headlines

img

அணுக்கழிவு மையம் ஆபத்துக்கு அச்சாரம் 

அணுமின் உலைகளில் பயன்படுத்தப்பட்ட யுரேனியம் உள்ளிட்ட அணுசக்திக் கழிவுகளை பாதுகாப்பாக வெகுதொலைவுக்குக் கொண்டுசென்று பராமரிக்க வேண்டியது அவசியமாகும். இதற்காக தற்காலிக அணுக்கழிவு மையமும் பூமிக்கு அடியில் அதிக ஆழத்தில் நிரந்தர அணுக்கழிவு சேமிப்பு மையமும் அமைப்பது தற்போதுஉலகம் முழுவதும் பின்பற்றப்படும் நடைமுறையாக இருக்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவு மையத்தை இதுவரை ஏன் ஏற்படுத்தவில்லை என்று உச்சநீதிமன்றம் கேட்டபோது, அந்த அணு உலைகள் மென்நீரில் இயங்கக்கூடியவை என்பதால் அதற்கான தொழில்நுட்பம் மிகவும்சிக்கலானது என்று மத்திய அரசு பதில் அளித்தது. முழுமையான தொழில்நுட்பமும் இல்லாமல், தெளிவான இலக்கும் இல்லாமல் அமைக்கப்படும் அணுக்கழிவு மையம் எந்த அளவுக்கு பாதுகாப்பானதாக இருக்கப்போகிறதோ? நாட்டில் நிரந்தர அணுக்கழிவு மையத்தை கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலில் உள்ளசுரங்கங்களில் அமைக்கலாம் என 2012 ஆம் ஆண்டுதீர்மானிக்கப்பட்டது. ஆனால், அதற்கு மிகக்கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்த மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது. பொதுவாக அணுக் கழிவுகள், அணு உலைக்குக் கீழே உள்ள குட்டையில் சேமிக்கப்படும். அவ்வாறு சேமிக்கப்படும் அணுக் கழிவுகளைஎட்டு ஆண்டுகளுக்கு மட்டுமே சேமிக்க முடியும்.எனவே, அணுஉலையில் உருவாகும் புளூட்டோனியம் கழிவு, உலைக்கு வெளியே எடுக்கப்பட்டு கூடங்குளம் வளாகத்திற்குள்ளாகவே பாதுகாப்பாக வைக்கப்படும் என்று அணுசக்திக் கழகம் கூறுகிறது.

இந்த மையத்தில் நிரந்தரமாகக் கழிவுகள் சேமித்து வைக்கப்படாது. இது தற்காலிகமான ஓர்அணுக்கழிவு மையமே. ஏனெனில் நிரந்தரமாகச்சேமித்து வைக்க பூமிக்கடியில் பல கி.மீ ஆழத்தில்பள்ளம் தோண்டவேண்டும். தற்காலிகமாக சேமிக்கும் மையத்தில் ஆழம் அதிகமாக இருக்காது. ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால் விளைவுகள் நினைத்துப்பார்க்கமுடியாத அளவிற்கு இருக்கும். கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கப்பட்டால், ஜப்பானில் ஏற்பட்டது போன்ற கதிர்வீச்சு உள்ளிட்ட ஆபத்துகள் தென் தமிழகத்திலும் ஏற்படாது என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை. எந்த தொலைநோக்குப் பார்வையும்இல்லாமல், பாதுகாப்பான தொழில்நுட்பமும் இல்லாமல் பெயரளவில் தற்காலிக அணுக்கழிவு மையம்அமைப்பது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். ஜப்பானின் புகுஷிமா அணு உலைகளேஇதற்கு சரியான உதாரணம். எனவே தற்காலிக அணுக்கழிவு மையத்தைபாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் அமைப்பதையும் அணு உலை பூங்கா என்ற பெயரில் அடுத்தடுத்துகூடங்குளத்தில் ஒரே இடத்தில் அணு உலைகளைஅமைப்பதையும் மத்திய- மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும். தற்காலிக மற்றும் நிரந்தர அணுக்கழிவு மையம் அமைப்பதற்குப் பாதுகாப்பான இடம், தொழில்நுட்பம் ஆகியவற்றை இறுதி செய்து, அதற்கான பணிகளை மேற்கொள்ளலாம்.

;