headlines

img

கூட்டுக் கொள்ளை...! 

பொதுத்துறை வங்கிகளில் உள்ள மக்களின் சேமிப்பு பணம் கார்ப்பரேட் நிறுவனங்களால் தங்குதடையின்றி சூறையாடப்பட்டு வருகிறது. மோடிஅரசின் ஆதரவுடன் நடைபெறும் இந்த மோசடிதற்போது ரூ. 2.05 லட்சம் கோடியை எட்டியிருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கியின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.நாடாளுமன்ற தேர்தலின் போது தன்னைஒரு பாதுகாவலர் என தானே அறிவித்துக் கொண்டுமக்களிடம் நரேந்திர மோடி வாக்குகேட்டார். ஆனால் கடந்த 5 ஆண்டுகள் பிரதமர் மோடியாருக்கு பாதுகாவலராக இருந்தார் என்பதை தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் புள்ளிவிபரங்கள் வெளிச்சமிட்டு காட்டியிருக்கின்றன. மோடி ஆட்சி காலத்தில்தான் வங்கி மோசடிகள் எப்போதுமில்லாத அளவு வேகமாக அதிகரித்துவருவதாக ஆர்பிஐ புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2018 -19ம் நிதியாண்டில் மட்டும் மோசடிகளின் அளவு 73 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. அதாவது 2017 -18ம் ஆண்டில் ரூ.41 ஆயிரத்து 167 கோடியாக இருந்த மோசடியின் அளவு அதற்கடுத்த 2018-19ம் நிதியாண்டில் 71 ஆயிரத்து 500 கோடியாக உயர்ந்திருக்கிறது. இங்கு கேள்வி என்னவென்றால் மோடியின் டிஜிட்டல் இந்தியாவில் யாரும் மோசடி செய்ய முடியாது என பாஜகவினர் வாதிட்டு வந்தனர். ஆனால் டிஜிட்டல் இந்தியா திட்டம் வந்த பின்னர்தான் மோசடியின் அளவும் பன்மடங்கு உயர்ந்திருக்கின்றது என இந்திய ரிசர்வ் வங்கி புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இப்போது தெரிகிறதா மோடி யாருக்கு காவலராக இருந்திருக்கிறார் என்று ?90 சதவிகிதம் கார்ப்பரேட் நிறுவனங்கள்தான்இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கின்றன.

இந்த நிறுவனங்கள் தொடர்ந்து பல்வேறு புதிய நிறுவனங்களையும் துவங்கி நடத்திக் கொண்டுதான் வருகின்றன. விஜய்மல்லையா, நீரவ் மோடி போன்றவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று சொகுசாக வாழ்கின்றனர். இந்தமோசடி பேர்வழிகளை தண்டிக்கவோ, சொத்துகளை பறிமுதல் செய்யவோ எந்த ஒரு உருப்படியான நடவடிக்கையும் இதுவரை மோடி அரசு எடுக்கவில்லை. ருச்சி சோயா என்ற நிறுவனம், வங்கிகளில் வாங்கிய கடன் ரூ. 9300 கோடியை கட்ட முடியாமல்திவாலானது. இதன் காரணமாக கடன் கொடுத்த வங்கிகளுக்கு வெறும் 2435 கோடி மட்டுமே திரும்பகிடைக்கும். தற்போது திவாலான ருச்சி சோயா நிறுவனத்தை வாங்க மோடியின் நண்பரும் கார்ப்பரேட் சாமியாருமான பாபாராம்தேவ் முடிவு செய்திருக்கிறார். அதற்கு மீண்டும் வங்கிகளிடம் பாபாராம்தேவ் ரூ. 3700 கோடி கடன் கேட்டிருக்கிறார். அதாவது 2435 கோடியை பெற ரூ. 3700 கோடி மீண்டும் வங்கிகள் கடன் கொடுக்க இருக்கின்றன. இந்நிலை தொடர்ந்தால் பொதுத்துறை வங்கிகள் மீதான மக்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகும். அதன் மூலம் தனியார் வங்கிகளை நிலை நிறுத்தலாம் என மத்தியஅரசு நினைக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது. காரணம் மோசடி நிறுவனங்களின் பெயர்களைக்கூட வெளியிட மோடி அரசு மறுப்பதும், மறுபுறம் அந்த நிறுவனங்களை பாதுகாக்க துடிப்பதும் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

;