headlines

img

மசால் தோசையா மசோதாக்கள்?

இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள மோடி அரசு அனைத்து மக்கள்விரோத,  மசோதாக்களையும் ஒரே  மூச்சில் நிறைவேற்றி விட வேண்டும் என்று  வெறிபிடித்ததுபோல செயல்பட்டு வருகிறது. நாடாளுமன்ற ஜன நாயகத்தை காலில் போட்டு மிதித்து அனைத்து மசோதாக்களையும் அவசர அவசரமாக சட்ட மாக்குகிறது. பெரும்பாலான மசோதாக்கள் மாநில அரசுகளின் உரிமைகளைப்பறித்து கூட்டாட்சிக்கு குழி பறிப்பதாக அமைந்துள்ளன. தேசிய புலனாய்வு முகமை சட்டத் திருத்த மசோதா, தகவல் அறியும் உரிமை சட்டத்திருத்த மசோதா, மோட்டார் வாகன சட்டத்திருத்த  மசோதா, முத்தலாக் தடை மசோதா,  தொழிலாளர் சட்ட திருத்த மசோதா,  மாநிலங்களுக்கிடையி லான நதிநீர் தாவாக்களை விசாரிக்க ஒரே ஆணையம் அமைக்கும் மசோதா, சட்டவிரோத தடைச்சட்ட திருத்த மசோதா என அடுத்தடுத்து மசோதாக்களை நிறைவேற்றுவதில் அதீத ஆர்வம் காட்டுகிறது மோடி அரசு.

17வது மக்களவை அமைக்கப்பட்ட பிறகு,  நாடாளுமன்ற நிலைக்குழுக்கள், தெரிவுக் குழுக்கள் போன்றவற்றை அமைக்காமலே, எந்தவொரு மசோதா மீதும் முழுமையான முறை யான விவாதம் நடத்தப்படாமலே மசோதாக்கள் அவசரக் கோலத்தில் அள்ளித்தெளித்ததுபோல நிலுவையில் இருந்த பல மசோதாக்கள் சட்டமாக்கப்படுகின்றன.  விவாதத்திற்கு வரும் மசோதாக்கள் குறித்து உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே தகவல் சொல்லாமல் மசோதாக்கள்  தாக்கல் செய்யப் படுவதாகவும், இதனால் விவாதத்தில் எதிர்க்கட்சி கள் தங்கள் கருத்தை முன்வைப்பதற்கு உரிய வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்றும் எதிர்க்கட்சி கள் ஒருசேர குற்றம்சாட்டியுள்ளன. 

அவையில் தாக்கல் செய்யப்படுவதற்கான மசோதாக்கள் பட்டியலை கொடுத்து விட்டு இரவில் திருத்தப்பட்ட  பட்டியல் கொண்டு வருவது என்பது  நடைமுறையாகிவிட்டது என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளன.  நாட்டு நலனையும் மக்கள் நலனையும் பாதிக்கும் மசோதாக்கள் மீது உரிய விவாதம் நடப்பதை தடுக்கும் வகையிலேயே மோடி  அரசு செயல்படுகிறது. பல மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தேர்வுக்குழுக்கு அனுப்ப வேண்டும் என வலி யுறுத்தினாலும் அதைப் பொருட்படுத்தாமல் நாடாளுமன்றத்தில் தமக்குள்ள பெரும் பான்மையை தவறாகப் பயன்படுத்தி மசோதாக் களை நிறைவேற்றுகிறது மோடி அரசு. 

மத்திய அரசின் இந்த அராஜகமான போக்கை எதிர்த்தும் பெரும்பாலான சட்டத் திருத்தங்கள் மூலம் தமிழகத்தின் உரிமை பறிக்கப்படுவதை எதிர்த்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆகஸ்ட் 6ந்தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த கண்டனக்குரலோடு தமிழகத்தின் குரல் முழுமையாக இணைவது  எதிர்காலத்தை பாதுகாக்க அவசியமான ஒன்றாகும்.

;