india

img

பிரதமர் பதவியின் மாண்பை மோடி சீர்குலைத்துவிட்டார்!முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடும் சாடல்

புதுதில்லி, மே 30 - “தனது வெறுப்பு பேச்சுக்களால் பிரதமர் பதவியின் மாண்பை மோடி சீர்குலைத்து விட்டார்” என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக சாடியுள்ளார்.

7 கட்டமாக நடைபெற்று வரும் 18ஆவது  மக்களவைத் தேர்தலின் கடைசி கட்டத் தேர்தல் ஜூன் 1 அன்று நடைபெறுகிறது. இதில், பஞ்சாப்பில் உள்ள 13 தொகுதி களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ள  நிலையில், வாக்காளர்களுக்கு வேண்டு கோள் விடுக்கும் விதமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:

“மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் அரசியல் உரையாடல்களை நான் உன்னி ப்பாக கவனித்து வருகிறேன். சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும் மிக மோசமான வெறுப்புப் பேச்சுகளில் பிரதமர் மோடி ஈடு பட்டுள்ளார். பிரதமர் அலுவலகத்தின் தகுதி யையும் முக்கியத்துவத்தையும் மோடி மலினப்படுத்திவிட்டார். தேர்தல் பிரச்சாரம் முழுவதும் வெறுப்பு பேச்சையே மோடி பேசி வருகிறார். இதற்கு முன்பு எந்த பிரதமரும் மோடியை போல வெறுப்பு பேச்சையோ,  தரமற்ற உரையையோ, கீழ்த்தரமான வார்த்தைகளையோ பயன்படுத்தவில்லை. குறிப்பிட்ட சமுதாயத்தினரையும் எதிர்க்கட்சிகளையும் தரம் தாழ்ந்த முறையில் மோடி விமர்சித்து வருகிறார். 

தனது வாழ்க்கையில் சமூகங்களுக்கு இடையில் எந்த பாகுபாட்டையும் தான் காட்டியதில்லை என்று மோடி பேசியது உண்மையற்றதாகும். சொற்பொழிவின் கண்ணியத்தையும், அதன் மூலம் பிரதமர் பதவியின் ஈர்ப்பையும் குறைத்த முதல் பிரதமர் மோடியே ஆவார். என்னைப் பற்றி யும் சில பொய்களை அவர் கூறியிருக் கிறார். நான் என் வாழ்நாளில் ஒரு சமூகத்திலிருந்து மற்றொரு சமூகத்தைத் தனித்துப் பார்த்ததில்லை. பாஜக மட்டுமே அப்படி பார்க்கக்கூடிய கட்சி. 

கடந்த பத்து ஆண்டுகளில் பஞ்சாப்பை யும், பஞ்சாபியர்களையும் பழிவாங்குவதற் கான எந்த ஒரு வாய்ப்பையும் பாஜக அர சாங்கம் விட்டு வைக்கவில்லை. தங்க ளைக் கலந்தாலோசிக்காமல் தங்கள் மீது திணிக்கப்பட்ட மூன்று விவசாயச் சட்டங் களைத் திரும்பப் பெற வேண்டும் என்ற ஒரே ஒரு கோரிக்கையைத்தான் அவர்கள் முன் வைத்தனர். விவசாயிகளின் வரு மானத்தை பறிக்கும் சட்டங்கள் அவை. ஆனால் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது, தில்லி எல்லைகளில் இடைவிடாமல் காக்கவைக்கப்பட்டதால் பஞ்சாப்பைச் சேர்ந்த 750 விவசாயிகள் செத்து மடிந்தனர். அவர்களுக்கு எதிராக பிரயோகிக்கப்பட்ட லத்திகளும் ரப்பர் தோட்டாக்களும் போதாது என்பது போல, நாடாளுமன்றத்திலும் அவர்களை பிரதமர் மோடி மிக மோசமாக தாக்கிப் பேசினார். 

பாஜக ஆட்சியில் நாட்டின் பொரு ளாதாரம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கொந்தளிப்புடன் உள்ளது. பணமதிப்பு நீக்கம் எனும் பேரழிவு, குறைபாடுள்ள ஜிஎஸ்டி, கொரோனா தொற்றின் போது அமலில் இருந்த வலி மிகுந்த தவறான நிர்வாகம் ஆகியவை பொருளாதாரத்தில் பரிதாபகரமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளன. 

இதற்கு முன் இல்லாத அளவுக்கான வேலையின்மை, கட்டுப்பாடற்ற பண வீக்கம் ஆகியவை 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சமத்துவமின்மையை அதிகரித்திருக்கிறது. பாஜக அரசின் தவறான ஆட்சியால் குடும்ப சேமிப்புகள் 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துவிட்டன. 30 லட்சம் அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன. பாஜக  அரசு, நமது ராணுவத்தில் தவறான அக்னி பாதை  திட்டத்தை திணித்துள்ளது. தேச பக்தி, வீரம் மற்றும் சேவையின் மதிப்பு 4 ஆண்டுகள் மட்டுமே என்று பாஜக நினைக்கிறது. இது அவர்களின் போலி தேசியவாதத்தைக் காட்டுகிறது”. இவ்வாறு மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

;