headlines

img

மூன்று பேச்சுக்கள்

உலக அளவில் மூன்று மிக முக்கியமான அரசியல்பதற்றங்கள் தொடர்பான பேச்சுவார்த்தை குறித்தநகர்வுகள் இந்த வார துவக்கத்தில் தொடங்கியுள்ளன. ஒன்று, வெனிசுலாவில் ஆளும் சோசலிஸ்ட்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையில் எழுந்துள்ளபிரச்சனை. இரண்டாவது, ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் எழுந்துள்ள பிரச்சனை. மூன்றாவது, வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உள்ள பிரச்சனை.இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், இந்த மூன்று பெரும் பிரச்சனைகளும்,அதையொட்டிய பதற்றங்களும் வன்முறைகளும்போர்ச் சூழலும் முழுக்க முழுக்க அமெரிக்காவால் உருவாக்கப்பட்டவை தானேயன்றி, வெனிசுலாவாலோ, ஈரானாலோ, வடகொரியாவாலோ உருவாக்கப்பட்ட பிரச்சனை அல்ல.வெனிசுலாவில் தனது கைக்கூலியான ஜூவான்குவாய்டோ என்பவரை ஏவி, அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜனநாயகப்பூர்வமாக ஆட்சி நடத்திவரும் சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி மதுரோவின் அரசை எப்படியேனும் வீழ்த்தி அந்நாட்டின் எண்ணெய் வளங்கள் அனைத்தையும் தனது கைக்குள் கொண்டு வரும் பொருட்டு, மிகப் பெரிய வன்முறை அராஜகத்தை டிரம்ப் தலைமையிலான அமெரிக்க ஏகாதிபத்தியம் ஏவிவிட்டுள்ளது. இப் போது அதன் உச்சக்கட்டமாக மதுரோ அரசுக்கும், குவாய்டோ தலைமையிலான எதிர்க்கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையே நார்வே நாட்டில் பேச்சுவார்த்தை என்று கூறி, அதன் முடிவில் மதுரோவை வீழ்த்துவதற்கான சூழ்ச்சிகளை அரங்கேற்றி கொண்டிருக்கிறார் டிரம்ப்.

ஈரானுடன் 2015 ஆம் ஆண்டு அமெரிக்கா செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை, டிரம்ப் ஆட்சிக்குவந்த பிறகு அராஜகமாக, தானடித்த மூப்பாக ரத்துசெய்தார். இதைத் தொடர்ந்து ஈரான் மீது ஏராளமானதடைகளை அவரது நிர்வாகம் பிறப்பித்தது. ஈரானின்எண்ணெய் வர்த்தகத்தை முடக்குவதும், அதைதனது ஆளுகையின் கீழ் கொண்டு வருவதுமே அமெரிக்காவின் அடிப்படை நோக்கம். இப்போது இதன் அடுத்த கட்டமாக ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே, தற்சமயம் இராக்கில் ஆட்சி பொறுப்பில் உள்ள அமெரிக்க கைப்பாவை அரசு சமரசப் பேச்சுநடத்துவது என்று அமெரிக்க தரப்பிலிருந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை அமெரிக்காவுக்கு சாதகமாகத்தான் நடைபெறும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.சோசலிச வடகொரியாவுக்கு எதிராக 60 ஆண்டுகளுக்கும் மேலாக வன்மத்தையும், பகைமையையும் இடைவிடாமல் ஏவி வரும் அமெரிக்கநிர்வாகம், வடகொரியா அணுசக்தி வல்லமையில் முன்னேறி வருவதன் பின்னணியில் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது. வடகொரிய ஜனாதிபதி கிம்முடன் சிங்கப்பூரில் பேசிய டொனால்டு டிரம்ப்,அங்கு ஒப்புக்கொண்டபடி வடகொரியா மீதான தடைகளை தளர்த்தாமல், மீண்டும் வியட்நாமில் பேசுவதற்கு வந்தார். அப்போதும் தடைகளை தளர்த்த அவர் ஒப்புக் கொள்ளாததால் பேச்சு முறிந்தது. தற்போது, வடகொரியா தனது சோதனைகளை தொடரும் நிலையில் மீண்டும் பேசலாம் என டிரம்ப் ஜாடைகாட்டியுள்ளார். ஆனால் எந்தப் பேச்சுவார்த்தையையும் எப்போதும் மதித்தது இல்லை அமெரிக்கா. அதுவே ஏகாதிபத்தியத்தின் குணம்.

;