india

img

அசாம் - மிசோரம் மக்களை மோதவிட்ட பாஜக முதல்வர்கள்.... பிரித்தாளும் அரசியலுக்கு 5 காவலர்கள் பலியான துயரம்....

புதுதில்லி:
அசாம் - மிசோரம் மாநிலங்களுக்கு இடையிலான எல்லைப் பிரச்சனையில், இருமாநில காவல்துறையினர் இடையே நடந்த மோதலில், அசாமைச் சேர்ந்த 5 போலீசார் பலியாகியுள்ளனர்.அசாம் மாநிலத்தில் லுஷாய் ஹில்ஸ் என்னும் பெயரில் மாவட்டமாக இருந்து அதன் பின்னர் தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டதுதான் மிசோரம். அசாம் மாநிலத்துடன் சுமார் 165 கி.மீ. எல்லைப் பகுதியை மிசோரம் பகிர்ந்து கொள்கிறது. மிசோரமின் ஐஸ்வால், கோலாசிப், மமித் ஆகிய 3 மாவட்டங்கள் இதில் அடங்கும். மறுபுறத்தில் இந்த எல்லையில் அசாம் மாநிலத்தின் கச்சார், கரிம் கஞ்ச் மற்றும் ஹைலா காந்தி ஆகிய மாவட்டங்கள் வருகின்றன.

இந்நிலையில்தான் கடந்த திங்கட்கிழமையன்று இரு மாநில எல்லையில் உள்ள காவல்துறையினருக்கு இடையேமோதல் நிகழ்ந்துள்ளது. அசாம் காவல் துறையினர் கையெறி குண்டுகளை வீசியும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் தாக்குதல் நடத்தியதாகவும், பதிலுக்கு மிசோரம் காவல்துறையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மோதலில் அசாம் காவல்துறையைச் சேர்ந்த 5 காவலர்கள் உயிர் இழந்துள்ளனர்.அசாம் மற்றும் மிசோரம் மாநிலங்கள் இடையிலான எல்லைப் பிரச்சனை இப்போது ஆரம்பித்தது இல்லைதான். 1972-இல் மிசோரம் தனிமாநிலம் பிரிக்கப்பட்டது முதலே இருக்கிறது. இன்னும் குறிப்பாகச் சொன்னால் லுஷாய் மலைகளை கச்சார் சமவெளியில் இருந்து பிரித்ததாக கூறப்படும்1875-ஆம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் ஆட்சிக் காலம் துவங்கி 136 ஆண்டுகளாக தொடரும் பிரச்சனைதான். இப்போது வரை அதற்கு தீர்வு காணப்படவில்லை.

ஆனால், சமீப காலங்களில் அசாம், மிசோரம் மாநிலங்களில் ஆட்சிக்கு வருவதற்காக பாஜக கிளப்பிவிட்ட பிரதேசவாதமே தற்போது எல்லை மோதல் தீவிரம் அடைந்திருப்பதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அசாம், மிசோரம் ஆகிய 2 மாநிலங்களிலுமே பாஜக ஆட்சிதான் நடக்கிறது. பாஜக தலைமை நினைத்தால் எல்லைப் பிரச்சனைக்கு சுமூகத்தீர்வு காண முடியும். ஆனால், அது நடக்கவில்லை. மாறாக, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் மற்றும் மிசோரம் முதல்வர் ஜொராம் தங்காவும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி குற்றம் சாட்டி வருகின்றனர்.

“ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு கச்சார் மாவட்டத்தில் உள்ள வைரங்கதே ஆட்டோ ரிக்‌ஷா ஸ்டாண்ட் அருகே சிஆர்பிஎப் புறக்காவல் நிலையத்தில், அசாம் காவல் துறையினர் 200க்கும் மேற்பட்டோர் நுழைந்து மிசோரம் காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர்” என்பதுமிசோரம் முதல்வரின் கூற்று. அதேநேரம் “மிசோரம் அரசாங்கம், அத்துமீறி,எல்லை தாண்டி, லைலாப்பூர் மாவட்டத் தில், அதாவது அசாம் பகுதியில் சாலைகட்டுமானப் பணிகளைத் தொடங்கியதால்தான் இந்தப் பிரச்சனை தொடங்கியது” என்பது அசாம் முதல்வரின் கருத்து. மிசோரம் காவல்துறை ஆதரவுடன் மிசோரம் பொது மக்கள், அசாம் காவல்துறையினர் மீது கல்லெறி தாக்குதல் நடத்தினார்கள் என்பதும் அவரது குற்றச்சாட்டு.இரண்டு பேருமே பாஜக முதல்வர் கள்தான். இதில் யார் சொல்வது உண்மை? பாஜகவின் தேசியத் தலைமைதான் விளக்க வேண்டும்.

துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு ஒருநாள்முன்னதாகத்தான் இருமாநில முதல் வர்கள் உள்ளிட்ட 7 முதல்வர்களுடன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் மறுநாளே இரு மாநில காவல்துறைக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.அசாம் பல்கலைக்கழக இணைப் பேராசிரியரான ஜாய்தீப் பிஸ்வாஸ், இந்த சம்பவம் தொடர்பாக கூறுகையில், “நடந்த மோதல்கள் அரசியல்மயமாக்கலின் விளைவுதான். ஒவ்வொரு சர்ச்சையின் பின்னரும் பிராந்திய அடையாளத்தின் பேச்சு உரக்கக் கேட்கத் தொடங்குகிறது” என்று தெரிவித்துள்ளார்.மிசோரம் மாநிலத்துடன் மட்டுமல்ல, மேகாலயா, அருணாச்சல பிரதேசம் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களுடனும் அசாமிற்கு எல்லை மோதல்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.