புதுதில்லி, மார்ச் 15- குற்றவியல் சட்டங்கள் திருத்தப்பட இருக்கின்றனவா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களவைக்குழு தலைவர் பி.ஆர். நடராஜன் கேட்டிருந்த கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதிலளித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடந்துகொண்டிருக்கிறது. கேள்வி நேரத்தின்போது பி.ஆர். நடராஜன், இந்திய சாட்சியச் சட்டம் உட்பட நாட்டிலுள்ள பல்வேறு குற்றவியல் சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டுவர உத்தேசித்திருக்கிறதா என்றும், ஆம் எனில் அதன் விவரங்கள் என்ன என்றும், பிரிட்டிஷார் காலத்துச் சட்டங்களான இந்தியத் தண்டனைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவருவதற்காக அரசு ஏதேனும் குழுக்கள் அமைத்திருக்கிறதா என்றும் ஆம் எனில் அதன் விவரங்கள், இல்லையெனில் அதற்கான காரணங்கள் என்ன என்றும் கேட்டிருந்தார்.
அதற்கு எழுத்துமூலம் பதிலளித்த ஒன்றிய உள்துறை விவகாரங்களின் இணை அமைச்சர் அஜய் குமார் மிஷ்ரா அளித்துள்ள பதில் வருமாறு:
உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தன்னுடைய 146ஆவது அறிக்கையில் நாட்டின் குற்றவியல் நீதிபரிபாலன அமைப்பு திருத்தப்பட வேண்டியது அவசியம் என்று பரிந்துரைத்திருந்தது. அதன்பின்னர் இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக தில்லி, தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் தலைமையின் கீழ் ஒரு குழு அமைக்கப்பட்டது. உள்துறை விவகாரங்களின் அமைச்சகமும் குற்றவியல் சட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் சம்பந்தமாக ஆளுநர்கள், துணை ஆளுநர்கள், மாநில அரசாங்கங்கள், யூனியன் பிரதேச அரசாங்கங்கள், பல்கலைக் கழகங்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள், இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், பல்வேறு மாநில வழக்கறிஞர்கள் சங்கம், பல்கலைக் கழகங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஆலோசனைகள் கோரி இருந்தது. இவ்வாறு பரிந்துரைகளையும், ஆலோசனைகளையும் பெற்று குற்றவியல் சட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவர அரசு முடிவு செய்திருக்கிறது.
ஆயினும் இதற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை.
(ந.நி.)