health-and-wellness

img

பேசும் காச்சக்காரம்மன் – 9 காய்ச்சலுக்கு தண்ணீர் ஒத்தடம்

இயற்கை மருத்துவத்தில் பஞ்சபூதங்களுள் ஒன்றான நீரினை வைத்து ஒத்தடம் கொடுத்தே காய்ச்சலை சரிசெய்துவிட முடியும் என்று ஒருசிலரும், அல்லோபதியில் அதெப்படி, ஈரத்துணியால் துடைத்தெடுத்தால் உடம்பின் வெளி வெப்பநிலைதான் குறையுமே தவிர உள்ளே இருக்கக்கூடிய அசலான பிரச்சனையைத் தீர்க்க பாராசிட்டமால் மாத்திரையை கொடுத்தால்தானே சரிபட்டுவரும் என்று சிலரும் மாறிமாறி பேசிக்கொண்டே இருக்கிறார்கள். 2006ம் ஆண்டில் வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரியில் இந்த பஞ்சாயத்திற்காக ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆறு மாதக் குழந்தை முதல் 12 வயது வரையிலான காய்ச்சல் வந்த குழந்தைகளின் பெற்றோர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டு அவர்களிடம் காய்ச்சல் மாத்திரை மற்றும் ஒத்தடம் கொடுப்பதால் என்ன நடக்கிறது என்பதனை சோதித்துப் பார்த்தார்கள். ஆய்விற்காக தேர்வு செய்யப்பட்ட 150 குழந்தைகளில் 77 குழந்தைகளுக்கு பாராசிட்டமால் மாத்திரை மட்டும் கொடுக்கப்பட்டது. மீதமுள்ள 73 குழந்தைகளுக்கு காய்ச்சல் மாத்திரையோடு கூடவே ஒத்தடமும் சேர்த்து கொடுக்கச் சொல்லி அறிவுறுத்தப்பட்டது. இறுதியாக இந்த ஆய்வின் முடிவில் தெரிய வந்ததாவது..

♦மாத்திரை மட்டும் கிடைத்த குழந்தைகளுக்கு காய்ச்சல் ஒரே சீராக குறைந்து கொண்டே வந்தது. மாத்திரையோடு ஒத்தடமும் கிடைத்த குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் வேகமாக குறைந்து பின் மெல்ல மெல்ல இறங்கிக் கொண்டே வந்தது. 
♦இறுதியாக ஆய்வின் இரண்டு மணி நேர முடிவில் சோதித்துப் பார்த்த போது இரண்டு குரூப்பிலும் உள்ள குழந்தைகளும் ஒரே வெப்பநிலையில்தான் இருந்தார்கள்.
♦மாத்திரையோடு ஒத்தடமும் சேர்த்துக் கிடைத்த குழந்தைகள் கொஞ்சம் அசௌகரியத்தோடும், அழுதுகொண்டும், எரிச்சலோடும் இருந்தார்கள். ஆனால் மாத்திரை மட்டும் கிடைத்த குழந்தைகளுக்கு அத்தகைய அசௌகரியங்கள் ஏதும் ஏற்படவில்லை.

ஆதலால் காய்ச்சலை குறைப்பதில் தண்ணீர் ஒத்தடம் அவர்களிடம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்கிற முடிவுக்கு ஆய்வாளர்கள் வருகிறார்கள். இப்போது நாம் கொஞ்சம் எதார்த்தத்திற்கு வருவோம். அரசு மருத்துவமனைகள் அருகேயில்லாத ஊர்கள், தனியார் மருத்துவமனைகள் அருகிலிருந்தும் செலவு செய்ய வசதியில்லாத குடும்பத்தினர், மருத்துவமனைக்கு செல்ல நாளுக்கு இரண்டு முறை மட்டும் வருகிற பேருந்துகள், அர்த்த ராத்திரியில் அதிதீவிரமான காய்ச்சல் வந்தும் எங்கும் செல்ல முடியாத சூழல், குறைந்த காசு பணத்தில் ஸ்டீராய்டு ஊசி போடுகின்ற ஆபத்தான கம்பவுண்டர்கள், மருத்துவர் பரிந்துரையின்றி மாத்திரை கொடுக்கிற மருந்து கடைகள் இவற்றிலிருந்து எல்லாம் தப்பிக்க மக்கள் வேறு என்னதான் செய்வார்கள்?

சரி, தண்ணீர் ஒத்தடம் என்னதான் செய்யும்?
நம் உடம்பிலுள்ள சூடெல்லாம் பொதுவாக நான்கு வழிகளில் வெளியறுகிறது. கண்ணுக்குத் தெரியாத வெப்பக்கதிர் வீச்சு மூலமாகவும், வியர்வை ஆவியாதல் வழியாகவும், தோசைக் கல்லின் சூடு மாவுக்கு கடத்தப்பட்டு தோசையாவதைப்போல தொடுதலின் வழியே உடல் வெப்பம் கடத்தப்படுவதாலும், ஏ.சி காற்றில் உடல் குளிர்வதைப்போல உடம்பைச் சுற்றியுள்ள காற்றுடன் வெப்பத்தை உடல் பரிமாறிக் கொள்வதன் மூலமாகவும் நம்முடைய உடல் சூடானது தணிக்கப்படுகிறது. நாம் கொடுக்கிற தண்ணீர் ஒத்தடமும் மேற்கண்ட மூன்று வழிகளிலும் காய்ச்சல் வந்த பிள்ளைகளின் உடல் வெப்பத்தை தணிக்க உதவுகிறது.
அதாவது வெதுவெதுப்பான தண்ணீரில் நனைத்த ஈரத்துணியால் காய்ச்சல் வந்த உடம்பைத் துடைக்கும்போது உடலின் அதிகப்படியான வெப்பநிலையானது குறைந்த வெப்பநிலையிலுள்ள தண்ணீருக்கு கடத்தப்படுவதன் மூலம் காய்ச்சல் குறைகிறது. இரண்டாவது, அத்தகைய தோலின் மீது படிந்துள்ள ஈரமானது ஆவியாதலை அதிகப்படுத்தி சூட்டை குறைக்கிறது. மூன்றாவது, அத்தகைய ஈரம் படிந்த தோல் மீது காற்று படுவதால் சுற்றியுள்ள காற்றும் குளிர்ந்து உடலிலுள்ள வெப்பம் குறைப்பதை அது துரிதப்படுத்துகிறது. உண்மையில் சொல்லப்போனால் காற்றை வைத்து உடலை குளிர்விப்பதைவிட தண்ணீர் 20 மடங்கு அதிகமாகவே நமது உடலை குறைக்கும் சக்தியுடையது. அதேசமயம் வெதுவெதுப்பான தண்ணீரால் ஒத்தடம் கொடுக்கும்போது தோலிலுள்ள வெப்பத்தை உணரும் உணர்ச்சி நரம்புகள் தூண்டப்பட்டு காய்ச்சல் குறைவதை ஊக்கு விக்கின்றன. ஒத்தடமானது தோல்களிலுள்ள நுண்குழய்களை திறப்பதன் மூலம் உடலின் வெப்பம் எளிதில் வெளியே கடத்தப்பட ஏதுவா கிறது. இரத்தக்குழாய்களும் சீராக விரிவடைந்து வெப்பத்தை கடத்துகின்றன. உடலின் வேதி வினைகளும் சீராக நடைபெறுகின்றன. இப்படி யிருக்க தண்ணீர் ஒத்தடத்தை அவசர காலத்தில் ஒரு காய்ச்சல் முதலுதவியாகவும், காய்ச்சலை குணப்படுத்தும் சிகிச்சைக்கு உறுதுணையாகவும் இருக்குமாறு ஏன் பயன்படுத்தக்கூடாது என்கிற புரிதலுக்கு நாம் வர வேண்டியுள்ளது.

குழந்தைகளை ஒத்தடத்திற்கு தயார் செய்தல்
குழந்தைக்கு துணி முழுவதும் கழற்றிவிட்டு ஒரு துண்டை மட்டும் கட்டிக் கொள்ளச் செய்ய லாம். அவர்களை ஈரமான வெறும் தரையில்  படுக்க வைக்காமல் பாயில் அல்லது போர்வை யில் படுக்க வைக்கலாம். குளிர்காலமாக இருந்தாலோ, கட்டாந்தரையாக இருந்தாலோ குழந்தைகளின் கால்களில் சாக்ஸ் போட்டுக் கொள்ளச் செய்யலாம். அறையில் ஏ.சி தேவையில்லை. அறையில் வெளிச்சம் குறைவாக வும் அதேசமயம் நல்ல இயற்கையான காற்றோட்ட மாக இருக்கும்படியும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒத்தடம் கொடுக்கையில் அவர்க ளுக்கென தனியொரு இடம் இருந்தால் நன்று.

ஒத்தடத்திற்கு தேவையானவைகள்
பாத்திரத்தில் தேவையான வெதுவெதுப்பான தண்ணீர் (90-95°F), ஒத்தடத்திற்கு முன்-பின் பரிசோதிக்க தெர்மாமீட்டர், ஒத்தடம் செய்ய சுத்தமான ஐந்து காட்டன் துணிகள், குழந்தைகள் உடலை போர்த்தவும் ஒத்தடத்திற்கு பின்பு துடைப்பதற்கென போர்வை மற்றும் துண்டுகள்.

ஒத்தடம் செயல்முறை
முதலில் குழந்தையின் ஆடையை கழற்றி படுக்க வைத்துவிட்டு அவர்கள் மீது மெல்லிய போர்வையை மட்டும் போர்த்திக் கொள்ளுமாறு செய்யலாம். குழந்தைகளிடம் நாம் ஒத்தடம் செய்யப் போவதை முன்கூட்டிய சொல்லிவிட வேண்டும். “அம்மா, ஈரத்துணியை வச்சு ஒடம்ப தொடைச்சு எடுக்கப் போறேன்; உனக்கு குளிரா இருந்துச்சுன்னா அம்மாகிட்ட ஒடனே சொல்லிட னும் சரியா!” என்று குழந்தைகளிடம் முன்பே சொல்லி வைப்பது நல்லது. ஏனென்றால் தண்ணீரின் வெப்பநிலை குளிராக இருந்தால் நடுக்கம் வந்து காய்ச்சலை இன்னும் அதிகப்படுத்தும், சூடாகவோ அவர்களின் உடல் வெப்பத்திற்கு சமமாகவோ இருந்தால் காய்ச்சலை அதனால் எந்தவிதத்திலும் குறைக்க முடியாது. நாம் கொடுக்கிற ஒத்தடமானது அவர்களுக்கு சுகமாய் இருப்பதுதான் நாம் தண்ணீரை சரியான வெப்பநிலையில் வைத்திருப்பதற்காக அறிகுறி. அடுத்து, முக்கியமாக ஒத்தடம் கொடுப்பதற்கு முன்பாகவே தெர்மாமீட்டரை வைத்து குழந்தையின் காய்ச்சலை அளவிட்டு நம் பிள்ளைக்கு எப்போதும் வைத்தியம் பார்க்கிற நோட்டில் தேதியிட்டு குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒத்தடம் முடிந்த பின்னரும் தெர்மாமீட்டர் வெப்பநிலையை நேரத்தோடு குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் ஈரத்துணியை வைத்து ஒத்தடம் வைத்துவிட்டு மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றால் காய்ச்சல் குறைந்த அவர்க ளுக்கு ஆரம்பகட்ட காய்ச்சலின் அளவினை சரியாக  கணிக்க முடியாமல் போக வாய்ப்பிருக்கிறது. அதனால் மருத்துவரால் இது எத்தகைய காய்ச்சலென்ற முடிவிற்கு வர சிரமமாக இருக்கும். முதலில் ஈரத்துணியை மெதுவாக நம் கையில் வைத்து சூடு எப்படி இருக்கிறது என்று பரிசோதிக்க வேண்டும். பிறகு குழந்தையின் கையில் வைத்து அவர்கள் அதை சுகமாய் உணருகிறார்களா என்பதைக் கவனிக்க வேண்டும். குழந்தைகளுக்கு அத்தகைய தண்ணீரின் வெப்பநிலை ஓ.கேதான் என்றவுடன் தான் ஒத்தடத்தையே ஆரம்பிக்க வேண்டும். நம் கைகளை சுத்தமாக கழுவிய பிறகு முதலில் குழந்தைகளின் முகம், கழுத்துப் பகுதியிலிருந்து ஆரம்பித்து ஈரத்துணியால் துடைத்து எடுக்க வேண்டும். அவசர அவசரமாக செய்யாமல் நிதானமாக செய்தால்தான் உடம்பின் சூட்டைத் தணிக்க முடியும். இரண்டாவது, கைகளின் விரல்களிலிருந்து ஆரம்பித்து முழங்கை, தோள்பட்டை முக்கியமாக அக்குள் பகுதி என வலது, இடது கைகளில் துடைத்தெடுக்க வேண்டும். மூன்றாவது அவ்வாறே கால்களில் கீழிருந்து தொடையின் உள்பகுதியை நோக்கி பொறுமையாக துடைக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் துணியையும், தண்ணீரின் வெப்பநிலையும் கண்காணித்து ஒத்தடத்திற்கு மாற்று துணியையும், வேறு சுத்தமான தண்ணீரையும் மாற்றிக் கொள்வது நல்லது. இறுதியாக நான்காவது பகுதியாக வயிறு மற்றும் முதுகுப் பகுதியை துடைத்தெடுக்கலாம். ஒவ்வொரு பகுதிக்கும் ஐந்து நிமிடங்களென உடம்பு முழுவதும் துடைத்தெடுக்க குறைந்தபட்சம் இருபது நிமிடங்கள் ஆகும்.

இவ்வாறு காய்ச்சல் குறையாத பட்சத்தில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறையும் உடம்பின் சூடானது 99.6க்குள் இருக்குமாறு துடைத்தெடுக்கலாம்.  பிள்ளைகளின் உடம்பினை சுத்தமாக காய்ச்சலே இல்லாதவாறு துடைத்து எடுக்க வேண்டும் என்கிற அவசியமில்லை என்பதை பெற்றோர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் உடம்பு கொஞ்சமாவது வெதுவெதுப்பாக இருப்பதுதான் நல்லது. உடம்பை முற்றிலும் குளிர வைத்துவிட்டால் அதிலும் ஆபத்து இருக்கிறது. அதனால் தான் ஒத்தடத்திற்கு வெதுவெதுப்பான தண்ணீரை பயன்படுத்தச் சொல்கிறார்கள். ஒத்தடத்தை தொடர்ந்து அதிக நேரம் கொடுத்துக் கொண்டிருக்கவும் கூடாது, அதேசம யம் வேகவேகமாக தொட்டாச்சிணுங்கி போல  தொட்டவுடன் எடுத்துவிடவும் கூடாது. இரண்டு மணி  நேரத்திற்கொருமுறை ஒத்தடம் கொடுக்கையில் உடம்பின் வெப்பநிலையை பரிசோதித்தும், குழந்தைக்கு எப்படி இருக்கிறது என்ற கேள்வியைக் கேட்டும்தான் தொடரவே வேண்டும்.

குழந்தைகளை இவ்வாறு ஈரத்துணியை வைத்து ஒத்தி எடுத்து அவர்கள் கொஞ்சம் தெளிவடைந்தவுடன் குடிப்பதற்கு கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீர், இளநீர், பழச்சாறு, கஞ்சி, காய்கறி சூப், நிலவேம்பு கசாயம், சுக்கு-மிளகு-திப்பிலி இட்ட ஏதேனும் ஓர் கசாயத்தை அருந்தச் சொல்லலாம். தேவைப்பட்டால் குழந்தைகளை சிறிது ஓய்வு எடுக்க வைத்துவிட்டு மருத்துவமனைக்கு அழைத்து வரலாம். இதனால் உடலில் ஒரேயடியாக காய்ச்சல் அதிகமாகி குழந்தைகளுக்கு தலைவலி, மயக்கம், வலிப்பு, மந்த நிலை என ஆபத்தான நிலையை எட்டாதவாறு நாம் தடுக்க இயலும். ஆகவே அம்மாக்களே, இனிமேல் குழந்தைகளை மருத்துவமனைக்கு வரும்போது கைகளில் அவர்கள் குடிப்பதற்காக குடிதண்ணீரும், அப்படியே மருத்துவரை சந்திக்க காத்திருக்கிற நேரத்தில் ஒத்தடம் கொடுக்க காட்டன் துணிகளையும், அதனுடன் கூடவே தாங்கள் பரிசோதித்த தெர்மாமீட்டர் அளவு குறித்த நோட்டையும் எடுத்துக் கொண்டு வாருங்கள். தாங்களாகவே பெட்டிக் கடைகளில் மருந்து மாத்திரையென போட்டுக் கொண்டு தவறான சிகிச்சையால் ஆபத்தை விலைக்கு வாங்குவதைவிட வீட்டிலேயே தண்ணீர் ஒத்தடம் செய்வது ஒரு சுலபமான வழிதானே.

-டாக்டர் இடங்கர் பாவலன் idangarpavalan@gmail.com

;