஆண்டிற்கான நிதி பற்றாக்குறை ஜி.டி.பியில் 9.5% ஆக இருக்கும்; 2021-22 ஆண்டிற்கான நிதி பற்றாக்குறை ஜிடிபியில் 6.8% ஆக குறையும்
********************
வங்கி வட்டி, ஓய்வூதியத்தை நம்பியுள்ள 75 வயதிற்கு மேற்பட்டோர் வருமான வரி செலுத்த தேவையில்லை
********************
வங்கி வட்டி, ஓய்வூதியத்தை நம்பியுள்ள 75 வயதிற்கு மேற்பட்டோர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டாம்
********************
சிறிய அளவிலான வருமான வரி சச்சரவுகளைத் தீர்க்க புதிய குழு அமைக்கப்படும்
********************
வெளிநாடுவாழ் இந்தியர்கள் நாடு திரும்பும் போது இரட்டை வரி விதிப்பை தவிர்க்க நடவடிக்கை
********************
வீட்டுக் கடனில் வட்டிக்கான வருமான வரிச் சலுகை மேலும் ஓராண்டு நீட்டிப்பு
********************
பிப்ரவரி மாத செலவுக்காக 80,000 கோடி கடன் வாங்க மத்திய அரசு முடிவு
********************
இதுவரை வரியின்றி இறக்குமதி செய்யப்பட சில உதிரி பாகங்களுக்கு 2.5% இறக்குமதி வரி விதிக்க முடிவு
********************
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செல்போன் உதிரி பாகங்களுக்கு வரிச்சலுகை ரத்து
********************
தங்கத்துக்கான இறக்குமதி வரி 12.5%-லிருந்து மீண்டும் 10%-ஆக குறைப்பு
********************
கடந்த சில மாதங்களாக ஜிஎஸ்டி வசூலில் ‘சாதனை’ நிகழ்த்தப் பட்டு வருகிறது
********************
வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு மாற்றமின்றி நீடிக்கிறது
********************
இந்திய விண்வெளி துறையின் கீழ் புதிய பொதுத்துறை நிறுவனமாக நியூ ஸ்பேஸ் இந்தியா உருவாக்கப்பட உள்ளது
********************
மாநிலங்களுக்கான நிதிப் பங்கீடு 41 சதவிகிதமாக நிர்ணயம்
********************
ஆழ்கடலில் ஆய்வுகள் மேற்கொள்ளவும்,பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்கவும் ஆழ்கடல் ஆய்வு மையம் அமைக்கப்படும்!
********************
2021ல் உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறை 9.5 சதவிகிதமாக இருக்கும்; 2022ல் ஒட்டுமொத்த உள் நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறை 6.8 சதவிகிதமாக இருக்கும்
********************
உலகிலேயே கார்ப்பரேட் வரி இந்தியாவில் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது
********************
ஏலம்... ஏலம்...
எல்ஐசி, பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா, ஐடிபிஐ வங்கி
மத்திய பட்ஜெட் 2021 தாக்கலின் போது, தனியார் முதலீடுகள் குறித்துப் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா துறைமுகக் கழகம், ஐடிபிஐ வங்கி, பவன் ஹன்ஸ் (ஹெலிகாப்டர் நிறுவனம்) கண்டெய்னர் கார்ப்பரேசன் ஆப் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகளை விற்க நடவடிக்கை எடுக்கப்படும். எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகளை விற்கும் திட்டம் அமலாக்கப்படும். 2 பொதுத் துறை வங்கிகளின் பங்குகள் விற்பனை செய்யப்படும். இந்த பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் நிதியைத் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தனியார் – அரசு கூட்டுப் பங்களிப்பு என்பது மிக முக்கியமானதாக இருக்கும். பல துறைகளில் தனியாரின் பங்களிப்பின் மூலம் நாடு பயன்பெற முடியும். அந்த வகையில் நாட்டில் உள்ள துறைமுகங்களில் தனியார் பங்களிப்பு அவசியம்” என்று தெரிவித்தார்.
********************
பெட்ரோல், டீசல் மீது புதிய வரி விதித்த மத்திய அரசு...
நாட்டு மக்கள் அதிர்ச்சி
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 2.5 மற்றும் டீசலுக்கு ரூ. 4 விவசாய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் (ஏஐடிசி) விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்கனவே உயர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்த செஸ் அறிவிப்பு பொதுமக்களுக்கு இன்னும் கடும் சிரமத்தை அளிக்கும் ஒரு அறிவிப்பாகும்.பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதோடு, நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டுகின்றன. சென்னையில் திங்களன்று பெட்ரோல் லிட்டருக்கு 88.82 ரூபாய், டீசல் லிட்டருக்கு 81.71 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெட்ரோலில் லிட்டருக்கு ரூ. 2.5 மற்றும் டீசலுக்கு ரூ. 4 கூடுதல் வரி விதிப்பதால் சாமானியர்கள் புதிய பொருளாதார சிக்கலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மீது வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் (ஏஐடிசி) விதிக்கப்பட்டதன் விளைவாக, அடிப்படை கலால் வரி (பிஇடி) மற்றும் சிறப்பு கூடுதல் கலால் வரி (எஸ்ஏஇடி) விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. ஆனால் இதனால் பெரிய பலன் இருக்காது எனத் தெரிகிறது.
********************
திருக்குறள்களை மேற்கோள்காட்டி பம்மாத்து
நடப்பு நிதியாண்டில் நாட்டின் நிதிப் பற்றாக்குறை 9.50 சதவீதமாக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட் உரையில், தெரிவித்த நிர்மலா சீத்தாராமன், சந்தைகளில் இருந்து பல லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்கிடையில், ‘இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு’ என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.பொருள் வரும் வழிகளை உருவாக்குவது, வந்த பொருள்களைத் தொகுப்பது, தொகுத்தவற்றைப் பிறர் கவராமல் காப்பது, காத்தவற்றை அறம், பொருள், இன்பம் நோக்கிச் செலவிடுவது என்னும் இவற்றில் திறமை மிக்கதே அரசு என்பதே இந்த குறளின் பொருள் ஆகும். திருவள்ளுவரின் குறளுக்கு இணங்கவே மத்திய அரசும் செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் கூறிக் கொண்டார்.மேலும் “பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து” என்ற குறளையும் அவர் மேற்கோள்காட்டினார். நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு” என்பதே இதன் விளக்கமாகும்.
********************
சென்னை - சேலம் 8 வழிச் சாலைக்கான டெண்டர் வரும் நிதியாண்டில் வெளியிடப்படும்
சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டு, வரும் நிதியாண்டிலேயே சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். 8 வழிச்சாலை அமைக்க நிலம் தர மறுத்து விவசாயிகள் போராடி வரும் நிலையில், பணிகள் தொடங்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 2 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் போராட்டங்களை நடத்தி வரும் விவசாயிகள் உச்சநீதிமன்றம் வரை சென்று நிலம் கையகப்படுத்தக்கூடிய பணிக்கு தடை பெற்றனர். பின்னர் உச்சநீதிமன்றம் இந்த திட்டத்திற்கு தடை இல்லை என்று சில மாதங்களுக்கு முன்னர் இறுதி தீர்ப்பை வழங்கியிருந்தது. இந்நிலையில் 2021-22-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.1 லட்சம் கோடிக்கான 3,500 கி.மீ. சாலை பணிகள் தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். மதுரை - கொல்லம் வரையிலான புதிய தொழில் வழித்தடம் அமைக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் அதில் ஒன்றாக சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டம் இருக்கும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கான டெண்டர் வரும் நிதியாண்டில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் உரையுடன் கூடிய இணைப்பு ஆவணத்தில் இதற்கான அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. விவசாயிகளின் விருப்பம் இல்லாமல் இந்த திட்டத்தை செயல்படுத்த முற்படக்கூடாது என்று 8 வழிச்சாலை எதிர்ப்புக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை நடுத்தர மக்கள் ஏமாற்றம்பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனிநபர் வருமான உச்சவரம்பில் எந்த மாற்றமும் திங்களன்று தாக்கல் செய்யப்பட்ட 2021-22-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. தற்போதைய நடைமுறைப்படி, ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை 5% வரியும், ரூ.5,00,001 முதல் ரூ.7,50,000 வரை 10% வரியும், ரூ.7,50,001 முதல் ரூ.10,00,000 வரை 15% வரியும், ரூ.10,00,001 முதல் ரூ.12,50,000 வரையில் 20% வரியும் வருமான வரியாக வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
********************
‘அதானி, அதானி’ என முழக்கமிட்ட எதிர்க்கட்சிகள்
பட்ஜெட் 2021 தாக்கலின் போது, தனியார் முதலீடுகள் குறித்துப் பேசிய நிர்மலா சீதாராமன், “நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தனியார் – அரசு கூட்டுப் பங்களிப்பு என்பது மிக முக்கியமானதாக இருக்கும். பல துறைகளில் தனியாரின் பங்களிப்பின் மூலம் நாடு பயன்பெற முடியும். அந்த வகையில் நாட்டில் உள்ள துறைமுகங்களில் தனியார் பங்களிப்பு அவசியம்” என்று தெரிவித்தார். அப்போது நிதி அமைச்சர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்,‘அதானி, அதானி’ என முழக்கமிட்டார்கள்.
********************
75 வயதிற்கு மேற்பட்டோருக்கு வருமான வரியில் விலக்கு, வீட்டு க்கடன் வட்டியில் வரிச்சலுகை நீட்டிப்பு
வங்கி வட்டி, ஓய்வூதியத்தை நம்பியுள்ள 75 வயதிற்கு மேற்பட்டோர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவேண்டாம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.மத்திய பட்ஜெட்டில், 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு; வங்கி வட்டி, ஓய்வூதியத்தை நம்பி உள்ளவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என்றார். மேலும், வீட்டுக்கடனில் ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்ட வீட்டுக்கடன் வட்டிச்சலுகை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது; குறைந்த விலையில் வீடு வாங்குவோருக்கான வட்டி வரிச்சலுகை மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது; இந்த சலுகையின்படி வீட்டுக்கடன் வட்டி ரூபாய் 1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு பெற முடியும்; வாடகைக்காக வீடுகளை கட்டும் நிறுவனங்களுக்கு சலுகை வழங்க திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த விலை வீடு கட்டும் திட்டங்களுக்கும், குறைந்த விலை வீடுகளை வாங்குபவர்களுக்கும் 2022-ம் ஆண்டு வரை வரிச்சலுகை வழங்கப்படும் என்றும் கூறினார்.