headlines

img

விட்டுவிட முடியாததா?

மத்திய பாஜக அரசும், மாநில அதிமுக அரசும் சென்னை- சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை  அமல்படுத்த வேண்டுமென்பதில் பிடிவாதமாக வும், அடாவடியாகவும் இருக்கின்றன. சென்னை உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்துள்ளது இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்.

இந்த எட்டு வழிச்சாலை திட்டம் இந்தியா வின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியமா னது என்று மத்திய அரசு மட்டுமின்றி மாநில அரசும் கூட கூறுகிறது. தமிழக முதல்வர் நான் ஒரு விவசாயி என்று கூறிக்கொண்டே ஐந்து மாவட்ட விவசாயிகளின் நலன்களை காவு வாங்கும் வகையில் எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறை வேற்றியே தீருவோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்கிறார். 

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இந்த கொரோனா பொது முடக்க காலத்தில் கூட பல்வேறு திட்டங்களை அவை சுற்றுச் சூழலுக்கு எதிராக இருந்த போதிலும் அனு மதித்து ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் தேசிய பசுமை தீர்ப்பாயம் மற்றும் திட்டங்கள் தொடர்பாக முறைப்படி செய்ய வேண்டிய ஆய்வு கள் எதையுமே லட்சியம் செய்யவில்லை. கார்ப்ப ரேட் நிறுவனங்களுக்கு அனுசரணையாகவே மிக மிக அவசரமாக இந்த அனுமதிகள் வழங்கப் பட்டன.

இந்த நிலையிலேயே தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில் சுற்றுச்சூழல், பல்லுயிர் பெருக்கம், விவசாய உற்பத்தி, ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீராதாரம் ஆகியவை பாதிக்கப்படு வதை கவனத்தில் கொள்ளாமலேயே எட்டு வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்தப் போவ தாக தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் தெரிவித்திருப்பது கண்டனத்துக் குரியது.

வளர்ச்சி என்பது நாட்டின் உணவு உற்பத்தி யோடு இணைந்தது இல்லையா? சின்னஞ்சிறிய விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் விளைநிலங்களை அபகரிப்பது, நீதிமன்றத்தின் தடை உத்தரவை மீறுவது ஆகியவை தமிழ கத்தின் வளர்ச்சிக்கு எந்த வகையில் உதவும்? வனப் பகுதிகளையும், நீர்நிலைகளையும் அழிப்பது சுற்றுச்சூழலையும் பல்லுயிர் பெருக் கத்தையும் பாதுகாப்பதற்காகவா? 

வளர்ச்சி என்றால் தமிழகத்தின் கனவுத் திட்ட மான சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய பாஜக அரசு குழிதோண்டி புதைத்துள்ளதே. அதைப்பற்றி தமிழக அரசு ஏன் கவலைப்படவில்லை. அந்தத்  திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு தொழில் வளமும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும், இந்தியாவுக்கு கப்பல் போக்குவரத்து தொழில் மூலம் நிதி வரவும் கிடைக்குமே, அதை ஏன் கைவிட்டு விட்டார்கள்? 

கடலுக்கு அடியில் உள்ளதாகக் கூறப்படும் ராமர் பாலம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று கூறி சேது சமுத்திரத் திட்டத்தை முடக்கியவர்க ளுக்கு உடந்தையாக இருக்கும் தமிழக ஆட்சியா ளர்கள் சேலம்- சென்னை எட்டுவழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் பற்றி கவலைப்படாதது ஏன்?

;