ஒரு காலத்தில் நரேந்திரா என்ற மன்னர் ஒருவர் இருந்தார். அவர் ஹிந்து மத நம்பிக்கையின் புனித ஆலயமாக இருந்து வந்த மிகப்பெரியதொரு சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்து வந்தார். அவருடைய பரம்பரை மற்றும் அந்த மாபெரும் ஆலயத்தின் பாதுகாவலர் என்பது போன்ற காரணங்களினால் தன்னுடைய குடிமக்களால் அவர் தெய்வீக ஆளுமை கொண்டவராகவே கருதப்பட்டு வந்தார். பரம்பரை நிலைப்பாட்டின் காரணமாக புனிதமான இடம் வழங்கப்பட்டிருந்த போதிலும், அதிருப்தியுடனே அவர் இருந்து வந்தார். தனக்கு முன்பாக அந்த சிம்மாசனத்தில் இருந்தவர்களிடமிருந்தும், தனக்குப் பின்னால் அந்த அரியணையை ஆக்கிரமிக்கப் போகிறவர்களிடமிருந்தும் தன்னை தனித்துக் காட்டிக் கொள்ளவே அவர் விரும்பினார். அதற்காகவே தனக்கும் தனது குடிமக்களுக்கும் என்று புதிய தலைநகரைக் கட்டிய வீண்பெருமை கொண்ட அந்த மன்னர், அந்த நகரை நரேந்திர நகர் என்றே அழைக்கவும் செய்தார்.
மேலே நான் சொன்ன கதை ஏதோ புராணமோ அல்லது புராதனமோ அல்ல. முற்றிலும் அது உண்மையானது. நான் விவரித்திருக்கும் அந்த நிகழ்வுகள் ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக நிகழ்ந்தவை. அந்த மன்னர் தேரி கர்வால் மாநிலத்தைச் சேர்ந்த நரேந்திர ஷா ஆவார். பத்ரிநாத் கோவிலை தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் அவருடைய குடும்பம் வைத்துக் கொண்டிருந்தது. தன்னுடைய பெயரையே வைத்துக் கொண்ட அந்தப் புதிய தலைநகரின் கட்டுமானம் 1919ஆம் ஆண்டு நிறைவடைந்தது.
கர்வால் அடிவாரத்தில் வளர்ந்து வந்த சிறுவனாக அடிக்கடி நான் அந்த நரேந்திர நகருக்குச் சென்றிருக்கிறேன். அகமதாபாத்தில் உள்ள மிகப் பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு நரேந்திர மோடியின் பெயரிடப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்ட போது அந்த நரேந்திர நகரின் நினைவுகளும், அதன் தோற்றத்திற்கான கதையும் எனக்குள் மீண்டு எழுந்தன.
அந்தப் பெயர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதற்கான முழு விவரங்கள் ஒருபோதும் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படாது. ‘தன்னுடைய பெயரைக் கொண்டு கிரிக்கெட் மைதானத்தின் பெயரை நரேந்திர மோடி மாற்றியிருக்கிறார்’ என்ற தலைப்பிலான கட்டுரை பிரிட்டிஷ் செய்தித்தாளில் வெளியிடப்பட்டிருந்தது. மைதானத்தின் பெயரை மாற்றுகின்ற அந்த யோசனை இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தில் வலுவாக தன்னுடைய குடும்பத்தின் செல்வாக்கைக் கொண்டவராக இருந்து வருகின்ற, தனது தலைவரைப் புகழ்ந்து பேசவும், தன்னுடைய குடும்பத்தைப் பற்றிய விமர்சனங்களை மௌனமாக்கிடவும் முயன்று வருகின்ற குஜராத்தி அரசியல்வாதியிடமிருந்தே முதலில் வந்திருக்கலாம்.
இந்த மறுபெயரிடுதலை அனுமதிப்பது, ஊக்குவிப்பது அல்லது ஆரம்பித்து வைப்பது என்பது ஜனநாயக நாடாக அறியப்படுகின்ற மிகப் பெரிய நாட்டின் பிரதமரிடம் இருக்கின்ற அந்த வெற்றுப் பெருமை, ட்விட்டரில் இருப்பவர்கள் சுட்டிக் காட்டியிருப்பதைப் போல 1930களில் ஸ்டுட்கார்ட்டில் இருந்த கால்பந்து மைதானத்தின் பெயரை தனது பெயரில் இருக்க அனுமதித்த, ஊக்குவித்த அல்லது தொடங்கி வைத்த அடால்ப் ஹிட்லரையே உடனடியாக நமது நினைவிற்கு கொண்டு வருகிறது. ஹிட்லரின் சக சர்வாதிகாரிகளான பெனிட்டோ முசோலினி, சதாம் ஹுசைன், கிம் இல்-சங் ஆகியோரும் தாங்கள் ஆட்சியில் இருந்தபோது விளையாட்டு அரங்குகளுக்கு தங்களுடைய பெயரைச் சூட்டிக் கொண்டிருந்தனர் என்பதை கட்டுரையாளர் ஒருவர் தோண்டியெடுத்து தி வயர் இதழில் எழுதப்பட்டிருந்த கட்டுரையில் சுட்டிக் காட்டியிருந்தார்.
மாமன்னர்களைப் போல ஆளுகின்ற…
அரசியல்வாதிகள் எவரொருவரும் தங்களைக் குறித்து மிக உயர்ந்த கருத்தையே கொண்டுள்ளனர். அவர்களுடைய தொழில் அவ்வாறு இருப்பதைக் கோருகின்றது என்றாலும், ஒரு குடியரசு நாட்டின் ஜனநாயக நடைமுறையின் முக்கியத்துவத்தை அரசியல்வாதிகள் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் தாங்கள் வகித்து வருகின்ற பதவியைக் காட்டிலும் தங்களை ஒருபோதும் பெரியவர்களாக மாற்றிக் காட்டிக் கொள்வதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. மன்னராக இருப்பவர் தனது ராஜ்ஜியத்திற்கு இணையாக தன்னை ஒப்பிட்டுக் கொள்ள முடியும் என்ற போதிலும், ஜனநாயகரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் (அல்லது குடியரசுத் தலைவர்) ஒருபோதும் தன்னை நாட்டிற்கு இணையானவராகக் கருதிக் கொள்ள முடியாது. இந்த பாடத்தை உலகின் பழமையான குடியரசு நாடுகளின் தலைவர்கள் கவனிக்கவில்லை என்பது பரிதாபம்தான்! பிரான்சுடன் தன்னைச் சமன் செய்து கொள்வது அதிபர் சார்லஸ் டி கோலுக்கு இயல்பாகவே வந்தது. ஜனநாயக அரசியல்வாதிகளைப் போல எவ்விதக் கட்டுப்பாடுகளையும் கொண்டிராமல், தனது சொந்த நாட்டையே மாமன்னர்களைப் போல ஆட்சி செய்த தலைவர்களைக் குறிப்பதற்காக ‘ஏகாதிபத்திய அதிபர்’ என்ற வார்த்தையை அமெரிக்க வரலாற்றாசிரியர் ஆர்தர் ஷெல்சிங்கர் ஜூனியர் உருவாக்கினார்.
நமது குடியரசின் வரலாற்றிலும் முக்கிய பிரதமர்களாக ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, நரேந்திர மோடி மூவரும் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் தங்களுடைய கட்சி, அரசாங்கத்தில் உள்ள சக மனிதர்களுக்கு மேலாக உயர்ந்து நின்றிருக்கிறார்கள். நேரு, இந்திரா காந்தி இருவருக்குமே அவர்கள் பதவியில் இருந்த போது நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்ட நிலையில் மோடி அடுத்து என்ன செய்வார்?
சர்தார் படேல் கிரிக்கெட் மைதானம் நரேந்திர மோடியின் பெயரைக் கொண்டு மறுபெயரிடப்பட்டபோது விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டவர் குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்த் என்பது சற்றே புதிராகவும், கொஞ்சம் ஆச்சரியமாகவும் இருந்தது. ஒருவேளை மோடிக்கு பாரத ரத்னா விருதை 2022 அல்லது 2023ஆம் ஆண்டில் கோவிந்த் வழங்குவதற்கான ஒத்திகையாக அந்த நிகழ்வு இருக்கிறதா?
இரண்டு காரணங்களுக்காக அதற்கான சாத்தியமில்லை என்றே நான் நினைக்கிறேன். முதலாவதாக தனது முன்னோடிகளிடமிருந்து திட்டமிட்டு தன்னைத் தூர விலக்கி வைத்துக் கொள்பவராகவே மோடி இருக்கிறார். எனவே இந்த விஷயத்திலும் அவர் அவ்வாறே செய்வார். இரண்டாவதாக அவர் தனக்கென்று மிகப் பெரிய லட்சியங்களைக் கொண்டவராக இருக்கிறார். குடியரசின் மரியாதை தங்களுக்கு வழங்கப்பட நேருவும், இந்திரா காந்தியும் அனுமதித்தனர் அல்லது ஊக்குவித்தனர். ஆனால் மோடியோ எப்போதும் மிகவும் அற்புதமான ஒன்றையே செய்பவர் என்பதால் மிகப்பெரிய நினைவுச் சின்னத்தை அதிக செலவில் உருவாக்கும் வகையில் அவர் இந்தியாவின் தலைநகரையே மாற்றியமைக்கப் போகிறார்.
2014 ஜூன் மாதம் தான் பிரதமராக பதவியேற்ற சிறிது நேரத்திலேயே 1,200 ஆண்டுகால அடிமைத்தனத்திலிருந்து (பாரா சௌ சால் கி குலாமி) நாட்டை விடுவிப்பதே தனது நோக்கம் என்று மக்களவையில் நரேந்திர மோடி கூறியதை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளலாம். அந்த நேரத்தில் இளம் எழுத்தாளர் ஒருவர் என்னிடம் ‘இந்த அறிக்கையும், அவருடைய ஒட்டுமொத்த உரையும் மோடியின் அரசியல், தனிப்பட்ட ஆர்வங்களை ஆழமாக வெளிப்படுத்துவதாகவே இருக்கின்றன’ என்று சொன்னார்.
ஹிந்துக்கள் நீண்ட காலமாக அடிபணிந்து கிடந்தவர்கள் அல்லது வெளிநாட்டினரால் ஆட்சி செய்யப்பட்டவர்கள் என்று நினைக்கின்ற மோடி இப்போது ஹிந்துக்களுடைய சுய மரியாதையையும் கண்ணியத்தையும் மீட்டுத் தருவதற்காக தான் வந்திருப்பதாக கருதுகிறார். தன்னிடம் இருப்பதைப் போலவே இந்த பிரச்சனையை வடிவமைப்பதன் மூலம் தானே இந்த நாட்டை வெற்றிகரமாக ஒன்றிணைத்த முதல் ஹிந்து ஆட்சியாளர் என்பதை மோடி நிறுவிக் கொள்வதாகவும் என்னுடைய நண்பர் கூறினார்.
சிவாஜி, பிருத்விராஜ் குறித்த அனைத்து நாட்டுப்புறக் கதைகளும் தங்களிடம் இருந்த துணிச்சலால் அவர்கள் இந்த துணைக்கண்டத்தின் சிறிய பகுதியை மட்டுமே தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் வெற்றி பெற்றனர் என்று தெரிவிப்பவையாகவே இருக்கின்றன. அவர்கள் இருவரும் நிலம் சார்ந்து அல்லது அரசியல் அடிப்படையில் அசோகர் (பௌத்தம்) அல்லது முகலாயர்கள் (இஸ்லாம்) அல்லது பிரிட்டிஷ்காரர்களைப் (கிறிஸ்தவம்) போன்று மிகப் பெரிய அளவிலான வெற்றியை அடைந்திருக்கவில்லை. சிவாஜி, பிருத்விராஜ் ஆகியோரால் செய்ய முடியாததை நிறைவேற்றிக் காட்டுவதன் மூலம் ஹிந்துக்களை மீட்டெடுக்க பிரதமர் மோடி நினைக்கிறார்.
புதிய தலைநகரங்களை நிர்மாணித்தல்
மன்னர்கள் பெரும்பாலும் தங்களுடைய முக்கியத்துவத்தை, மேன்மையை அறிவித்துக் கொள்ளவும், தங்களுடைய இறையாண்மையை உறுதிப்படுத்திக் கொள்ளவும் தங்களுக்கென்று புதிய தலைநகரங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். கர்வாலில் புதிய தலைநகரைக் கட்டியெழுப்பிய போது, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் இருந்த பல மன்னர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றியவராகவே நரேந்திர ஷா இருந்தார். உண்மையில், நரேந்திர நகரைக் கட்ட நரேந்திர ஷா தீர்மானிப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாகவே, அவர் கடமைப்பட்டுக் கிடந்த பேரரசரான இங்கிலாந்தின் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் பிரிட்டிஷ் இந்தியாவிற்கு புதியதொரு தலைநகரம் தேவைப்படுவதாக அறிவித்தார்.
அரசாங்கத்தின் பழைய தலைநகரான கல்கத்தா இனி பயன்படாது; துணைக்கண்டத்தில் ஏகாதிபத்திய அதிகாரத்தின் மையம் இனிமேல் வடக்கு நோக்கி மாறும் என்று அறிவித்த அவர் பழைய நகரமான தில்லியின் தெற்கே இருந்த கிராமங்களிலிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளின் சுய உணர்வுக்கு ஏற்றவாறு புதிய நகரத்தைக் கட்டியெழுப்பினார்.
தலைநகரை மாற்றுவது என்று பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் முடிவு செய்வதற்கு சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பாக முகலாயப் பேரரசும் அதுபோன்ற செயலைச் செய்து காட்டியிருந்தது. பாபரிலிருந்து தொடங்கிய வம்சத்தின் ஐந்தாவது ஆட்சியாளராக இருந்த ஷாஜகான், தனது பேரரசின் தலைநகரை ஆக்ராவிலிருந்து மாற்றுவது என்று முடிவெடுத்து தில்லியைத் தேர்வு செய்து கொண்டார். தில்லியில் தன்னுடைய மேற்பார்வையில் அடுத்தடுத்து அழகிய கட்டிடங்களின் கட்டுமானத்தை ஏற்படுத்தினார். அவற்றில் பல இன்றைக்கும் இருந்து வருகின்றன. அனைத்து வேலைகளும் முடிந்ததும் முழுமையாகத் திருப்தி அடைந்த அவர், அந்த நகரத்திற்கு தன்னுடைய பெயரை இட்டுக் கொண்ட போது, அந்த நகரம் ஷாஜகானாபாத் என்று அழைக்கப்படத் தயாராக இருந்தது.
பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டு தில்லி குறித்து ‘தி கிங் அண்ட் தி பீப்பிள்’ என்ற அற்புதமான வரலாற்று நூலை எழுதிய அபிஷேக் கெய்கர் ‘கட்டிடக்கலையில் இறையாண்மையின் உரையாடலை ஊக்குவிப்பதில் மற்ற முகலாய பேரரசர்களைக் காட்டிலும் ஷாஜகான் மிகவும் திறமையானவராக இருந்தார். வேறொரு உலகத்தவராக, தேவதூதராக தனது குடிமக்களுக்கு முன்பாக தான் தோன்றுவதை ஷாஜகான் உறுதி செய்து கொண்டிருந்தார். அரண்மனையின் பொன்முலாமிட்ட வளைந்த கூரையின் கீழே இருந்த சாளரங்களின் வழி சக்கரவர்த்தியாக தான் தோன்றுகின்ற வேளையில் காலைச் சூரியனின் ஒளி தன்னுடைய உருவத்தின் மீது விழுகின்ற போது, அது உருவப்படங்களில் தன்னுடைய உருவத்தைச் சுற்றிலும் இருக்கின்ற பளபளக்கும் ஒளிவட்டத்தை உருவாக்கிடும் வகையில் இருப்பதற்கான பெருமுயற்சிகளை மிகுந்த சிரமங்களுக்கிடையே அவர் எடுத்துக் கொண்டிருந்தார்’ என்று எழுதியிருக்கிறார்.
ஷாஜகானைப் போலவே நரேந்திர மோடியும் தன்னுடைய உடை, முகத்தோற்றம் மீது அசாதாரணமான கவனத்தைச் செலுத்துகிறார். மோடியின் உடைகள், அவரது தோரணை, புகைப்படங்கள் எடுக்கப்படும் பின்னணி என்று அனைத்தும் அப்போதைய சந்தர்ப்பத்துடன் மிகச் சரியாக இணைக்கப்படுகின்றன. தான் வைத்திருக்கின்ற தொழில்நுட்பத்தில் ஷாஜகானை விட அவர் மிகுந்த அதிர்ஷ்டசாலியாகவும் இருக்கிறார். இடைக்காலப் பேரரசர்களுக்கு மக்களிடம் வியத்தகு தாக்கங்களை ஏற்படுத்துவதற்காக நேரில் தோன்ற வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால் பின்நவீனத்துவ எதேச்சதிகாரி ஒருவருக்கோ வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள்கள், வலைத்தளங்கள், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் என்று இன்னும் பிறவற்றைப் பயன்படுத்தி தான் விரும்புகின்ற படத்தை உயிருடன் இருக்கின்ற ஒவ்வொரு இந்தியரிடமும் வழங்கிட முடிகிறது.
தன்னுடைய அரசியல் சகாக்கள் மற்றும் அரசியல் எதிரிகளை நடத்துகின்ற விதம், தன்னை பொதுவில் முன்வைத்துக் கொள்கின்ற விதம், பாராளுமன்ற விவாதங்களைப் புறக்கணிப்பது, மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றைக்கூட நடத்த மறுத்தது (அது அவமதிப்பு செய்யப்படுவோம் என்பதால் அல்லது கோழைத்தனத்தால் நடந்ததாக இருக்கலாம்) என்று பிரதமராக நரேந்திர மோடியின் நடத்தை முழுக்க அதிகார மனப்பான்மை கொண்டதாகவே இருந்து வருகிறது. மோடியின் வெளிப்பாடுகள் அனைத்தும் முன்பிருந்த பேரரசர்களைப் போல ஒரு வழியிலானவையாகவே இருக்கின்றன. இருபத்தியோராம் நூற்றாண்டில் அவர் நடத்தி வருகின்ற மன் கி பாத் உண்மையில் முகலாய ஃபிர்மனை ஒத்ததாகவே இருக்கின்றது. அவர்களைப் போலவே அரசியல் அதிகாரத்தின் மையத்தை மறுவடிவமைப்பதன் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இவரும் முயன்று வருகிறார். அகமதாபாத்தில் உள்ள கிரிக்கெட் அரங்கமோ அல்லது பாரத ரத்னாவோ கூட நிச்சயம் மோடிக்குப் போதுமானவையாக இருக்காது.
பிரிட்டிஷ், முகலாய ஆட்சி குறித்து கண்டனம் செய்து வந்த தன்னுடைய அனைத்து செயல்களுக்கும் மாறாக பிரிட்டிஷ், முகலாயர்கள் தில்லியில் என்ன செய்தார்களோ அதையே நரேந்திர மோடி தனது நிரந்தர மரபுரிமை என்று பிரதிபலிக்க முற்படுவது முரணாகவே அமைந்திருக்கிறது. முந்நூறு அல்லது நானூறு ஆண்டுகளுக்குப் பிறகு ஹிந்துத்துவப் பேரரசின் எதிர்காலக் குடிமக்கள் அவர் எழுப்பியிருக்கும் கட்டிடங்களைப் பெருமிதத்துடன் பார்ப்பார்கள் என்றாலும் மோடிக்கு முன்னதாக முந்தைய சக்கரவர்த்திகள் கட்டிய கட்டடங்களைக் அவர்கள் கேலி செய்வார்கள் என்பது அவரிடம் உள்ள பெரும் நம்பிக்கையாக இருக்கலாம்.
ஆனால் அந்த நம்பிக்கையை அடைவதற்கான வாய்ப்பு இருக்கவில்லை. இந்த ஏகாதிபத்திய இறுமாப்பின் புதிய முயற்சியால் கட்டப்படுகின்ற ஒரு கட்டிடமாவது செங்கோட்டை அல்லது ஜும்மா மசூதி, நார்த், சௌத் பிளாக்குகள் போன்ற அழகான கட்டிடமாக இருப்பதற்கான சாத்தியமிருக்கவில்லை என்பதை தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தக் கட்டிடக் கலைஞரைப் பற்றி, அவருடைய கடந்தகால கட்டுமானங்களைப் பற்றி அறிந்தவர்கள் நன்கு உணர்ந்தே இருக்கின்றனர்.
இறுதியாக ஒரு சிந்தனை. தற்போது புதுதில்லியை மறுவடிவமைக்கும் திட்டம் ‘சென்ட்ரல் விஸ்டா ப்ராஜெக்ட்’ என்றழைக்கப்படுகிறது. இந்த காலனித்துவ பெயர் நினைவில் நீடித்து நிற்கக்கூடிய மிகப் பெரிய கட்டிடங்களைக் கொண்ட புதிய வளாகம் வரும் போது, நிச்சயமாக ஆத்மநிர்பார் மாற்றத்திற்கு வழிவகுத்து கொடுக்க வேண்டியிருக்கும். ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக அந்த மலை ராஜ்ஜியத்தை ஆண்ட வீண்பெருமை கொண்ட மன்னரால் நரேந்திர நகர் என்ற பெயர் ஏற்கனவே எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டது. எனவே ஒருவேளை அப்போது சூட்டப்படும் பெயர் நரேந்திர மகாநகர் என்பதாக இருக்கலாம். அல்லது மோடியாபாத் என்றுகூட இருக்கலாம்.
நன்றி:ஸ்க்ரோல் இணைய இதழ்
தமிழில்: தா.சந்திரகுரு