headlines

img

அணு ஆயுதம் நிராகரிப்போம்...

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் (என்பிடி)உருவானதன் ஐம்பதாம் ஆண்டு இது. இந்தஒப்பந்தத்தை இன்னும் வலுப்படுத்த வேண்டியதருணத்தில், இந்த ஒப்பந்தமே அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் சூழ்ச்சிகளால்காலாவதியாகிவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இது தொடர்பாக அக்டோபர் 2 அன்று  ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் உயர்மட்ட கூட்டம் ஒன்று நடந்திருக்கிறது. அந்த கூட்டத்தில் ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியோ குடிரெஸ் ஆற்றிய உரை, உலகைச் சூழ்ந்துள்ள அணு ஆயுத அச்சுறுத்தலை மேலும்எச்சரிக்கையுடன் சுட்டிக்காட்டுகிறது.

அணு ஆயுத நாடுகளின் பெயர்களை  அவர்குறிப்பிடவில்லை என்ற போதிலும், அணு ஆயுதநாடுகளான அமெரிக்காவுக்கும், ரஷ்யாவிற்கும் இடையில் தற்போது அமலில் உள்ள ‘வெகு ரகபேரழிவு ஆயுதங்கள் குறைப்பு உடன்பாடு’ அடுத்தாண்டு முடிவுக்கு வருவதை சுட்டிக்காட்டி,மீண்டும் ஐந்தாண்டு காலத்திற்கு எவ்வித தாமதமும் இல்லாமல் இந்த உடன்பாட்டை இருநாடுகளும் புதுப்பித்துக் கொள்ள இப்போதே பேச்சுவார்த்தை துவக்க வேண்டுமென்று வலியுறுத்தியிருக்கிறார். 

அத்துடன், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தையும் எவ்வித தாமதமுமின்றி ஐ.நா. உறுப்பினர்களாக உள்ள 191 நாடுகளும் மீண்டும் உறுதிப்படுத்துவதற்கான தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டுமென்று அழைப்பு விடுத்திருக்கிறார்.முக்கியத்துவம் மிகுந்த இந்த கூட்டத்தில் 103 நாடுகளது பிரதிநிதிகள் தலா 2 நிமிடம் பேசுவதற்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. 79 பேர் தான் பேசியிருந்தனர். நேரம் முடிந்ததால் மற்றவர்களது உரை இணையத்தில் வெளியிடப்படும் என்று கூறி கூட்டம் முடிக்கப்பட்டுவிட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால், பெரிய அணு சக்தி நாடுகளான ரஷ்யாவும், சீனாவும் இதில் பங்கேற்றிருந்தும் கூட பேசுவதற்கு அழைக்கப்படவில்லை. அதே வேளை, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல்  ஆகியநாடுகள் இக்கூட்டத்தையே புறக்கணித்துவிட்டன. இந்தியாவும், பாகிஸ்தானும் பங்கேற்றிருந்தன; இந்திய பிரதிநிதி மட்டும் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கப் பெற்றார். முக்கியத்துவம் வாய்ந்த இக் கூட்டத்தை ஐ.நா. சபை திட்டமிட்ட முறையில் நடத்தியிருக்க வேண்டும்.

அணு ஆயுத பரவல் தடை உடன்பாட்டிலிருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா வெளியேறிவிட்டது. அதன் விளைவாக, உலகமக்களை அழித்தொழிக்கும் ஆபத்து நிறைந்த அணு ஆயுத போட்டியை அமெரிக்க ஏகாதிபத்தியம் முடிவுக்கு கொண்டு வரவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, ஆயுதக் குவிப்பை தொடர்ந்து அரங்கேற்றுகிறது; தனது புவி அரசியல் சூழ்ச்சிகளை அரங்கேற்றுவதற்காக உலகின் அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து ராணுவ குவிப்பிலும் அச்சுறுத்தல்களிலும், இந்தியா உள்ளிட்ட நாடுகளை தனது ராணுவ சூழ்ச்சி வலைக்குள் இழுப்பதையும் மேற்கொண்டிருக்கிறது. இந்த சூழ்ச்சிகளை புரிந்துகொண்டு, உலக நாடுகள் தங்களது மக்களை பாதுகாக்க அணு ஆயுத பரவல் தடுப்பு பேச்சுவார்த்தைகள் மற்றும் உடன்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். 

;