புதுதில்லி:
‘ஏர் இந்தியா’வின் கடன்களை அடைக்கிறோம் என்ற பெயரில், 2015 முதல், அந்த நிறுவனத்தின் 115 சொத்துக்களை ரூ. 738 கோடிக்கு மோடி அரசுவிற்பனை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றுக்கு, சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் வி.கே. சிங் எழுத்துப்பூர்வ பதில் ஒன்றை அளித்துள்ளார். அதில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.“2019-ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி சுமார் ரூ. 60 ஆயிரம் கோடி அளவிற்கு ‘ஏர் இந்தியா’ கடனில் உள்ளது. இதனால், ‘ஏர் இந்தியா’-வின் கடன்களை ஈடுசெய்ய அதன் அசையா சொத்துக்கள் விற்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு விற்பனைக்காக, 111 சொத்துக்களை ‘ஏர் இந்தியா’ அடையாளம் கண்டுள்ளது; அவற்றில் 106 சொத்துக்கள் இந்தியாவில் உள்ளன, மீதமுள்ள ஐந்து சொத்துக்கள் வெளிநாடுகளில் உள்ளன. 111 சொத்துக்கள் 211 பிரிவுகளாக உள்ளன. அவை பணமாக்கத் தக்க நிலையில் உள்ளன.
2015-ஆம் ஆண்டு முதல் 2021 ஜூலை 12-ஆம் தேதி வரை ‘ஏர் இந்தியா’வின் 115 யூனிட்களை விற்றதன் மூலம் ரூ. 738 கோடி திரட்டப்பட்டுள்ளது. ஏஐஎஸ்ஏஎம் (Air India Specific Alternative Mechanism - AISAM) அமைப்பு தற்போது ஏர் இந்தியாவை விற்பனை செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் ‘ஏர் இந்தியா’ சொத்துக்களை வாங்கும் தகுதிவாய்ந்த ஆர்வமுள்ள ஏலதாரர்களுக்கு அந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது” என்று வி.கே. சிங் குறிப்பிட்டுள்ளார்.