health-and-wellness

img

காய்ச்சலும் சில கதாபாத்திரங்களும்

ஒன்றுக்குமே ஒப்பேறாத விசயத்திற்காக அம்மாக்கள் அதற்கான விலையைத் தருவதற்கு தயாராகி விடுகிறார்கள். உடம்பில் தொடர்ச்சியாக வெப்பம் வியர்வை வழியே வெளியேற்றப்படுவதால் செல்களிலுள்ள நீர்ச்சத்துகளும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கின்றன. இதனால் இரத்தத்திலும் நீர்ச்சத்து குறைந்து குறைவான இரத்த அழுத்தத்திற்கு அவர்கள் செல்வதற்கான நிறைய வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது. இப்படி குறைவான இரத்த அழுத்தத்தோடு குழாய்களின் வழியே இரத்தம் செல்லும்போது அவை செல்ல வேண்டிய செல்களுக்கு சரியான நேரத்திற்குச் சென்று சேர முடிவதில்லை. இதன் காரணமாக மூளை நாடித் துடிப்பை வேகமடையத் செய்து இரத்த ஓட்டத்தை துரிதப்படுத்துகிறது. இந்த சமயத்தில் அம்மாவை மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்த்தால் இரத்த அழுத்தம் குறைவாகவும், நாடித்துடிப்பு வேகமாகவும், நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டும் இருக்கும். இவையெல்லாமே வெப்பச் சலனத்தினால் வந்த விளைவுதான் என்பதை அம்மா, அப்பா இருவருமே புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

குழந்தைகள் வியர்வையை சுவைத்துப் பார்த்து உப்புக்கரிப்பதாக சொல்லுவார்கள். அதற்கு உடம்பிலிருந்து எப்போது நீர் வெளியேறினாலும் அதனோடு சோடியம், பொட்டாசியம் போன்ற தசைகள் இயங்குவதற்குத் தேவையான அத்தியாவசிய உப்புச் சத்துக்களும் வெளியேறுவதே காரணம். நீண்ட நேரமாக வியிர்த்துப் போன அம்மாவுக்குமே அத்தியாவசிய உப்புச் சத்துகள் வெளியேறி அவை குறைபட்டுப் போவதால் தசைகள் சரிவர இயங்க முடியாத நிலைக்குச் சென்று ஆங்காங்கே தசைப்பிடிப்பு ஏற்படுகிறது. அதனால்தான் அம்மாக்கள் அவ்வப்போது இடுப்பு, முதுகு, கால்கள் என இறுக்கிப் பிடித்து வலிக்கிறது என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். 

இப்படி தொடர்ச்சியாக வெளியேற்றப்படுகிற நீர்ச்சத்து மற்றும் உப்புச்சத்தால் உடல் வற்றிப் போய் தலை வலிக்க ஆரம்பிக்கிறது. அப்படியே மெல்ல மெல்ல தலை சுற்றல், குமட்டல், வாந்தி, மயக்கம், சில சமயங்களில் நினைவு இழத்தல் என்று ஆளைப் பிடித்து கீழே தள்ள ஆரம்பிக்கும்.  தோலில் வியர்வை வழியே வெப்பத்தை வெளியேற்றுகிற அதே சமயத்தில் மூச்சுக்காற்றின் வழியேவும் ஹைப்போதலாமஸ் வெப்பத்தை வெளியேற்ற ஆரம்பிக்கும். அதாவது மூச்சை உள்ளிழுக்கும் போது ஆக்ஸிஜனையும், வெளியேற்றும்போது கார்பன் டை ஆக்ஸைடையும் இரத்தக்குழாய்கள், காற்றுப் பைகளின் வழியேதான் சுவாசித்து பரிமாறிக் கொள்கின்றன. ஆக, வேகமாக அம்மாவை சுவாசிக்க வைப்பதன் மூலம் இரத்தத்திலிருந்து மூச்சுக் காற்றின் வழியே வெப்பத்தை மூளை கடத்த வைக்கிறது.

கிச்சனில் நீண்ட நேரம் இருக்கிற அம்மாக்களுக்கு இப்படி ஏதாவதொரு அறிகுறிகள் தென்பட்டிருந்தாலும் ஏதேனும் சாப்பாட்டை குறை சொல்லிவிட்டால் என்கிற மனப்போராட்டத்தில் அவர்கள் அதையெல்லாம் கவனிப்பதில்லை. அம்மாக்கள் என்னதான் சமைப்பதிலே தீவிரமாக இருந்தாலும் ஹைப்போதலாமஸ் அவர்களை அவ்வளவு எளிதில் ஆபத்தில் சிக்கவிடுவதில்லை. ஆரம்பத்திலிருந்தே, உடல் சுடுகிறது கொஞ்சம் கிச்சனை விட்டு வெளியே சென்றுவிட்டு வா என்று அன்பு கட்டளையிடுகிறது. உடலில் சோர்வை உண்டாக்கி போய் படுத்து ஓய்வெடுக்கச் சொல்கிறது. நீர்ச் சத்து, உப்புச் சத்து இழப்பை ஈடுகட்ட தாகத்தை வரவழைத்து தண்ணீர், பழச்சாறு என அருந்தச் செய்கிறது.. அப்படியும் ஹைப்போதலாமஸ் சொல்வதைக் கேட்காவிட்டாதான் வினையே வருகிறது.

சாப்பாடு பரிமாறும்போது நீர்ச்சத்து இழப்பின் காரணமாக பாதிக்கப்பட்ட மூளையின் செயல்பாட்டினால் மனம் குழம்பிப்போய் அனைவரிடமும் எரிந்து எரிந்து விழ வேண்டியிருக்கிறது. கணவன் சாப்பிட்ட பின்பு மனைவி சாப்பிட வேண்டும் என்று சாஸ்திரங்கள் பொய் புரட்டுகளைச் சொன்னாலும் பொதுவாகவே அவர்களுக்கு உடல் வெப்பத்தினால் பசியெடுப்பதில்லை. ஏதோ சம்பிரதாயத்திற்குச் சாப்பிடுகிறார்கள். இரவில் தூக்கம் வராமல் தவிக்கிறார்கள். மனைவிமார்கள் ஒன்றுமே இல்லாத விசயத்தை ஊதி ஊதி பெரிதாக்குவார்கள் என்று கணவர்கள் சொல்வதைப்போல, சாதாரணமாகச் சரிசெய்ய வேண்டிய விசயத்தை ஊதி பெரிதாக்கி உடலையும் அம்மாக்கள் பாழாக்கிக்தான் கொள்கிறார்கள். சரி, அடுத்ததாக அப்பாவிற்கு வருவோம். அறையில் 96°F வெப்பநிலையில் ஏ.சி யை வைத்துவிட்டு சாவகாசமாக வேலை பார்க்கிற அப்பாக்களை நினைத்துப் பாருங்கள். ஆரம்பத்தில் பெரிய பெரிய இயந்திரங்கள் எந்நேரமும் ஓடிக் கொண்டே இருப்பதால் அவற்றிலிருந்து வெளியேறுகிற வெப்பத்தைத் தணிக்க அவற்றை ஏ.சி இருக்கிற அறையிலே வைத்திருப்பார்கள். ஆனால் காலப்போக்கில் இயந்திரங்கள் கூடவே பழகிப்பழகி மனிதனுக்கும் ஏ.சி அவசியமான ஒன்றாகிவிட்டது.

ஒருவேளை ஏ.சியை யாரேனும் இன்னும் குறைத்துவிட்டால் தோலின் மூலம் குளிர் நரம்புகள் தூண்டப்பட்டு ஹைப்போதலாமஸூம் உடல் குளிர்வதை உணர்ந்து கொண்டு அதனைச் சரிகட்ட உடலில் வெப்பத்தை உற்பத்தி செய்யவும், உடலிலே உருவான வெப்பத்தை வெளியேறாமல் தக்க வைக்கவுமான உத்தரவை பிறப்பிக்கிறது. இங்கேயும் சுற்றுப்புற வெப்பநிலை குறைவு காரணமாகத்தான் உடலில் மாற்றங்கள் ஏற்படுகிறதே தவிர ஹைப்போதலாமஸின் உள் மைய வெப்பநிலையில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. இதன் விளைவாகத்தான் உடலில் சிலிர்ப்பு மற்றும் நடுக்கத்தை ஏற்படுத்தி வெப்பத்தை உற்பத்தி செய்வதும், தோலிற்கு செல்கிற இரத்தஓட்டத்தை மெதுவாக்கி வெப்பத்தை சேமிப்பதுமான வேலைகள் நடைபெறுகின்றன. மேலும் அப்பாவும் அதிகமாக குளிர்வதாக தெரிந்தால் டீ சாப்பிட்டு வரலாம் என்று வெளியே செல்வது, கைகளை தேய்த்துக் கொண்டு கன்னத்தில் ஒத்தடம் வைத்துக் கொள்வது என்ற மனநிலையோடு அதற்கேற்ப இயங்கத் துவங்குகிறார். அம்மாவிற்கும் அப்பாவிற்கும் நேர்ந்தவை எல்லாம் சுற்றுப்புறத்தின் வெப்பநிலை மாறுபாட்டால் நடந்தவைகள்தான். இருவருமே அத்தகைய சூடான அல்லது குளிரான இடத்தை விட்டு விலகி வந்தாலே இத்தகைய பிரச்சனைகளிலிருந்து அவர்கள் விடுபட்டுவிட முடியும். தாங்களேகூட குளிருக்கோ அல்லது உடல் சூடுக்கோ ஏற்றவாறு தங்களது பழக்க வழக்கங்களை மாற்றி பிரச்சனையைச் சரிசெய்து கொள்ள முடியும்.

ஆனால் சுகாதாரமில்லாத அரசுப்பள்ளியைச் சுற்றி தேங்கியிருக்கிற நல்ல தண்ணீரிலிருந்து உற்பத்தியாகிற ஏடிஸ் கொசுக்கள் மூலம் ஆர்போ வைரஸ் தொற்று வந்த அவர்களது மகளைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். உடலின் இரத்ததிற்குள் நுழைந்த வைரஸ் கிருமியை எதிர்த்து உடல் எதிர்ப்பு அணுக்கள் சண்டையிட வேண்டும். அந்த சண்டையின் ஒரு பகுதியாக ஹைப்போதலாமஸ் ஆக்ரோஷம் கொண்டு வெகுண்டெழுந்து 98.6°F லிருந்து கிருமியைக் கொல்வதற்கென்று ஒரு புதிய உள் மைய வெப்பநிலையை 100°F என்றோ 105°F என்றோ செட் செய்ய வேண்டும். அதன் விளைவாக முதலில் உடல் குளிர்வதைப் போன்ற தோற்றத்தை உண்டாக்கி வெப்பத்தை உற்பத்தி செய்வதும், அதன் தொடர்ச்சியாக உடல் சூடேறி காய்ச்சலடிப்பதும் நடக்கிறது. ஆக, நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலையின் விளைவாக உடல் காய்ச்சல் அடித்தாலோ, குளிரடித்தாலோ அத்தகைய சூழலிலிருந்து விலகுவதன் மூலமே அதைச் சரிசெய்து கொள்ளலாம் என்பதையும், நோய்க்கிருமித் தொற்று மூலமாக காய்ச்சல் வந்தால் அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்வதில் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொள்வதற்கு நமக்கு ஒரு பாதிக்கப்பட்ட குடும்பமே வந்து வாக்குமூலம் அளிக்க வேண்டியிருக்கிறது.