குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக 52 லட்சம் மிஸ்டு கால்கள் வந்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை கடந்த மாதம் அமல்படுத்தியது. இச்சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினார் ஆகியோர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவளிக்க 8866288662 எனும் இலவச தொலைபேசி எண்ணைக்கு மிஸ்டு கால் அளிக்கலாம் என்று பாஜக பிரச்சாரம் செய்து வந்தது. இந்த பிரச்சாரத்தைத் தொடங்கும் போது, பாஜகவின் செயலாளர் அனில் ஜெயின், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த சந்தேகங்களை நீக்குவதே இந்த பிரச்சாரத்தின் நோக்கம் என்று கூறினார். ஆனால் கடந்த நாட்களில், பாஜகவினர் போலி தகவல்களுடன் சமூக ஊடகங்களில் இந்த தொலைபேசி எண்ணை பரப்பி வந்ததை பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ”இலவச நெட்பிளிக்ஸ் இணைப்பு பெற இந்த எண்ணுக்கு கால் செய்யவும்”, ”வேலை வாய்ப்புக்கு இந்த எண்ணுக்கு கால் செய்யயும்”, ”இலவச ஆப்பிள் டிவி சேவைக்கு இந்த எண்ணுக்கு கால் செய்யவும்” உள்ளிட்ட பல போலி தகவல்களோடு, இந்த தொலைபேசி எண் பகிரப்பட்டது. இந்நிலையில், இச்சட்டத்துக்கு ஆதரவாக 52.72 லட்சம் பேர் மிஸ்டு கால் அளிந்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.