headlines

img

யாருடைய நலனுக்காக? (வேளாண் திருத்த சட்டம்)

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் துறை திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டுமென்று தலைநகர் தில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தக்கூட தொடர்ந்து மறுத்துவரும் பிரதமர் நரேந்திர மோடி இந்த சட்டங்களை நியாயப்படுத்தி இந்திய பெருமுதலாளிகள் நடத்தும் கூட்டங்களில் தொடர்ந்து பேசி வருகிறார்.

இந்திய வர்த்தக அமைப்புகளின் கூட்டமைப்பான அசோசெம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், வேளாண்துறையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு மேற்கொண்ட சீர்திருத்தங்களால் விவசாயிகள் பலனடைந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். சீர்திருத்தம் என்ற பெயரில் இந்த அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை தங்களது வாழ்வை அழித்துவிடும் என்ற பேரச்சத்தின் காரணமாகவே விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இந்தச் சட்டத்தை விவசாயிகள் யாரும் ஆதரிக்கவில்லை. மாறாக கார்ப்பரேட் முதலாளிகளும், பெரு முதலாளிகளும்தான் கைதட்டி வரவேற்கின்றனர்.தொழிலாளர் நலச் சட்டங்கள் யாருடைய நலனுக்காக கொண்டுவரப்பட்டன என்பதையும் பிரதமர் மோடி தன்னுடைய உரையில் குறிப்பிட்டுள்ளார். தொழிலாளர் நலச்சட்டங்கள் திருத்தப்பட்டதன் காரணமாக 8 மணி நேர வேலை, நிரந்தரப் பணி வாய்ப்பு மற்றும் தொழிலாளர் களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. ஆனால்இந்தச் சீர்திருத்தங்கள் காரணமாக இந்தியாவில்முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன என்று பிரதமர் கூறி யுள்ளார்.

பாஜக ஆட்சியில் பெரு நிறுவனங்களுக்கான வரி வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் வெளிப்படையாக கூறியுள்ளார். ஜிஎஸ்டி வரி என்ற பெயரில் மக்கள் கசக்கிப்பிழியப்படுகிறார்கள். புதிய புதிய வகைமை களைக் கண்டுபிடித்து வரி வசூலிக்கப்படுகிறது. ஆனால் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், வெளிநாட்டு முதலாளிகளுக்கும் ஏராளமான வரிச்சலுகைகள் அளிக்கப்படுகின்றன. பெரும் பகுதி மக்களை வதைத்து குறிப்பிட்ட சில முதலாளி களுக்கு உதவுவதுதான் இவர் கூறும் சீர்திருத்தம்என்பதன் சித்தாந்தம்.பொதுத்துறை வங்கிகள் பலப்படுத்தப்படுவ தாக பிரதமர் கூறுகிறார். ஆனால் பொதுத்துறை வங்கிகள் கொஞ்சம் கொஞ்சமாக தனியார்மய மாக்கப்பட்டு வருகின்றன. இதைத்தான் பலப்படுத்துவதாக பிரதமர் கூறிக் கொள்கிறார். 

பாதுகாப்புத் துறை சார் உற்பத்தி உட்பட அனைத்தும் தனியாருக்கு தரப்படும் நிலையில் இது மேலும் தொடரும் என்கிறார் பிரதமர். இஸ்ரோ உட்பட ஆராய்ச்சி நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்படும் நிலையில், அமெரிக்காவில் ஆய்வு நடவடிக்கைகளுக்கு 70சதவீத பங்களிப்பு தனியார் மூலம் கிடைக்கிறது என்கிறார். இந்தியாவிலும் அது நடக்க வேண்டும் என்பதே அவர் விருப்பம். ஆனால் ஆராய்ச்சியின் பலன்கள் யாருக்குப் போய்ச் சேருகின்றன என்பதே முக்கியமான கேள்வி. மொத்தத்தில் முதலாளிகளைத் தவிர வேறு யாரிடமும் பேசுவதில்லை என பிரதமர் முடி வெடுத்துவிட்டதையே அவரது செயல்பாடுகள் காட்டுகின்றன.
 

;