india

img

ஜிஎஸ்டி வரி விதிப்பு குளறுபடிகளுக்கு எதிராக பாரத் பந்த்... வணிகச் சந்தைகளை இழுத்து மூடிய வர்த்தகர்கள்....

புதுதில்லி:
பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, அதிகப்படியான ஜிஎஸ்டி வரி விகிதம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வணிகச் சந்தைகளை (Commercial Market) மூடி போராட்டம் நடத்தப் போவதாக  அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு (Confederation of All India Traders -CAIT) ஏற்கெனவே அறிவித்திருந்தது.

அதன்படி, வெள்ளிக்கிழமையன்று வணிகர்கள் கூட்டமைப்பின் சார்பில் நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் வர்த்தகர்களும், சாமானிய மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் புதிய இ-வே பில் முறை, ஜிஎஸ்டி வரி ஆகியவையும் வர்த்தகர்களுக்கு சுமையாக மாறியுள்ளது. 

இந்நிலையில், அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல், விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய இ-வே மசோதா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிகளை மறுஆய்வு செய்ய வேண்டும். வெளிநாட்டு இ-காமர்ஸ் நிறுவனங்களின் அத்து மீறலைத் தடுக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு (CAIT) நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. 

அதன்படி வெள்ளிக்கிழமையன்று (பிப்ரவரி 26) 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிக சங்கங்கள், தங்களின் வணிகச் சந்தைகளை இழுத்து மூடி போராட்டம் நடத்தின.அகில இந்திய போக்குவரத்து நலக் கூட்டமைப்பும் (All India Transport Welfare Association - AITWA), பாம்பே சரக்கு போக்குவரத்து சங்கம், எஸ்ஐஎம்டிஏ (SIMTA), கேஜிடிஏ (KGTA), பரோடா சரக்கு போக்குவரத்து சங்கம், எச்ஜிடிஏ (HGTA), சிஜிடிஏ (CGTA), கார் கேரியர் சங்கம், பூனா போக்குவரத்து சங்கம் என பல்வேறு போக்குவரத்து சங்கங்களும் போராட்டத்தில் கலந்து கொண்டன.சார்டர்ட்டு அக்கவுண்ட்கள், வரி வழக்கறிஞர்கள் சங்கம் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தன.

போராட்டத்தால், சாலைப் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டன. தனியார் மற்றும் சரக்கு வாகனங்கள் இயங்கவில்லை. பல்வேறு போக்குவரத்து நிறுவனங்களும் தங்களது வாகனங்களை இயக்கவில்லை. முன்பதிவு செய்யக்கூடிய, பில் மூலம் கொண்டு செல்லப்படும் சரக்குப் போக்குவரத்து முழுவதுமாக பாதிக்கப்பட்டன.இதுதவிர, வெள்ளிக்கிழமை முழுவதும் வர்த்தகர்கள் ஜிஎஸ்டி இணையதளத்தில் பதிவு செய்யாமல் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பெண் தொழில் முனைவோர்கள், சிறு தொழிற்சாலைகள் உள்ளிட்டவையும் போராட்டத்தில் பங்கேற்றன.