மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரே கட்டமாக 288 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டாம் கட்டமாக 38 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாகவும், மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நவம்பர் 20-ஆம் தேதி ஒரே கட்டமாகவும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், ஜார்க்கண்ட்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 13 அன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில், 64.86 சதவிகித வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், ஜார்க்கண்டில் மாலை 5 மணியுடனும், மகாராஷ்டிராவில் மாலை 6 மணியுடனும் நிறைவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி, மகாராஷ்டிராவில் 58.22% வாக்குகளும், ஜார்க்கண்ட்டில் 67.59% வாக்குகளும் பதிவாகி உள்ளன.