india

img

கைதிகள் ஜாமீனில் அல்லது பரோலில் விடுவிக்கப்பட வேண்டும் - உச்சநீதிமன்றம் அமைத்திட்ட உயர்மட்டக்குழு பரிந்துரை

புதுதில்லி, மே 7-

கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிக்கொண்டிருப்பதைத் தடுப்பதற்காக, சிறைகளில் நெரிசலைக் குறைத்திட, விசாரணைக் கைதிகள்/தண்டனைக் கைதிகள் பிணையில் அல்லது விடுப்பில் (பரோலில்) விடுவிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அமைத்திட்ட உயர்மட்டக்குழு பரிந்துரைத்திருக்கிறது.

தில்லிச் சிறைகளில் அதிகபட்சம் 10,026 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இப்போது 19,679 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக சிறைத்துறைத் தலைவர், உச்சநீதிமன்றம் அமைத்திட்ட உயர்மட்டக் குழுவிற்குத் தெரிவித்திருக்கிறார்.

நீதியரசர் விபின் சங்வி தலைமையிலான உயர்மட்டக்குழு, சிறையிலிருப்பவர்களின் எண்ணிக்கையானது, சிறை நிர்வாகத்தைக் கடினமாக்கியிருப்பதோடு மட்டுமல்லாமல், தனிநபர் இடைவெளி பின்பற்றப்படுவதையும் மிகவும் சிரமமாக்கி இருக்கிறது என்றும், சிறைவாசிகளுக்கு மத்தியில் கொரோனா வைரஸ் தொற்று பரவாது தடுத்திட, தனிநபர் இடைவெளி மிகவும் அவசியத் தேவையாகும் என்றும் கூறியிருக்கிறது.

“ஒருசில வாரங்களிலேயே இரண்டாவது அலை ஒவ்வொருவரையும் மூச்சுவிட சிரமத்திற்கு உள்ளாக்கப்போகிறது. ஒவ்வொருவரும் மூச்சு விடுவதற்காகக் கடுமையாகப் போராட இருக்கிறார்கள். மனிதகுலம் எதிர்கொள்ளக்கூடிய மிக மோசமான அனுபவமாக இது இருக்கப் போகிறது,” என்றும் உயர்மட்டக்குழு கூறியிருக்கிறது.

அரசமைப்புச்சட்டத்தின் 21ஆவது பிரிவின்கீழ் உயிர்வாழும் உரிமை இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரின் மிகவும் மதிப்புமிக்க அடிப்படை உரிமையாகும். இது சிறையில் நிபந்தனையின்றி வாடிக்கொண்டிருக்கும் விசாரணைக் கைதி/தண்டனைக் கைதிகளுக்கும் பொருந்தக் கூடியதேயாகும்,” என்றும் உயர்மட்டக்குழு தெரிவித்திருக்கிறது.

சிறையிலிருப்பவர்களை பிணையில் அல்லது விடுப்பில் விடுவிக்க வேண்டுமென்கிற உயர்மட்டக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தற்போது தில்லி சிறைகளில் விசாரணைக் கைதிகளாக இருந்திடும் சுமார் நாலாயிரம் பேர் பயனடைவார்கள் என்றும், இது சிறையில் நெரிசலைக் குறைத்திடும் என்றும் சிறைத்துறைத் தலைவர் கூறியிருக்கிறார்.

(ந.நி.)