india

img

தேர்தல் நடத்தை விதியில் முன்மொழிந்துள்ள திருத்தங்களைத் தேர்தல் ஆணையம் திரும்பப் பெற வேண்டும் - சீத்தாராம் யெச்சூரி கடிதம்

தேர்தல் நடத்தை விதியில் முன்மொழிந்துள்ள திருத்தங்களைத் தேர்தல் ஆணையம் திரும்பப் பெற வேண்டும் என்று கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர், சீத்தாராம் யெச்சூரி தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தின் சாராம்சம் வருமாறு:

அன்பார்ந்த திரு ராஜீவ் குமார் ஜி, அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளில் அளித்திடும் வாக்குறுதிகள் தொடர்பாக தேர்தல் நடத்தை விதியில் உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் சம்பந்தமாக 2022 அக்டோபர் 4 தேதியிட்ட தேர்தல் ஆணையத்தின் கடிதத்தின் மீது இதனை எழுதுகிறேன்.

தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ள திருத்தங்கள் தேவையற்றவை என்றும், கீழ்க்கண்ட காரணங்களுக்காக அவற்றைத் தொடரக்கூடாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

(1)   அரசமைப்புச்சட்டத்தின் 324ஆவது பிரிவு, தேர்தல் ஆணையமானது தேர்தல்களை மேற்பார்வையிடுதல் (superintendence), வழிகாட்டுதல் (direction) மற்றும் கட்டுப்பாடு செய்தல் (control) ஆகியவற்றைச் செய்ய வேண்டும் என்றுதான் அதிகாரம் (mandate) அளித்திருக்கிறது.  தேர்தலின்போது அரசியல் கட்சிகள் தாங்கள் மேற்கொள்ளப்போகும்  நலத்திட்டங்கள் சம்பந்தமாக மக்களுக்கு அளித்திடும் வாக்குறுதிகளையும், கொள்கை முடிவுகளையும் முறைப்படுத்தும் பணியையோ அல்லது மதிப்பீடு செய்யும் பணியையோ தேர்தல் ஆணையத்திற்கு அளித்திடவில்லை. இப்போது தேர்தல் நடத்தை விதியில்,  தேர்தல் ஆணையம் கொண்டுவர உத்தேசித்திருக்கும் திருத்தங்களுக்கான முன்மொழிவுகளும், இதனையொட்டி அது இணைத்திருக்கும் இணைப்புப்படிவத்தில் அரசியல் கட்சிகள் அளித்துள்ள வாக்குறுதிகள் மற்றும் கொள்கை முடிவுகளின் விவரங்கள், அதற்குத் தேவைப்படும் நிதித் தாக்கங்கள் (financial implications) குறித்துக் கேட்கப்பட்டிருப்பவை எல்லாம் தேர்தல் ஆணையத்தின் வரையறைக்குள் வராதவைகளாகும்.  

(2)  இணைப்புப்படிவம், அரசியல் கட்சிகள் அளித்திடும் வாக்குறுதிகளின் நிதிநிலைத் தன்மை (‘fiscal sustainability’) குறித்தும், இவ்வாறு கூடுதலாக ஏற்படும் நிதித்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அது மேற்கொள்ளப்படவிருக்கும் திட்டங்கள் குறித்தும் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறது. இவை அனைத்தும் அரசியல்சார்ந்தவை மற்றும் கொள்கைப் பிரச்சனைகளாகும். ‘நிதிநிலைத் தன்மை’ (‘fiscal sustainability’) என்பது குறித்தும் பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. உதாரணமாக, எங்கள் கட்சி ‘நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தில்’ (‘Fiscal Responsibility and Budget Management Act’), மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)யில் 3 விழுக்காடு அளவே நிதிப் பற்றாக்குறை வரம்பு (fiscal deficit limit) இருக்க வேண்டும் என்பதை விமர்சித்தே வந்திருக்கிறது. இது தொடர்பாகப் பல்வேறு மாற்றுக்கருத்துக்களும் உண்டு.

3. தேர்தல் ஆணையம், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உச்சநீதிமன்றத்தில் ஓர் உறுதிவாக்குமூலம் சமர்ப்பித்திருக்கிறது. சுப்ரமணியம் பாலாஜி வழக்கின் தீர்ப்புரையை மறுபரிசீலனைககு உட்படுத்தவேண்டும் என்று கோரும் அந்த வழக்கில்தான் இவ்வாறு உறுதிவாக்குமூலம் சமர்ப்பித்திருக்கிறது. அதில் தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது:  “தேர்தலுக்கு முன்போ அல்லது பின்போ மக்களுக்கு “இலவசங்கள்” (“freebies”) வழங்குவது என்பது சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளின் கொள்கை முடிவு. அத்தகைய முடிவுகள், சம்பந்தப்பட்ட மாநிலத்தின் நிதிநிலைமைக்கு சாத்தியமானதா, இல்லையா என்றோ, அல்லது அது அம்மாநிலத்தின் பொருளாதார நலத்திற்குத் தீய விளைவுகளை ஏற்படுத்துமா இல்லையா என்றோ, அம்மாநிலத்தின் வாக்காளப் பெருமக்களால்தான் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு தீர்மானிக்கப்பட வேண்டும்.”     

 மேலும் “தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி  அமைத்திடும் அரசியல் கட்சிகளின் கொள்கைகளையோ அல்லது முடிவுகளையோ தேர்தல் ஆணையம் முறைப்படுத்த முடியாது” என்றும் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்திற்கு சமர்ப்பித்திட்டத் தன்னுடைய உறுதிவாக்குமூலத்தில் குறிப்பிட்டிருக்கிறது.  “சட்டத்தில் தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்டுள்ள ஷரத்துக்களுக்கு அப்பாற்பட்டு இதுபோன்று நடவடிக்கைகள் எடுத்தால் அது அதிகாரங்களை மீறும் செயலாக அமைந்திடும்,” என்றும் தேர்தல் ஆணையம் தன்னுடைய உறுதிவாக்குமூலத்தில் குறிப்பிட்டிருக்கிறது.
இது தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட சரியான மற்றும் சட்டபூர்வமான நிலைப்பாடாகும். எனவே, இப்போது இந்த நிலைப்பாட்டிலிருந்து திடீரென்று மனம் மாறி அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் சம்பந்தப்பட்ட  வளையத்திற்குள் தன் அதிகாரத்தை நீட்டியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 
4. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக என்.வி. ரமணா இருந்தபோது அவரது தலைமையிலான அமர்வாயம், இது தொடர்பான மனுவின் மீது விசாரணை மேற்கொண்டிருந்தது. அந்த மனுவில் 2013இல் சுப்பிரமணியம் பாலாஜி வழக்கின் மீது இரு நபர் அமர்வாயம், இது தொடர்பாக அளித்திட்ட தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தது. நீதியரசர் ரமணா ஓய்வுபெற்ற ஆகஸ்ட் 26  அன்று இந்த வழக்கானது அடுத்து தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கும் நீதியரசரின் தலைமையில் அமையும் மூவர் அடங்கிய அமர்வாயம் இதன்மீது விசாரணை மேற்கொண்டு தீர்மானித்திடும் என்று கட்டளை பிறப்பித்திருந்தார். எனவே, “இலவசங்கள்” தொடர்பாக அரசியல் கட்சிகள் அளித்திடும் வாக்குறுதிகள் சம்பந்தப்பட்ட இந்தப் பிரச்சனை இப்போதும் உச்சநீதிமன்றத்தின் முன் நிலுவையில் இருந்து கொண்டிருக்கிறது.
இத்தகைய நிலைமையில், தேர்தல் ஆணையம்,  மக்கள் பிரச்சனைகள் குறித்தும், மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும் அரசியல் கட்சிகள் மேற்கொள்ளும் உரிமைகள் மீது தன் வரம்பை மீறித் தலையிடும் விதத்தில் ஓர் இணைப்புப் படிவத்தை அறிமுகப்படுத்தி, தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தத்தைக் கொண்டுவர மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை தேவையற்றதாகும்.
எனவே, தேர்தல் நடத்தை விதியில் திருத்தத்தைக் கொண்டுவர உத்தேசித்துள்ள இந்த முன்மொழிவைத் தேர்தல் ஆணையம் திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
;