india

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

நான்கு மணி நேர இடைவெளியில் தேசத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் சீர்குலைக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி அமலாக்கிய பணமதிப்பு நீக்கம் நான்கு ஆண்டுகளைக் கடந்து சென்றுவிட்டது. உங்கள் நன்மைக்காகவும் ஊழலை முடிவுக்கு கொண்டுவருவதற்காகத்தான் இதைச் செய்கிறேன் என்று அப்போது அவர் கூறினார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2020 மார்ச் 19க்கும், 2020 செப்டம்பர் 20க்கும் இடையில் 17 ஆசிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, இந்தியாதான் மிக மிக அதிகபட்ச ஊழல் மலிந்த நாடாக இருக்கிறது என்று “டிரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல்” எனும் ஆய்வு நிறுவனம் விரிவான விபரங்களை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வில், 89 சதவீத இந்தியர்கள், ஆளும் அரசாங்கம் மிக மிக மோசமான முறையில் ஊழல்மலிந்த நிர்வாகத்தைத் தந்துகொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள்...

                                                        ****************************

பணமதிப்பு நீக்கமும் ஜிஎஸ்டி வரியும் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றப்போகின்றன என்றும் கூட மோடி அன்றைக்குக் கூறினார். ஆனால் உண்மையில் இந்த இரண்டு நடவடிக்கைகளும் இந்தியப் பொருளாதாரத்தை அழித்துவிட்டன. இவற்றோடு மூன்றாவதாக கொரோனா ஊரடங்கும் எவ்விதத் திட்டமிடலும்இல்லாமல் அமலாக்கப்பட்டதன் விளைவாக இந்திய மக்கள் வேலையின்மையிலும் பட்டினியின் பிடியிலும் சிக்கி, இந்தியாவின் பொருளாதாரம் மிக மிக ஆழமான மந்த நிலைமைக்குள் சிக்கியிருக்கிறது. இதன் விளைவுகள்மோசமானவை. இந்தியாவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை, இன்றைக்கு பாகிஸ்தானைவிடவும், வங்கதேசத்தை விடவும் கீழான நிலைக்கு இறக்கிவிட்டார் மோடி. ஆசிய நாடுகளில் சீனா, வியட்நாம், இந்தோனேசியா, வங்கதேசம், நேபாளம் போன்ற நாடுகள் கணிசமான அளவு தனிநபர் மொத்த உள்நாட்டு விகிதத்தை பதிவு செய்திருக்கின்றன. ஆனால் இந்தியா தலைகீழாக பயணிக்கிறது. இதற்கு காரணம் என்ன? மோடி அரசின் மேற்கூறிய கொடூரமான தாக்குதல்களும், மறுபுறத்தில் தேசத்தின் சொத்துக்களையெல்லாம் பெரும் கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிக்க அளித்திருக்கும் அனுமதிகளும்தான்.

                                                        ****************************

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியின் கூட்டுக் களவாணிகளாக இருக்கும் பெரும் கார்ப்பரேட் முதலாளிகள் ஒட்டுமொத்த சொத்துக்களையும் வகைதொகையின்றி கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மோடியின் ஆட்சியில் மிகப்பெருமளவு ஏழை, எளிய, நடுத்தர வர்க்க மக்களின் சேமிப்புப் பணத்தை சூறையாடி இருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக சூறையாடியது போதாது என்று ஒட்டுமொத்தமாக அந்தக் கூட்டுக்களவாணி கார்ப்பரேட்டுகளிடம் இந்திய மக்களின் சொத்துக்களாக இருக்கக்கூடிய பொதுத்துறை வங்கிகளை ஒப்படைத்துவிடுவது என்று முடிவு செய்திருக்கிறார் நரேந்திர மோடி. கூட்டுக்களவாணிகளின் கொள்ளையை சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பதற்காக மோடி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது. மோடியின் கூட்டுக்களவாணிகள் கடந்த 8 ஆண்டுக்காலத்தில், வங்கிக் கடன்களை வராக்கடன்களாக மாற்ற வைத்ததன் மூலம் அடித்திருக்கக்கூடிய கொள்ளை ரூ.6,32,377 கோடி ஆகும். பாரத ஸ்டேட் வங்கி மட்டும் ரூ.2,35,091 கோடியை இழந்திருக்கிறது. பேங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேசனல் வங்கி, ஐடிபிஐ வங்கி, கனரா வங்கி, பேங்க் ஆப் இந்தியா ஆகியவை தலா சுமார் ரூ.50ஆயிரம் கோடியை இழந்திருக்கின்றன.இதில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் நடந்திருக்கக்கூடிய கொள்ளை ரூ.4,95,190 கோடி ஆகும். இந்த காலத்தில்தான் மிக அதிகபட்ச கொள்ளை நடந்திருக்கிறது. வங்கிகளை கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளையடித்த தனது விருப்பத்திற்குரிய கூட்டுக்களவாணிகளுக்கு மொத்தமாக வங்கிகளை கொடுத்துவிட முயற்சிக்கிறார் நரேந்திர மோடி.

;