புதுதில்லி:
விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லி மாநில எல்லையில் விவசாயிகளின் போராட்டம் 40 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.
பஞ்சாப்பின் பத்தேஹாபாத் சாஹேப்பைச் சேர்ந்த அம்ரேந்தர் சிங் என்ற விவசாயி போராட்டத்தில் பங்கேற்றிருந்தார். போராட்டத்திற்கு இடையே மேடையின் பின்பகுதிக்குச் சென்ற அம்ரேந்தர் சிங், திடீரென விஷம் குடித்தார். இதையறிந்து அதிர்ச்சியடைந்த சக விவசாயிகள், அம்ரேந்தரை அருகிலுள்ள சோனிபத்தின் பேமஸ் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அம்ரேந்தர் உயிரிழந்தார். இறப்பதற்குமுன் அவர் உடனிருந்த விவசாயிகளிடம், மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்கவில்லை என்று வேதனையுடனும் கவலையுடனும் பேசியுள்ளார். இந்த சம்பவம் குறித்து சோனிபத் காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.