india

img

தரவுகள் பாதுகாப்பு மசோதா- ஏன் திரும்ப பெற வேண்டும்?

தனி மனித அந்தரங்கம் (Right to Privacy) உச்சநீதிமன்றம் புட்டாசுவாமி வழக்கில் உறுதிப்படுத்தியதன் அடிப்படையில்  பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே. ஆனால் தற்போது ஒன்றிய அரசு கொண்டு வரவுள்ள தரவுகள் பாதுகாப்பு மசோதா(Data Protection Bill) உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நீர்த்து போகும்படி செய்யவுள்ளது.

புட்டாசுவாமி வழக்கு:

இந்திய அரசின் நலத்திட்டங்கள், பொதுவிநியோக முறையில் ரேசன் பொருட்கள் மானியங்கள் ஆகியவற்றை பெற மக்கள் ஆதார் அட்டையை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டுமென ஆதார் சட்டத்தில் ஒன்றிய அரசு வலியுறுத்தியது.

அதன் படி ஒருவர் சமையல் எரிவாயு மானியத்தை பெற வேண்டுமானால் அவர் சமையல் கேஸ் நிறுவனத்திடம்  ஆதார் அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்,  அந்த சமையல் கேஸ் நிறுவனம் ஆதார் நிறுவனத்திடம் கொடுக்கப்பட்ட ஆதார் எண் சரியானதா என பரிசோதித்து சொல்லும். இது ஒரு உதாரணம் தான். இப்படி தனியார் நிறுவனங்கள் (தொலை தொடர்பு, வங்கிகள் )  கேட்டால் கூட  ஒருவரது ஆதார் எண் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ளும். இப்படி தனி நபர் ஒருவரின் தனிப்பட்ட அந்தரங்கத்தை( ஆதார் எண்ணில் ஒருவருடைய பெயர் பிறந்த தேதி, முகவரி, கைரேகை, கருவிழி, புகைப்படம்)  வெளி நிறுவனம் அல்லது   மூன்றாவது நபரிடம் சம்பந்தப்பட்ட நபரின் அனுமதி இல்லாமலேயே தரலாம், என்பதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தின் ஓய்வுப் பெற்ற நீதிபதி கே.எஸ்.புட்டாசுவாமி மற்றும் பிரவேசஷ் கண்ணா (வழக்கறிஞர்) உள்ளிட்ட பலர் இந்த ஆதார் சட்டம் அரசியலமைப்பு சட்டத்தின் 14, 19, 24 ஆகிய விதிகளில் வகுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளான தனி மனித அந்தரங்கத்தை பாதுகாப்பதற்கு எதிரானது என வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கில் தான் உச்சநீதிமன்றம் தனி மனித அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்று என உறுதி செய்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை தொடர்ந்து ஒன்றிய அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் ஒரு குழு அமைத்தது.

இந்த காலகட்டத்தில் சமூக வலைதளங்களான வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர், கூகுள் போன்ற நிறுவனங்கள் தனிநபர் தொடர்பான அந்தரங்க தரவுகளை, டிஜிட்டல் விளம்பர நிறுவனங்களுக்கு பரிமாறுவது தொடர்பான சர்ச்சையும் எழுந்தது. இதையும் சேர்த்து தான் நீதிபதி ஶ்ரீகிருஷ்ணா தலைமையிலான குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென ஒன்றிய அரசு கேட்டு கொண்டது. இந்த குழுவும் ஆய்வறிக்கையை ஒன்றிய அரசிடம் 2018 ஆம் ஆண்டே சமர்ப்பித்தது.

இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் தான் தற்போது கொண்டு வரவுள்ள தரவுகள் பாதுகாப்பு மாசோதா 2019 வரைவை தாக்கல் செய்தது. மேற்கூறிய வரைவு மசோதா பல குறைபாடுகளை கொண்டிருந்தமையால் அம்மாசோதா  நாடாளுமன்ற கூட்டு குழுவின்(JPC) விவாதத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் கூட்டு குழுவில் இருந்த பல எதிர்கட்சி உறுப்பினர்கள் கூறிய மாற்று கருத்துகளை எடுத்து கொள்ளாமல் ஆளுங்கட்சியின் கருத்துக்களே இடம்பெற்றன. அது மட்டுமில்லாமல் தனி மனித அந்தரங்கத்தை பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட்ட நீதிபதி ஶ்ரீகிருஷ்ணா குழு பரிந்துரைத்த ஆய்வறிக்கையையே நீர்த்து போக செய்யும் வகையில்  புதிய தரவுகள் பாதுகாப்பு மாசோதா அமைந்துள்ளது

இந்த மாசோதாவின் படி அரசின் நிறுவனங்கள் குறிப்பாக சிபிஐ, ஐடி  உள்ளிட்ட 10 நிறுவனங்கள் விலக்களிக்கப்பட்டுள்ளன, அதாவது மேற்கூறிய நிறுவனங்கள் தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் பொது மக்களின் தகவல்களை, தரவுகளை எப்போது வேண்டுமானாலும் இடைமறித்து எடுக்கலாம் என்பதே.

இவ்வாறு தேசப் பாதுகாப்பு தொடர்பாக தரவுகளை  இடைமறித்து ஆய்வு செய்ய ஏற்கனவே நிறுவப்பட்ட அமைப்புகளான ICJS (Integrated Criminal Justice System)  NATGRID (National Grid of Surveillance Databases) ,NETRA(Analysis of The Internet) ,CMSTS(Central Monitoring System For Telecom Surveillance)  உள்ள போது , புதிதாக 10 அரசு நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டிய தேவை என்ன வந்தது என்ற கேள்விக்கு விடை இல்லை.

பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சமூக செயற்பாட்டாளர்கள் கணினி, அலைபேசிகள் திட்டமிட்டு பல ஆட்சபனைக்குரிய தகவல்களை புகுத்தினர் என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

அதே போல் நீங்கள் Co-win இணைய தளத்தில் உள்ளே சென்று அல்லது அந்த செயலியை பயன்படுத்தி கோவிட் - 19 க்கான தடுப்பூசி செலுத்தியிருந்தீர்களானால், உங்களை அறியாமலே (கேட்காமலே) உங்களுக்கான கெல்த் ஐடி உருவாக்கப்பட்டிருக்கும். இந்த ஐடி யில் உங்கள் உடல் தொடர்பான விசயங்கள் பதிவு செய்திருப்பீர்கள். இந்த தரவுகளை பெறும் தனியார் இன்சுரன்ஸ் நிறுவனங்கள் உங்களுக்கு ஏற்கனவே இருக்கும் உடல் பிரச்சனைகளுக்கு  மருத்துவ காப்பீடு வழங்க முடியாது அல்லது காப்பீட்டுக்கான பீர்மியத்தை உயர்த்துவது என்பது நடக்கும் அதே போல் இத்தரவுகளை பெறும் தனியார் கம்பெனி முதலாளிகள் உங்களுக்கு வேலை கொடுக்க தயங்குவார்கள். பயணம் செய்ய ஆரோக்ய சேது செயலியை தரவிறக்கம் செய்ய வேண்டும் எனவும் அந்த செயலியில் சேகரிக்கப்படும் தரவுகளை தனியாருக்கு கொடுக்கும் வாய்ப்பு அதிகமாகவுள்ளது.

தொழிலாளர்கள் நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் பல செயலிகளை நிறுவ வேண்டுமென கட்டாயப்படுத்தப்படுகின்றனர். உதாரணத்திற்கு அங்கான்வாடி ஊழியர்கள் நிறுவியுள்ள ஒரு செயலியில் அவர்களது இருப்பிடம் செல்லுமிடம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது . பஞ்ச்குலா உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் கண்காணிப்பு கருவி  ஒன்றை அணிந்து கொள்ள வேண்டும் இது அவர்களின் இருப்பிடம், கேமரா, குரல் பதிவு ஆகியவற்றை கண்காணிக்கும்.

இன்றைய உலக மக்கள் தொகையில் 60% பேர் இணையத்தை பயன்படுத்துகிறார்கள், இந்தியாவில் 70% பேர் பயன்படுத்துகிறார்கள். மக்களுக்கு பேஸ்புக், கூகுள் செல்வது தான் இணையமாக கருதப்படுகிறது. அவ்வாறு தான் மேற்கூறிய இரண்டு ஜாம்பவான்களும் இணைய உலகை, பொது மக்கள் தரவுகளை தங்களது கட்டுபாட்டில் இருக்க வேண்டுமென அனைத்து முயற்சிகள் செய்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் பேஸ்புக் நிறுவனம் ப்ரீ பேசிக்ஸ்  என்ற திட்டத்தை அறிமுகம் செய்பவுள்ளதாக கூறியது. அத்திட்டத்திற்கு இந்தியாவில் எதிர்ப்பு எழுந்ததால் இங்கே அமலாகவில்லை. ஆனால் உலகில் 65 நாடுகளில் இத்திட்டத்தை செயல்படுத்தி கொண்டிருக்கிறது. மெட்டா நிறுவனம் மூலமாக தான் அந்நாடுகளில் இணையவழி தொடர்பே உள்ளது. அதாவது மெட்டா நிறுவனத்தோடு எந்ததெந்த வலைத்தளங்கள் (Websites) ஒப்பந்தம் செய்து கொள்கிறார்களோ அந்த வலைதளங்கள் மட்டும் தான் அந்நாடுகளில் பார்க்க முடியும், இதன் மூலம் இணையத்தை மட்டுமல்லாமல் அந்நாடுகளில் டிஜிட்டல் விளம்பரங்களையும் கட்டுபடுத்துகிறது பேஸ்புக்கின் மெட்டா நிறுவன நிறுவனம்.

கூகுள், பேஸ்புக்கும் தரவுகளை கொண்டு தனி மனித விருப்பு வெறுப்புகளை அறிந்து அதற்கேற்றவாறு விளம்பரப்படுத்துவது மூலம் மிக அதிக வருமானம் ஈட்டுகின்றன. இது விளம்பரத்தை மட்டும் நம்பியுள்ள அச்சு, ஒலி, ஒளி ஊடகங்களுக்கு அதிகமான பாதிப்பை ஏற்படுத்துவதோடு தனி மனித அந்தரங்கமும் தாக்குதலுக்குள்ளாகிறது. இதை தடுக்கவே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கடுமையான சட்டங்களை நிறைவேற்றியுள்ளனர். ஆனால் இந்திய ஒன்றிய அரசோ இந்நிறுவனங்களுக்கு சேவகம் செய்யும் வகையில் குறைபாடான சட்டத்தை முன்மொழிந்துள்ளது. இதற்கு காரணமாக இந்நிறுவனங்கள் ஆளும் கட்சியின் விசமத்தனமான பிரிவினைவாத கருத்துக்களை பரப்புவதற்கு, பொது சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தவறாக சித்தரிப்பதற்கு உதவுகின்றன என்பதை அந்நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்களே  சொன்ன சாட்சியங்கள் நமக்கு நினைவில் இருக்கும்.

இன்றைய பெருந்தரவுகள்  (Big Data)யுகத்தில் ஒவ்வொரு தனி மனிதரும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான தரவுகளை உருவாக்குகிறார். இந்த தரவுகளை எல்லாம் செல்வமாக மாற்றும் பணியை பெரும்கார்ப்ரேட் நிறுவனங்கள் செய்கின்றன. கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு இலவச சேவை செய்யவே தரவுகள் பாதுகாப்பு மசோதாவை கொண்டு வந்துள்ளது மோடி தலைமையிலான ஒன்றிய  அரசு. இம்மாசோதா அனைத்து பிரிவு மக்கள், தொழிலாளர், பெண்கள் , இளைஞர்கள் குழந்தைகள், ஆகியோருக்கு எதிரானது. இம்மசோதா உறுதியாக எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

-தோழர். பிரபீர் புரக்யஸ்தா எழுதிய கட்டுரை:தமிழில் கே.சரவணன்

மருந்து விற்பனை பிரதிநிதி

ஈரோடு

;